headlines

img

மெல்ல நகைக்கும் நேர்மை!

“ஊழலில் திளைக்கும் அரசு வேண்டாம்; வெளிப்படையான நேர்மையான அரசுதான் வேண்டுமென தெலுங்கானா மக்கள் நினைக் கின்றனர். மாநிலத்தில் பாஜக அரசு அமைய வேண்டும் என்பதே அவர்களது விருப்பம்” என்று பிரதமர் மோடி, மகபூப்நகரில் நடைபெற்ற அரசு திட்டப் பணிகள் துவக்க விழாவில் ஞாயிறன்று பேசியிருக்கிறார்.

எல்லா மாநில மக்களும் ஊழலற்ற, நேர்மை யான, வெளிப்படையான அரசு வேண்டும் என் பதை விரும்புவார்கள் என்பது உண்மைதான். ஆனால் அதற்கும் பாஜகவுக்கும் வெகுதூரமாகி விட்டதே. அண்மையில் நடந்த கர்நாடக மாநிலத் தேர்தலில் 40 சதவீத கமிஷன் அரசு என்று பெயர் பெற்ற பாஜக அரசு அகற்றப் பட்டதே, அதை வசதியாக மறந்துவிட்டார் பிரதமர். நாட்டின் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை 7.5 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு பற்றி, அம்பலப்படுத்தி ஒன்றிய பாஜக அரசின் லட்சணத்தை வெளிப்படுத்தியதே! பாஜக ஆளும் மாநிலங்களில் வியாபம் ஊழல் முதல் எத்தனையோ வெளிவந்து நாடு முழுவ தும் நாறியதே! அப்படியிருக்க, ஊழலற்றவர்கள் என்று எந்த வகையில் மார்தட்டுகிறார் மோடி?

அதேபோல வெளிப்படைத்தன்மை பற்றி மோடி முழங்குவதில் ஏதாவது அர்த்தம் இருக்கி றதா? தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி குவிப்பதில் முதலிடம் பிடித்திருக்கும் பாஜகவுக்கு வெளிப் படைத் தன்மை எங்கேயிருக்கிறது? யார் யாருக்கு கொடுக்கிறார்கள் என்பதைத் தெரியப் படுத்தும் விதத்தில் நன்கொடை பெறும் சட்டம் இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள்- குறிப் பாக சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்திய போதும் அதைப் புறக்கணித்ததே ஒன்றிய பாஜக அரசு. இதுதான் வெளிப்படைத் தன்மையா?

இது தவிர பிஎம்கேர்ஸ் நிதி வசூலில் என்ன வெளிப்படைத் தன்மை இருக்கிறது? 2019-2022 வரையிலான மூன்று ஆண்டுகளில் வசூலானது ரூ.12,291.82 கோடி. இதில் இன்னும் செலவழிக்கப் படாதது ரூ.5415.65 கோடி. ஆனால் ஏற்கெனவே பிரதமர் நிவாரண நிதி எனும்முறை வழக்கத்தில் உள்ளது. இது தணிக்கைக்கு உட்பட்டது.ஆனால் இந்த பிஎம்கேர்ஸ் நிதி - அறக்கட்டளை எனும் பெயரில் தணிக்கைக்கு அப்பாற்பட்டது. இதில் எங்கேயிருக்கிறது வெளிப்படைத்தன்மை?

அது மட்டுமல்ல, அரசு நிர்வாகத்திலாவது வெளிப்படைத் தன்மை உள்ளதா? சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் என்னென்ன விவாதிக்கப் போகிறோம் என்பதைக் கூட வெளிப்படையாகச் சொல்லவில்லையே. நேர்மை பற்றிப் பேசும் பிரதமர், அதானி விஷயத்தில் நாடாளுமன்றத்தில் வாயே திறக்க வில்லையே. இன்னுமா இவரை மக்கள் நம்புவார் கள்! ரகசியம் தானே ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவா ரங்களின் நடைமுறை. பேசுவது ஒன்றும், செய் வது ஒன்றும் தானே அவற்றின் வாடிக்கை. இனியும் உங்கள் ஜம்பம் செல்லாது.