tamilnadu

img

பசியால் வாடும் 80 கோடி மக்களை பாதுகாக்காத மத்திய பாஜக அரசு...

திருவள்ளூர்:
ஊரடங்கு காலத்தில் ஒவ்வொரு நபருக்கும் மாதம் 10 கிலோ அரிசி அல்லது கோதுமையை மத்திய அரசு வழங்க வேண்டும். இந்தியாவில் பசியால் வாடிக்கொண்டிருக்கும் 80 கோடிமக்களை பாதுகாக்கும் ஏற்பாட்டை செய்யாமல்மத்திய அரசு ஊரடங்கை தொடர்ந்து அமல்படுத்துகிறது என்று  சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன் கூறியுள்ளார்.

தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் கோரிக்கைகளை முன்வைத்து இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு), அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் வியாழனன்று (ஜூலை 23) தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கம் துவங்கியது.திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், தண்டலம் அருகே உள்ள காக்கவாக்கம் கிராமத்தில் கோரிக்கைகள் அடங்கியதுண்டு பிரசுரங்களை வழங்கி சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:கொரோனா தொற்று பரவலால் கடந்த 4மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள் ளது. இதனால் ஏழைகளின் வாழ்க்கை தடம்புரண்டுள்ளது. இந்தியாவில் பசியால் வாடிக்கொண்டிருக்கும் 80 கோடி மக்களை பாதுகாக்கும் ஏற்பாட்டை செய்யாமல் மத்திய அரசு ஊரடங்கை தொடர்ந்து அமல்படுத்துகிறது. இதனை சரிசெய்ய ஒரு குடும்பத்திற்கு மாதம் 7500 ரூபாய் வீதம் 6 மாதத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் ஒவ்வொரு நபருக்கும் 10 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கவேண்டும். 

கிராமங்களில் நிறுத்தப்பட்டுள்ள 100 நாள் வேலை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். ஏற்கனவே வேலை செய்தவருக்கு கூலி கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார்கள். அத்தகையோருக்கு காலதாமதம் செய்யாமல்  கூலி வழங்க வேண்டும். பணிநாட்களை 200 நாட்களாக உயர்த்த வேண்டும்.சிறு, குறு விவசாயிகளுக்கு எதிரான 3 அவசரசட்டங்களை ஆட்சியாளர்கள் பிறப்பித்துள்ள னர். அந்த சட்டங்கள் அமலுக்கு வந்தால் விவசாயிகள் மொத்த நிலத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க  வேண்டி வரும்.விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை வர்த்தக சூதாடிகள் கொள்ளையடிப்பார்கள்.இந்த சூழ்நிலையில் பொதுத்துறைகளை தனியாருக்கு விற்கும் முடிவை எடுத்துள்ளனர். இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது. இதை கைவிட வேண்டும். ரயில்வே, விண்வெளி,நிலக்கரி, மின்சாரம் ஆகிய துறைகளை தனியாருக்கு விடுவதை கைவிட வேண்டும்.தொழிலாளர்கள் போராடி பெற்று 150 ஆண்டுகளாக பாதுகாத்து வந்த சட்டங்களை ரத்து செய்கின்றனர். தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் வேலையை மோடி அரசு செய்கிறது. முதலாளிக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் கோடி கூடுதல் லாபம் ஈட்டும் வகையில் மோடி அரசு செயல்படுகிறது. இதற்கெதி ராக அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து போராடுகிறோம்.

கொரோனா மரணங்கள் மறைப்பு
கொரோனா புள்ளி விவரங்களை அரசு மறைப்பதாக குற்றம் சாட்டிய அ.சவுந்தரராசன், கொரோனாவால் ஏற்படும் 7 மரணங்களில் ஒரு மரணத்தை மட்டுமே அரசு அறிவிப்பதாக மருத்துவர்களே புகார் தெரிவிக்கின்றனர். கொரோனா விவகாரத்தில் ஒளிவு மறைவின்றிஅரசு புள்ளி விவரங்களை வெளியிடவேண்டும்.சித்த மருத்துவர் தணிகாசலத்தை கைது செய்யும் ஆட்சியாளர்கள், கார்ப்பரேட் சாமியார் பாபா ராம்தேவ் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். சித்த மருத்துவத்தில் உள்ள நன்மைகளை அரசு ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சேவை வழங்க வேண்டும். கருத்துரிமையை தடுக்க கூடாது, கருத்துரிமை என்பது பிறரை புண்படுத்தாமல் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த பிரச்சாரத்திற்கு விவசாய தொழிலாளர்சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.ஜி.கண்ணன்தலைமை தாங்கினார். இதில் சிபிஎம் மாவட்டச்செயலாளர் எஸ். கோபால், செயற்குழு உறுப்பினர்கள் கே.செல்வராஜ், டி.பன்னீர்செல்வம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.ரவி எம்.சி, இ.எழிலரசன், வி.தொ.ச. வட்டச் செயலாளர் பி.அருள், விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் ஏ.மாரிமுத்து, வாசுதேவன், ஏகாம்பரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.