headlines

img

ஜனநாயக குரல்வளையை நெரிக்கும் மோடி அரசு

ஜனநாயகத்தின் தாயகம் என்று பிரதமர் மோடியால் கூறப்படும் இந்தியாவில் நாளுக்கு நாள் ஊடகங்களின் சுதந்திரம் பறிபோய்க் கொண்டிருக்கிறது. அரசைக் கேள்வி கேட்கும் ஊடகங்கள் மீது ஒன்றிய அரசு தனது அதிகாரத் தின் கீழ் செயல்படும் விசாரணை அமைப்புகள் மூலமாக அதிகாரத்தை செலுத்தி ஜனநாய கத்தின் குரல்வளையை நெரித்துக் கொண்டி ருக்கிறது.

இதற்கு சமீபத்திய உதாரணம் நியூஸ் கிளிக் ஊடக நிறுவனத்தில் நடைபெற்றசோதனை. ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாக அந்த ஊடகத்தின் பத்திரிகையாளர்கள் வீடுகள் உட்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் தில்லி காவல்துறையினர் சோதனை நடத்தினர். அதன் நிறுவனர் பிரபீர் புர்காயஸ்தா  மற்றும் மனித வளத் துறைத்தலைவர்  அமித்  சக்ர வர்த்தி  ஆகியோர் ஏழு நாள் போலீஸ் காவலில் வைக்கப் பட்டுள்ளனர்.  அவர்கள் மீது சட்டவிரோத நட வடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இவர்கள் உட்பட நடவடிக்கைக்கு உள்ளாகி யிருக்கும் நியூஸ் கிளிக் இதழாளர்கள், நாட்டின் தலை சிறந்த ஊடகவியலாளர்கள் என்பது குறிப் பிடத்தக்கது. நியூஸ் கிளிக் இதழ் கடந்த சில ஆண்டுகளாக மோடி அரசின் தவறான கொள்கைகளைத் தனது கட்டுரைகள், காணொ லிகள் மூலமாக அம்பலப்படுத்தி வருகிறது. இத னால் ஆத்திரம் அடைந்த ஒன்றிய அரசு, அந்த நிறுவனத்தை முடக்கத் துடிக்கிறது. ஊடகங்க ளை மோடி அரசு ஒடுக்குவது இது முதல் முறை யல்ல. 

குஜராத் வன்முறையை ஆவணப்படமாக வெளியிட்டதற்காக  பிபிசி அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. பெருந் தொற்றை கையாளுவதில் மோடி அரசின் தோல்வியை தோலுரித்து காட்டியதற்காக இந்தி நாளிதழ் தைனிக்  பாஸ்கர் மீது வருமான வரித் துறை ஏவப்பட்டது; ஒன்றிய அரசின் விளம்ப ரங்கள் நிறுத்தப்பட்டன. உ.பி.யில் கொரோனா காலகட்டத்தில் கொத்துக் கொத்தாக நோயாளி கள் பலியானதையும் சுடுகாட்டில் குவிக்கப்பட்டு மொத்தமாக சடலங்கள் எரியூட்டப்பட்டதையும் அம்பலப்படுத்தியதற்காக  பாரத் சமாச்சார் மீது நடவடிக்கை பாய்ந்தது. காஷ்மீரில் ஒன்றிய அரசின் அத்து மீறல்களை அம்பலப்படுத்தியதற்காக  காஷ்மீர் வாலா ஊடகம் தண்டிக்கப்பட்டது.   தி வயர், நியூஸ் லாண்டரி உள்ளிட்ட ஊடகங்கள் மீது  பொய்யான  வழக்குகளைப்  பதிவுசெய்து அவற்றின் குரல் வளை நெரிக்கப்பட்டிருக்கிறது.

ஊடகங்கள் மீதான பாஜக அரசின் இத்த கைய நடவடிக்கைகள் கடுமையாக கண்டிக்கத் தக்கவை. இது அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள பத்திரிகை சுதந்திரத் திற்கும், பேச்சுரிமைக்கும் எதிரானது.