headlines

img

கடைத் தேங்காய்க்காக பிள்ளையாரை உடைப்பதா?

எல்ஐசி மற்றும் ஸ்டேட் வங்கி நிதியை, பிரதமர் மோடி அவரது நெருங்கிய கூட்டாளியான கௌதம் அதானியின் நிறுவனங்களில் முதலீடு செய்ததை ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அம்பலப்படுத்தியது. இது குறித்து விசாரிக்க நாடா ளுமன்ற கூட்டுக்குழு அமைக்க மறுத்து வரும் மோடி அரசு நாடாளுமன்றத்தில் இந்த மோசடி குறித்து விவாதிக்கக் கூடாது என்பதற்காகவே இரு அவைகளையும் திட்டமிட்டு முடக்கிவருகிறது.

இந்நிலையில், அதானி நிறுவனத்திற்கு மோடி அரசு வழங்கியுள்ள மேலும் ஒரு சலுகை குறித்து அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை அதானி நிறுவனத்தின் பங்குகளை வாங்க பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் தொடர்ந்து குறைக்கப்பட்டு வரு கிறது. பி.எப்.சந்தாதாரர்கள் தங்களது ஓய்வூதி யத்தை அதிகரிக்க வேண்டுமென தொடர்ந்து போராடி வருகின்றனர். இதற்கு இணங்க மறுக்கும் ஒன்றிய அரசு பி.எப்.ஆணைய அறங்காவலர்களுக்கே தெரியாமல் தொழிலாளர்களின் பி.எப். நிதியை அதானி நிறுவனங்களுக்கான பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளது.

இ.பி.எப்.ஒ. என்பது இந்தியாவின் மிகப்பெரிய ஓய்வூதிய நிதியமாகும். 27.73 கோடி ஊழியர்களின் பி.எப். சேமிப்பு இந்த நிறுவனத்தால் நிர்வகிக் கப்படுகிறது. இந்த நிதியில் 15 சதவீதம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. தொழிற் சங்கங்கள் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. நிலையற்ற பங்குச்சந்தையில் தொழிலாளர்களின் சேமிப்பை முதலீடு செய்வது ஆபத்து நிறைந்தது என தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால், பி.எப். நிதியிலிருந்து ரூ.38 ஆயிரம் கோடி வரை பங்குச்சந்தையில் முதலீடு செய்யப் பட்டுள்ளது.

தற்போது அதானி நிறுவனத்தின் பங்குகள் ஆட்டம் கண்டுவருவதால் இதனால் ஏற்படும் இழப்பு இ.பி.எப்.ஒ. மீது நேரடியாகவும் தொழி லாளர்கள் மீது மறைமுகமாகவும் விழக்கூடும். அதானி என்ற ஒற்றை கார்ப்பரேட் முதலாளிக் காக தொழிலாளர்களின் நிதியைச் சூறையாடு வது எந்த வகையில் நியாயம்? இதற்கு மோடி அர சுக்கு யார் அனுமதி கொடுத்தது.

தொழிலாளர்களின் சேமிப்புக்கு 0.05 சதவீதம் மட்டுமே வட்டி விகிதத்தை உயர்த்த பரிந்துரை  செய்யப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்களு க்கு பெரும் இழப்பு ஏற்படும். ஆனால், மறுபுறத்தில்  அவர்களது பணத்தை அதானிக்கு அள்ளி வழங்குகிறார் பிரதமர் மோடி. அதானி நிறுவன பங்குகள் வீழ்ச்சியடைவதால் தான் இ.பி.எப். வட்டி விகிதத்தை உயர்த்த மறுப்பதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல என்பது பழமொழி. ஆனால், மோடி அரசு தற்போது கடைத் தேங்காய்க்காக வழிப் பிள்ளையார் சிலை யையே உடைத்து வருகிறது. தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டம் இந்த அரசை பதவியி லிருந்து அகற்றும்.

;