headlines

img

10 ஆண்டு கால ஆட்சிக்கு ஒற்றை விரலால் முடிவு கட்டுவோம்!

18ஆவது நாடாளுமன்ற மக்களவையை தேர்வு செய்வதற்கான முதல் கட்ட வாக்குப்பதிவு வெள்ளியன்று நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில மக்கள் தங்களது ஜன நாயகக் கடமையை நிறைவேற்ற உள்ளனர். இந்த தேர்தல் வழக்கமாக நடைபெறும் தேர்தல் களில் ஒன்றல்ல. இந்தியாவின் எதிர்காலத் திசை  வழியை தீர்மானிப்பதற்கான தேர்தல் ஆகும். 

விடுதலைப் போராட்டத்தின் விளைவாக விளைந்த நவீன இந்தியக் குடியரசு நிலைக்கப் போகிறதா..? அல்லது  ஆர்.எஸ்.எஸ். விரும்பு கிற பாசிச இந்து ராஷ்டிரமாக இந்த நாடு மாறப் போகிறதா... என்பது தான் இந்திய மக்கள் முன்னால் இருக்கும் கேள்வி. 

கடந்த 10 ஆண்டு கால மோடி ஆட்சியில் அநீதிகள், அட்டூழியங்கள், அநியாயங்கள், அடாவடிகளை ஆயிரக்கணக்கில் பட்டியலிட முடியும். ஆனால், நாட்டுக்கு விளைந்த நன்மை என்று ஒன்றைக் கூட கூற முடியாது. 

மோடி அரசு நாட்டு மக்களுக்கு எந்த ஒரு  வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஆனால், ஆர்.எஸ்.எஸ். மற்றும் கார்ப்பரேட் முதலாளிகளின் கட்டளையை நிறைவேற்று வதையே கர்மயோகமாகக்  கொண்டிருந்தது. 

பண மதிப்பிழப்பு கொண்டு வந்து மக்களின் வாழ்வை மதிப்பிழக்கச் செய்தது, ஜிஎஸ்டி வரி என்ற பெயரில் மக்களின் இரத்தத்தை அட்டை போல உறிஞ்சியது. தேசத்தின் கோவில்களான பொதுத்துறை நிறுவனங்களை அழித்தது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகிய வற்றின் விலையை பலமடங்கு உயர்த்தி வயி றெரிய வைத்தது. அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் கூட்டுக் களவாணிகளுக்கு தேசத் தின் அனைத்து வளங்களையும் திறந்து விட்டது என அடுக்கிக் கொண்டே போகலாம்.

நாடாளுமன்றம், தேர்தல் ஆணையம், ஒன்றிய புலனாய்வு அமைப்புகள் என அரசியல் சட்ட அமைப்புக்களின் மாண்புகளைச் சீரழித்து தம்முடைய குறுகிய அரசியல் லாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டது மோடி அரசு. 

வேளாண் துறையை சீரழிக்கும் வேளாண் திருத்தச்சட்டம், சிறுபான்மை மற்றும் இலங்கைத் தமிழர்களின் குடியுரிமையை கேள்விக்குறி யாக்கும் குடியுரிமை திருத்தச்சட்டம், தொழி லாளர் நலச் சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக மாற்றும் சட்டத்திருத்தங்கள் என  மோடி அரசு முன்னெடுத்த அனைத்து சட்டங் களுமே நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எதி ரானவை தான்.

புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில்  மீண்டும் குரு குலக்கல்வி பாணி கல்வி முறையை கொண்டு வந்து அனைவருக்கும் கல்வி என்ற உயரிய கோட்பாட்டை அழித்தது என பத்தாண்டு கால மோடி ஆட்சி படுபாதகங்களின் தொகுப்பாகவே அமைந்தது. 

தமிழ் உள்ளிட்ட மொழிகளை தள்ளி வைத்து இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பில் மூர்க்கம் காட்டியது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை துண்டு துண்டாக உடைத்ததோடு அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவையும் ரத்து செய்தது மோடி அரசு.

சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை திட்டமிட்டு பரப்பியதன் மூலம் இந்தியாவின் பன்முக தன்மையை சிதைக்கும் வேலையை மேற்கொண்டது ஒன்றிய பாஜக அரசு. 

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க மறுப்பது, கீழடி அகழ்வாய்வை தொடர மறுத்தது, ஒற்றைச் செங்கல்லோடு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை நெட்டைத் தவமிருக்க வைத்தது, ஜி.எஸ்.டி உள்ளிட்ட வரிகளில் தமிழகத்தின் பங்கை தர மறுத்தது, புயல், வெள்ளம் என தமிழக மக்கள் தத்தளித்த போதும் நிவாரணம் வழங்க மறுத்து நீட்டி முழக்கி வெற்று வசனம் பேசியது என அனைத்து வகை களிலும் தமிழ்நாட்டிற்கு விரோதமாகவே ஒன்றிய மோடி அரசு நடந்து வந்துள்ளது.  இதன் உச்சமாக ஆளுநரை கொண்டு போட்டி அரசாங்கம் நடத்தி மாநில அரசு நிர்வாகத்தை சீர்குலைக்க முயன்றதை தமிழகம் ஒரு போதும் மன்னிக்காது. 

10 ஆண்டு கால அநியாய ஆட்சிக்கு எதிராக  மக்களின் ஒற்றை விரல் புரட்சி வெடிக்க வேண்டிய நேரம் இது. தமிழ்நாட்டில் களம் காணும் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதன் மூலம் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கும். நவீன இந்தியா பாது காக்கப்படும். காயம்பட்டுக்கிடக்கிற ஜன நாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி, பன்முகத்தன்மை போன்ற விழுமியங்களுக்கு மருந்திடுவதாக மக்களின் தீர்ப்பு அமையட்டும். 

வெல்க இந்தியா! வெல்க வெல்கவே!

;