headlines

img

சொல் ஒன்று செயல் வேறு!

‘’கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு, சொல்வேறு பட்டார் தொடர்பு” என்றார் வள்ளுவர். அதாவது சொல் ஒன்று, செயல் வேறாக இருப்ப வரின் நட்பு ஒருவனுக்குக் கனவிலும் துன்பம் தரும் என்கிறார்.

அது போல் மோடி தலைமையிலான பாஜக ஒன்றிய அரசின் செயல்பாடு தொடர்ந்து, சொல்வது ஒன்றாகவும், செய்வது வேறாகவும் இருக்கிறது. 2018 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி ராணுவத்தில் ஆண்களுக்கு இணையான வாய்ப்பு பெண்களுக்கும்  வழங்கப்படும் என உறுதி யளித்தார். ஆனால் அதற்கு நேர்மாறாக தேசியப் பாதுகாப்பு அகாடமியில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் “ஒன்றிய அரசின் இந்த கொள்கை முடிவு பாலின சமத்துவத்துக்கு எதிரானது” என பகிரங்கமாகக் கண்டித்ததோடு பெண்களை அனு மதிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது.

அப்போது ஒன்றிய அரசு தற்போதைக்கு 19 பேரை மட்டும் அனுமதிக்கிறோம். அடுத்தாண்டு (2022) மே மாதத்திற்குள்  உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி அதிக பெண்களை அனுமதிக்கிறோம் என உறுதி அளித்தது. ஆனால் இந்தாண்டு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தேசியப் பாதுகாப்பு அகாடமியில் 19 பெண்கள் உட்பட 400 பேர் மட்டுமே தேர்வு செய்யப் படுவார்கள் எனத் தெரிவித்திருக்கிறது.  இது மக்களை ஏமாற்றும் மோசடியின்றி வேறு என்ன ? உச்சநீதிமன்றமும் சரியான நேரத்தில்  தலையிட்டு இந்தாண்டும் அதே எண்ணிக்கையைத் தீர்மானித்து ஏன் எனக் கேள்வி எழுப்பியிருக்கிறது.

பத்து லட்சத்து 10 ஆயிரம் பேர் கொண்ட இந்திய ராணுவத்தில் பெண் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் ஒரு விழுக்காட்டிற்கும்  குறைவாக 0.56 விழுக்காடு மட்டுமே உள்ளனர்.   இந்திய விமானப்படையில் 1.08 விழுக்காடும், கடற்படையில் 6.5 விழுக்காடும் உள்ள னர். இதுதான் ராணுவத்தில் பெண்களுக்கு மோடி அரசு சமவாய்ப்பு கொடுக்கும் லட்சணம்!. ஆனால் மறுபுறத்தில்  ஆண்களுக்கு இணையாகப் பெண்க ளின் திருமண வயதை 21 ஆக உயர்த்துகிறோம் என்கிறது. இப்படி  அறிவியலுக்குப் புறம்பாக  அட்டூழியம் செய்யும் போது கூட  கூச்சப்படுவதில்லை.'

பெண்கள் அதிகாரம் பெற பொருளாதார சுதந்திரம் அவசியம். பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என மோடி முழங்குகிறார். ஆனால் உண்மை என்ன? பாலின இடைவெளி குறி யீட்டில் 2020ல் 112ஆம் இடத்திலிருந்த இந்தியா,  2021 ல் 140 ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. குறிப்பாக பொருளாதார விவகாரங்களில்  பெண்களின் பங்கேற்பு 3 விழுக்காடு குறைந்திருக்கிறது. படிப்பறி வில்லாத பெண்கள் 34.2 விழுக்காடு இருக்கின்றனர்  என்கிறது உலக பொருளாதார மையம்.

 அவ்வளவு ஏன், நாடாளுமன்றத்தில் அதீத பலத்துடன் இருக்கும் பாஜக சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை ஏன் அமல்படுத்த வில்லை? எது தடுக்கிறது? இவர்களின் உண்மையான கொள்கை “பெண்களுடைய பிரதான கடமை பிள்ளை பெறுவதும் அதைப் பேணுவதும்” என்கிற ஆர்எஸ்எஸ் சின் மநுநீதி கோட்பாடே ஆகும்.  உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசும் மோடி உள்ளிட்ட சங்பரிவார் கூட்டத்தை ஒட்டுமொத்தமாக மக்கள் நிராகரித்திட வேண்டும். 

;