தில்லி நிர்வாகத் திருத்த மசோதா நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டுள்ளது. இம் மசோதா மக்களவையில் கடந்த வெள்ளியன்று நிறைவேற்றப்பட்ட நிலையில், திங்களன்று மாநிலங்களவையில் 29 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.இம் மசோதாவிற்கு ஆதரவளித்ததன் மூலம் அதிமுக தீராப் பழியை சுமந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மா னம் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு எந்தவொரு மசோதாவையும் நிறைவேற்றக்கூடாது என்கிற மரபை சிதைத்து பல்வேறு மசோதாக்களை நரேந்திர மோடி தலைமையிலான அரசு நிறை வேற்றியுள்ளது.
மணிப்பூர் பிரச்சனை குறித்து பிரதமர் அவைக்கு வந்து விளக்கமளிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்ததால் அவையில் அன்றாடம் அமளி நிலவிய நிலையில் ‘எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம்’ என்பது போல மோடி அரசு அம ளியை பயன்படுத்தி மசோதாக்களை நிறை வேற்றிக் கொண்டுள்ளது.
தில்லி யூனியன் பிரதேச அரசின் குரூப் ஏ அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாற் றத்திற்கான அதிகாரம் தில்லி மாநிலஅரசுக்கே உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இந்த தீர்ப்பை அவமதிக்கும் வகை யில் இந்த அதிகாரத்தை ஆக்கிரமிக்கும் வகை யில் ஆணையம் ஒன்றை அமைப்பதற்கு ஒன்றிய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. இப்போது இதற்கான சட்டத்தை இரு அவைகளி லும் நிறைவேற்றியுள்ளது.
இந்த சட்டத்திற்கு ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த மசோதாவை நிறைவேற் றும் அளவிற்கு ஆளும் கூட்டணிக்கு வாக்கு எண்ணிக்கை இல்லாத நிலையில் பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளு டன் சேர்ந்து அதிமுகவும் மசோதாவிற்கு ஆதர வளித்துள்ளது. மாநிலங்களின் அதிகாரங்களை பறிக்கும் இந்த மசோதாவிற்கு மாநிலக்கட்சிக ளான இம்மூன்றும் ஆதரவளித்துள்ளது வெட்கக் கேடானது.
நாட்டிற்கு நலம் பயக்கும் என்பதால் மசோதா வை ஆதரித்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். இப்படித்தான் வேளாண் திருத்த சட்ட மசோதாக்களையும் அதிமுக ஆதரித்தது. அந்தக் கட்சி தன்னுடைய சுயத்தை இழந்து பாஜகவின் தொங்கு சதை யாகவே மாறிக் கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசின் அனைத்து ஜனநாயக விரோத நடவ டிக்கைகளுக்கும் முட்டுக் கொடுக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மாநில நிர்வாகத்தை சிதைத்தவர்கள் இப்போது தில்லி யூனியன் பிரதேசத்தையும் சிதைக்கின்றனர். நிறைவேற்றப்பட்டிருப்பது நிர்வாகத் திருத்த மசோதா அல்ல, நிர்வாகச் சிதைப்பு மசோதாவாகும்.