headlines

img

ஊரை ஏய்ப்பவர் யோக்கியர் போலே

“ஊழல்வாதிகளை காப்பாற்றுவதே இந்தியா கூட்டணியின் நோக்கம்” என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஞாயிறன்று மதுரை திரு மங்கலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பிதற்றியிருக்கிறார். ஒரு விரல் நீட்டி அவர் எதிர்க்கட்சிகளை குற்றம் சாட்டும்போது  மூன்று விரல்கள் அவர் பக்கம் திரும்பியிருப்பதை மறந்துவிட்டார் போலும்.

சொந்தக் கட்சியிலிருக்கும் ஊழல்வாதி களை - எடியூரப்பா, ஜனார்த்தனன் ரெட்டி (கர்நாடகா), சிவராஜ்சிங் சவுகான் (ம.பி.) போன்ற வர்களை காப்பாற்றுவது அவரது கடமையாக இருக்கலாம். ரஃபேல் விமான ஊழல், குஜராத் போலி அலுவலக ஊழல், டோல்கேட் ஊழல், ஆயுஷ்மான் பாரத் ஊழல், நெடுஞ்சாலைத் துறை ஊழல், தேர்தல் பத்திர ஊழல், பிஎம்கேர்ஸ் ஊழல் என அணிவகுப்பவை ஏராளம் ஏராளம் உள்ளன. உச்சக்கட்டமாக உலகமகா தேர்தல் பத்திர ஊழல்.'

இது ஒருபுறம் இருக்க, எதிர்க்கட்சிகளில் ஊழல் வழக்குகளில் சிக்கியிருப்பவர்களை மிரட்டி, தங்கள் கட்சியில் சேர்த்துக் கொள் வதில் பாஜக உலக அளவில் பெரும் சாதனையே நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

கடந்த 10 ஆண்டு காலத்தில் ஊழல் குற்றச் சாட்டுக்கு உள்ளான 740 எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் பாஜகவில் சேர்ந்திருக்கிறார்கள் என்ற  பிடிஐ செய்தி நிறுவன தகவலை ஊடகங்கள் (19.2.2024) வெளியிட்டுள்ளன.

ஊழல்வாதிகளை ரட்சிக்கும் இவர்களது பணியைப்பார்த்து, ‘வாஷிங் மெஷின் கட்சி’ என்று ஊர் சிரிக்கிறது, உலகம் சிரிக்கிறது. 2014  முதல் எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேர் பாஜக வில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இந்த 25 பேரில் 12 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த வர்கள். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவ சேனா ஆகியவற்றின் தலைவர்கள் தலா 4  பேர். இந்த 25 பேரில் 23 பேர் பிரபலமானவர்கள். அவர்களில் 10 பேர் காங்கிரஸ், 4 பேர் தேசிய வாத காங்கிரஸ், 4 பேர் சிவசேனா, 3 பேர் திரிணா முல் காங்கிரஸ், 2 பேர் தெலுங்குதேசம், ஒருவர்  சமாஜ்வாதி, ஒருவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள்.

இவர்களில் 3 பேர் மீதான வழக்குகள் முடிக்கப் பட்டுவிட்டன. 20 பேர் மீதான வழக்குகள் பாஜக எனும் ஐஸ் கட்சி அறையில் உறைநிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. அவை எப்போதும் உருகி நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படலாம். இப்படித்தான் பாஜக “வளர்ந்து” கொண்டிருக் கிறது. ஊழலை ஒழித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் இவர்கள்தான் ஊழலை ஒழிக்க அவதாரம் எடுத்தவர்கள் போல உளறித் திரி கிறார்கள். “கொள்ளையடிப்பவர் வள்ளலைப் போலே கோவிலை இடிப்பவர் சாமியைப் போலே வாழ்கின்றார். ஊழல் செய்பவர் உத்தமர்போல ஊரை ஏய்ப்பவர் யோக்கியவர் போல காண்கின்றார்” எனும் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.