தேர்தல் வந்தால் போர் என்றும், பயங்கரவா தம் என்றும் பேசுவது பாஜகவின் வாடிக்கையாகி விட்டது. அவர்களின் பாசிச பாணி பிரச்சார உத்தியே நாட்டை எதிரிகளிடமிருந்து காப்பாற்றப் போவதாகக் கூறுவதையே கிளிப்பிள்ளை போல எல்லோரும் சொல்லிக் கொண்டு தேச பக்தி என்ற பெயரில் வாக்குகளை அறுவடை செய்ய தயாராகி விடுவார்கள்.
முன்பு வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் கார்கில் போர் என்று பிரச்சாரம் செய்தார்கள். அண்மைக்கால தேர்தல்களில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதாக கூறியே பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இப்போது பயங்கரவாதத்திற்கு எதிராகப் போர் நடத்துவதாகவும் கூறுகின்றன.
நாட்டில் பாஜக அரசாங்கம் அமல்படுத்தும் மக்கள் விரோத கொள்கைகளை, ஜனநாயக நெறி முறை மீறல்களை, தலித், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை கண்டிப்பவர்களையும் எதிர்ப்ப வர்களையும் தேச விரோத முத்திரை குத்தி சிறையி லடைத்து சித்ரவதை செய்வதே இவர்களின் நடைமுறையாகவுள்ளது.
அதற்கு பகுத்தறிவாளர்கள் நரேந்திர தபோல் கர், கோவிந்த பன்சாரே, கல்புர்க்கி, கௌரி லங்கேஷ் போன்றவர்களின் படுகொலைகளே சாட்சி. இந்த கொலைகள் அனைத்தும் இந்துத்துவா பயங்கரவாத கும்பல்களால் செய்யப்பட்டவை. ஆனால் அவற்றில் எல்லாம் இன்னும் நீதி வழங்கப்படவில்லை.
ஆனால் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ திங்களன்று உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் சாதி, மதம் என எந்த வகையில் யார் பயங்கரவா தத்தை பரப்ப முயன்றாலும் அவர்களை இந்த நாட்டில் மட்டுமல்லாது உலகத்திலிருந்தே விரட்ட வேண்டும் என்ற கொள்கையை பாஜக கொண்டுள் ளது என்று பேசியிருக்கிறார்.
சட்டரீதியான நடவடிக்கைகள் எடுப்பது ஆட்சி யாளர்களின் கடமை. ஆனால் இவர்களோ உத்தர கண்டில் சாமியார்களின் நாடாளுமன்றம் நடத்தி சிறுபான்மையினரை கொலை செய்வோம் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுப்பதையெல்லாம் கண்டு கொள்வதில்லை. அவர்கள் மீது எந்த நடவடிக்கை யும் எடுப்பதில்லை. ஆனால் உலகத்தை விட்டே விரட்ட வேண்டும் என்று இவர் கூறுவது பயங்கர வாதமில்லையா? இதைத்தான் 2002ஆம் ஆண்டு குஜராத்தில் இவரும், மோடியும் செய்தனர். இவர் கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதால் மற்ற வர்களையும் அவ்வாறே சித்தரிக்கின்றனர்.
குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பிரக்யா சிங் சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு ஜாமீன் கேட்பதும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடனமாடுவதும், பந்து விளையாடுவதும் போன்றவற்றில் ஈடுபட்டுக் கொண்டு நீதிமன்றத்தை ஏமாற்றுவது இவர்களது செயல்பாடாக இருப்பது தானே நடப்பு.
தான் திருடி பிறரை நம்பான் என்பது பழமொழி. அதனால் அடுத்தவர்கள் மீது பயங்கர வாத பழியை சுமத்தி தங்களது ஆட்சியின் தோல்வியை மறைப்பதையே பாஜக ஒன்றிய அரசு செய்து கொண்டிருக்கிறது. அதனுடைய சூத்திரதாரி உள்துறை அமைச்சரான இவர்தான் என்பதால் உத்தரப்பிரதேச மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் மக்கள் ஏமாற மாட்டார்கள்.