headlines

img

ஜனநாயகத்தின் உயிரை உருவி

 ஜனநாயகப் படுகொலை என்ற பதத்தையும் கூட அர்த்தமற்று போகச் செய்துவிட்டது நரேந்திர மோடி - அமித்ஷா தலைமையிலான பாஜக. இதற்கு மேலும் ஒரு கடுமையான வார்த்தையை தேட வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி யிருக்கிறது. மகாராஷ்டிராவில் அவர்கள் அரங்கேற்றியிருக்கும் மிக மிகக் கொடிய ஜன நாயகப் படுகொலை எனும் பயங்கரம். இதுவரை இப்படி ஒன்றை நாடு கண்டதில்லை. குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கும்போது, நாடு உறங்கிக் கொண்டிருக்கும் போது, அஜித் பவார் என்ற கருங்காலியை தேசியவாத காங்கிரஸ் கட்சி யிலிருந்து மிரட்டி அழைத்துச் சென்று, அவர் மூலமாக தேசியவாத காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் பெரும்பாலான எம்எல்ஏக்களது ஆதரவு தங்களுக்கு இருப்பதாக காட்டி, குடி யரசுத் தலைவர் அலுவலகத்தையும் ஆளு நரையும் முற்றிலும் துஷ்பிரயோகம் செய்து, தேவேந்திர பட்னாவிஸை மகாராஷ்டிர முதல மைச்சராக பதவியேற்கச் செய்து அழகு பார்த்தி ருக்கிறார்கள் மோடியும் - அமித்ஷாவும். இதைவிட வெட்கக்கேடும், இழிவும், மிகப்பெரும் அவமானமும் இந்திய அரசியல மைப்புச் சட்டத்திற்கு நேர முடியாது. பாஜகவின் ஈனச்செயல்களால், அவர்களது இந்துத்துவா வன்முறைக் கொள்கையையே தங்களது கொள்கையாகக் கொண்டிருக்கக்கூடிய பிராந்திய கட்சியான சிவசேனா கூட வெகுண்டெ ழுந்து, பாஜகவுக்கு எதிராக மகாராஷ்டிராவில் களத்தில் இறங்கிவிட்ட தருணத்தில்தான், இனி யும் அங்கு நேர்வழியில் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என்று தெளிவாக உணர்ந்து கொண்ட இவர்கள், அக்கிரமத்தின் உச்சத்திற்கு சென்று அதிகாரத்தை வசப்படுத்தியிருக்கிறார்கள்.  ஆனால் அவர்களால் அதை நிரூபிக்க முடி யுமா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. ஏனென்றால், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 54 சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கை கருங்காலி அஜித்பவார் தன்னுடன் கொண்டுவர முடிந்தால் மட்டுமே பட்னாவிஸ் சட்டமன்றத்தில் முதலமைச்சராக நீடித்திருக்க முடியும். அதாவது 36 சட்டமன்ற உறுப்பினர்கள். அதற்கு குறைவானவர்கள் ஆதரவளித்தால், அவர்கள் கட்சி மாறியதாகவே கருதப்படுவார்கள்.  அஜித்பவாரை சட்டமன்றக் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவித்துள்ள நிலையில், அக்கட்சியின் எம்எல்ஏக்களது கூட்டத்தை அவர் ஞாயிறன்று நடத்தி உறுதி செய்துள்ள நிலையில், அஜித் பவார் மட்டுமே பட்னாவிஸுக்கு ஆதரவானவராக இருந்து கொள்ளக்கூடும். அதனால் பட்னாவிஸுக்கு பலன் கிட்டப்போவதில்லை. ஞாயிறன்று உச்சநீதி மன்றத்தில் வந்த வழக்கில், சிவசேனா - காங்கி ரஸ் - தேசியவாத காங்கிரஸ் - வழக்கறிஞர்களின் வாதம் இதைத்தான் உணர்த்துகிறது. அந்த வாதத்தை ஏற்று, பட்னாவிஸுக்கு ஆதரவு தெரி வித்துள்ள எம்எல்ஏக்களின் கடிதங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் பாஜகவுக்கு உத்தரவிட்டி ருக்கிறது. இதற்காக குதிரை பேரத்தின் எத்தகைய இழிவான எல்லைக்கும் பாஜக செல்லும். ஆனாலும் சட்டமன்றத்தில் அதற்கு ஒரு சாட்டையடி கிடைக்கும் என நம்புவோமாக!

;