headlines

img

வாய்ப்பந்தல் நிழல் தராது....

கொரோனா தொற்று பரவல் மற்றும் மரண விகிதத்தில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது.  

ஆனால் பிரதமர் மோடியோ  வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், தொற்று வேகமாக குறைந்து வருகிறது; நாடு முழுவதும் 10 கோடிபரிசோதனைகள் எட்டப்பட உள்ளது என்றுசாதனையாக மார்தட்டிக் கொள்கிறார்.அதேவேளை தீபாவளி பண்டிகையை  வெகு ஜாக்கிரதையாக கொண்டாட வேண்டும் என்கிறார். 

மோடி அரசின் திட்டமிடாத ஊரடங்காலும், தவறான பொருளாதார நடவடிக்கைகளாலும் வீழ்ந்த பொருளாதாரம் பாதியளவு கூட மீளவில்லை. கோடிக்கணக்கான மக்கள் வேலை இழந்துள்ளனர்.  வெங்காயம் துவங்கி அனைத்துப்
பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கிறது. அன்றாட வாழ்வாதாரத் தேவைகளை பூர்த்தி செய்வதே பெரும் சவாலாக மாறியிருக்கிறது. இதனால்  மக்கள் பசி, பட்டினியால் வாடுகின்றனர். உலகப் பட்டினி குறியீடு பட்டியலில்  அண்டைநாடுகளைவிட இந்தியா மோசமான இடத்திற்குதள்ளப்பட்டிருக்கிறது. வரலாறு காணாத அளவுக்கு உணவு தானியங்கள் கிடங்குகளில் இருந்தும் பிரதமர் பசியில் உள்ள மக்களுக்கு விநியோகிக்க மறுக்கிறார். வேலை இழந்தவர்களுக்கு நிவாரணம் தர மறுக்கிறார். ஆனாலும்பெருந்தொற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டதாக வாயால் வடைசுடுகிறார்.

ஆனால், மக்கள் தெளிவாகவே இருக்கின்றனர். பிரதமர், உண்மைக்கு மாறாக பேசுவதை பொறுத்துக்கொள்ளாதவர்கள் இணையத்தில் மோடி பேசும் வீடியோவை சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கில் ‘டிஸ்லைக்’ செய்தனர். இதையடுத்து பதறிப்போன பாஜக அதற்கான பட்டனையை நீக்கி விட்டது. இது, மோடி கொரோனாவை எதிர்கொண்ட விதத்திற்கு மக்கள் அளித்திருக்கும் பதில். மத்திய அரசின் மீதான மக்களின்கோபத்தை பாஜகவால் அவ்வளவு எளிதில் அணைத்துவிட முடியாது.
மோடியின் நண்பர் டிரம்ப்,  “நான் மட்டுமா கொரோனா புள்ளி விபரங்களை மறைத்தேன். இந்தியாவில் மோடியும்தான் மறைக்கிறார்” என  உண்மையை உடைத்துவிட்டார்.  புள்ளிவிபரமோசடியின் மூலம் மட்டுமே தேசத்தை திசைதிருப்பிட முடியாது. வாழ்நிலை எதார்த்தம் ஆட்சியாளர்களை எட்டி உதைக்கத்தான் செய்யும்.  ஊரடங்கு காலத்தில்  சாலைகளிலேயே ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள்உயிரிழந்தனர்.

கொரோனா சிகிச்சை பணியில்ஈடுபட்ட மருத்துவர்களும் உயிரிழந்திருக்கின்றனர்.  இதற்கெல்லாம் ‘டேட்டாவே இல்லை’ என்று ஒட்டு மொத்தமாக டாட்டா காட்டி வருகிறதுமோடி அரசு. ஆனால் கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு இன்னும் அதிகமாகும், உயிரிழப்புகளும் கணிசமாக அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வாய்ப்பந்தல் நிழல் தராது. கொரோனா தடுப்பிற்கான  போதுமான மருத்துவ உபகரணங்களை நாடு முழுவதும் உறுதி செய்திட வேண்டும். அறிகுறியுடன்வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனையோடு சிடி ஸ்கேன் பரிசோதனையை நாடு முழுவதும் இலவசமாக ஏற்பாடு செய்ய வேண்டும். கொரோனாவால் தொழில் மற்றும் வேலையிழந்துநிற்பவர்களுக்கு நிவாரணம் வழங்கிட முன் வர வேண்டும்.