headlines

img

தேவிகுளம் ராஜாவும் தலித் கிறிஸ்தவர்களும்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவி குளம் சட்டமன்றத் தொகுதியில் இடது ஜனநாயக முன்னணி சார்பில் வெற்றி பெற்ற  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் அ.ராஜா அவர்களது வெற்றி செல்லாது என கேரள உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, அநீதியின் பக்கமிருந்து நகர்த்தப்பட்ட தீர்ப்பாக வந்துள்ளது. இத்தீர்ப்புக்கு எதிராக இடது ஜனநாயக முன்னணி மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட ராஜா வின் முன்னோர் கேரளாவின் மூணாறு குண்டலா எஸ்டேட்டில் கூலித் தொழிலாளர்களாக இடம் பெயர்ந்தவர்கள். இந்து- பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதுவரையிலும் அந்தப் பிரி வினர் என்றே அவர்களது குடும்பத்தினர் அனை வரது சான்றிதழ்களும் தெளிவாக குறிப்பிடு கின்றன. எனினும் ராஜா தனது திருமணத்தின் போது கிறிஸ்தவர்கள் அணியும் கோட்டு அணிந்தி ருந்தார் என்றும், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்ட தால் பட்டியலினத்தவர் என்ற தகுதியை இழந்து விட்டார் என்றும், “தலித் கிறிஸ்தவர்” என்பதால் அவருக்கு பட்டியலினத்தவர்க்கான இடஒதுக்கீடு இல்லையென்றும், எனவே அவரது வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டுமெனவும், எதிர்த்து போட்டியிட்ட ஐக்கிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளரான குமார் என்பவர் வழக்கு தொடுத்தார். முறையாக ஆராயாமல் கேரள உயர்நீதிமன்றம், “தலித் கிறிஸ்தவருக்கு” பட்டியலின இடஒதுக்கீடு இல்லை; எனவே ராஜா வின் தேர்தல் செல்லாது என தீர்ப்பளித்துள்ளது.

ராஜா உண்மையில் “தலித் கிறிஸ்தவர்” அல்ல; இந்து பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்தான் என்பதற்கான ஆதாரங்கள் உறுதியாக உள்ளன. நடப்பு சட்ட விதிகளின்படி உச்சநீதிமன்றம் அதை  ஆராயட்டும்.

இது ஒருபுறமிருக்க, “தலித் கிறிஸ்தவருக்கு” பட்டியலின இடஒதுக்கீடு செல்லாது என்ற சட்ட விதிகள் முற்றிலும் அநீதியானவை என்ற குரலும் ஓங்கி ஒலிக்கப்பட வேண்டிய தேவையும் அதி கரித்து வருகிறது. இந்து மதத்தைச் சேர்ந்த பட்டிய லினத்தவர்கள் சீக்கிய மதத்திற்கோ அல்லது பௌத்த மதத்திற்கோ சென்றால், அங்கும் அவர் கள் பட்டியலினத்தவர் என்றே குறிப்பிடப்படுகி றார்கள். அவர்களுக்கு ஏற்கெனவே உள்ள இட ஒதுக்கீடு பொருந்துகிறது. ஆனால் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களை தழுவுவோர் பட்டிய லின பிரிவின் கீழ் வருவதில்லை; அவர்கள் பிற் படுத்தப்பட்டோர் என குறிப்பிடப்படுகிறார்கள். 

எந்த மதத்தை தழுவினாலும் பட்டியலின மக்கள்- தலித் மக்கள் சமூக ஒடுக்குமுறையின் கொடுங் கரங்களில் சிக்கியே உள்ளனர்; அவர்க ளது சமூக அந்தஸ்தோ, பொருளாதார நிலையோ எந்தவிதத்திலும் மாறுவது இல்லை. இதற்கு அடிப்படைக் காரணம் இந்திய சமூகத்தின் நில பிரபுத்துவ - முதலாளித்துவ கட்டமைப்பும் அதன் மீது வலுவாக எழுப்பப்பட்டுள்ள வர்ணாசிரம - சாதிய கட்டுமானமும் தான். எனவே இது தகர்க் கப்படும் வரை கிறிஸ்தவர் ஆனாலும் இஸ்லாமி யர் ஆனாலும் தலித்  என்பவர் ஒடுக்கப்பட்ட வரே. அவர்களுக்கான சமூக நீதி உறுதி செய்யப்பட வேண்டும். அதற்கான குரல் வலுவடைய வேண்டும்.

;