headlines

img

இடதுசாரி மாற்றத்திற்காக இரவு பகல் பாராமல் பணியாற்றுங்கள்! - எஸ்.பாலா

இளைஞர்களுக்கு வேலை கொடு என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழகம் முழுவதும் 3000 கிலோ மீட்டர் சைக்கிள் பயணத்தை 2022 ஏப்ரல் 21 முதல் மே 1 வரை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தியது.

தமிழகத்தில் வேறு எந்த இயக்கமும் வேலைவாய்ப்பு கோரிக்கைகளை முன் வைத்து இது போன்ற பெரிய மக்கள் சந்திப்பை நடத்தவில்லை.

சென்னை, புதுச்சேரி, கோயம்புத்தூர், கொல்லங்கோடு நான்கு முனைகளில் துவங்கிய 3000 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் திருச்சியில் சங்கமித்தது. இராமநாதபுரத்தில் துவங்கிய உப பயணக்குழு சிவகங்கை, புதுக்கோட்டை வழியாக  ஐந்து நாட்கள் பயணம் செய்து திருச்சியில் இணைந்தது. அதேபோல தென்காசி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தேனி, திருவள்ளூர், வேலூர் ஆகிய இடங்களில் இருந்து உப பயணங்களும் மேற் கொள்ளப்பட்டன. 60 பயண நாட்களில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 55 கிமீ மேல் பயணித்தனர்.

திட்டமிட்ட 3000 கிமீ தூரத்தையும் கடந்து 3500 கிமீ கடக்கும் ஆற்றல்மிக்க இளைஞர் அமைப்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்த சைக்கிள் பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியது.

3000 கி.மீ கடும் வெயிலிலும், பல்வேறு சிரமத்திற்கு மத்தியிலும் சிவப்பு நட்சத்திரம் பொறித்த வெண்கொடியை பட்டொளி வீசிப் பறக்கவிட்டது சைக்கிள் பயணம். இப் பயணம் ஆயிரக்கணக்கான மையங்களில் வரவேற்பு நிகழ்ச்சிகளையும், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களையும் , ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களையும் சந்தித்து திருச்சியை அடைந்தது.

திருச்சி சங்கமத்தில்...

இளைஞர்களுக்கு வேலை கொடு என்று 3000 கிலோ மீட்டர் பயணத்தின் நிறைவான திருச்சி சங்கமும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடைபெற்றது. திருச்சி மாநகர் முழுவதும் சுவர் விளம்பரங்கள், வெண் கொடிகள், வாணவேடிக்கைகள், வரவேற்புகள் என களை கட்டியிருந்தது. நான்கு பயண குழுக்களும், இராமநாதபுரத்தில் இருந்து வந்த உப பயண குழுவும் இணைந்தன. அங்கிருந்து மாபெரும் சைக்கிள் பேரணியாக அணிவகுத்தது.

வாலிபர் சங்கத்தின் அகில இந்திய செயல் தலைவர் ஏ.ஏ.ரஹீம் அவர்களும் சைக்கிள் ஓட்ட திருச்சி சங்கமத்தை அடைந்தது. சென்னையில் பயணம் புறப்பட்டபோது, இடதுசாரி இயக்கத்தின் வாழும் வரலாறு தோழர் சங்கரய்யாவை  சந்தித்தோம். அவர், இளைஞர்களைப் பார்த்து உத்வேகத்துடன் இன்குலாப் முழக்கமிட்டு சொன்ன வார்த்தைகள் அர்த்தமிக்கவை: “தமிழகம் முழுவதும் வாலிபர் சங்கத்தை பலப்படுத்துங்கள். இடதுசாரி மாற்றத்திற்கு இரவு பகல் பாராது பணியாற்றுங்கள்,” - 100 வயதான போதும் இலட்சிய வேட்கையோடு அன்பு வழிகாட்டுதலை நமக்குத் தந்தார். அதனை நெஞ்சில் நிறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை முன்னெடுத்துக் கொண்டு செல்வோம். நாம் பலமாகும் போது தமிழகம் இடதுசாரி வசமாகும்!


 

;