பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை அரசு தீர்மானிக்கும் முறையிலிருந்து மாற்றம் செய்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கேற்ப எண்ணெய் நிறுவனங்கள் தீர்மானித்துக் கொள்ளும் முறை கொண்டு வரப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. எனினும் டீசலைத் தொடர்ந்து பெட்ரோலுக்கும் அரசு விலை தீர்மானிப்பது விலக்கிக் கொள்ளப்பட்டது.
ஆனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்து மிகக் குறைவான விலைக்கு கிடைத்த போதும் கூட ஒன்றிய பாஜக கூட்டணி அரசு அதன் பலனை நுகர்வோருக்கு வழங்கவில்லை. மாறாக, கலால் வரி, செஸ் வரி என பல வரிகளைப் போட்டு உள் நாட்டுச் சந்தையில் விலை குறையாமல் பார்த்துக் கொண்டது. 15 நாட்களுக்கு ஒருமுறை விலை தீர்மா னிக்கப்படும் போதெல்லாம் உயர்த்தப்பட்டது. பிறகு அன்றாடம் விலை உயர்த்தப்பட்டது.
சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானி யத்தை கழித்துக் கொண்டு நுகர்வோருக்கு விற்கப் பட்டு வந்த நிலையில், மானியம் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு விடும்; அதற்கு முன்பு முழுமையாக தொகையைச் செலுத்தி வாங்கிக் கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசு கூறியது. காலப் போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக மானியம் குறைத்துக் கொண்டே வரப்பட்டு தற்போது பெரும்பாலும் மானியம் இல்லாத நிலை உருவாக்கப்பட்டு விட்டது.
ஆனால் தேர்தல் காலத்தில் மட்டும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், உள்நாட்டின் விலை உயர்த்தப்படாது. தேர்தல் முடிந்தபிறகு விடு பட்டதை சேர்த்து மொத்தமாக விலையை ஏற்றி உள்நாட்டு மக்களை பழிவாங்கும் ஒன்றிய அரசு.
இப்போது உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெறுவதால் கடந்த 119 நாட்க ளாக பெட்ரோல், டீசல் விலையில் மாறுதல் இல்லை. சர்வதேச சந்தையில் விலை உயர்ந்த போதும், வாக்காளர்களின் அதிருப்தியை சம்பாதிக்கக்கூடாது என்பதற்காக விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. ஐந்து மாநிலத் தேர்தல் மார்ச் 7ஆம் தேதி நிறைவடையவுள்ளது. உடனடி யாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் என்று ஜேபி மார்கன் தரகு நிறுவனம் கூறியுள்ளது.
இந்த நடைமுறை உள்நாட்டு மக்களை ஏமாற்றும் அப்பட்டமான மோசடியல்லவா? தேர்தல் வந்தால் மட்டும் விலையை குறைக்க முடியும் என்றால் மற்ற காலங்களில் ஏன் முடி யாது? அதுமட்டுமின்றி சர்வதேச சந்தை நிலவரத் திற்கேற்பவே பெட்ரோல், டீசல் விலை தீர்மானிக்கப் படுகிறது என்பதும் உண்மையல்ல.எரிபொருள் சில்லரை விற்பனையில் பெரும்பகுதி ஒன்றிய அரசின் வரியாகவே செல்கிறது. ஆனால் மாநில அரசுகள் வரியைக் குறைத்து விலையை குறைக்க வேண்டுமென பாஜகவினர் உபதேசம் செய்வதில் மட்டும் குறைச்சல் இல்லை. வரியைக் குறைத்து அதன்மூலம் விலையைக் குறைக்க ஒன்றிய அர சுக்கு மக்கள் நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும்.