headlines

img

“கோலம்”  கண்டு அஞ்சுவதேன்?

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு நாடு முழு வதும் கடும் எதிர்ப்பு உருவானதும் குறிப்பாக உ.பி மாநிலம் உலைக்களமானதும் பெரும் எண்ணிக் கையில் உயிரை காவு கொண்டதும் மக்களின் எதிர்ப்பு மனநிலையை மேலும் தீவிரமாக்கவே செய்துள்ளது.  தமிழகத்தின் கார்ப்பரேட் சாமியாரான ஜக்கி வாசுதேவ் குடியுரிமைச் சட்டம் பற்றி உ.பி. மாணவி யின் சந்தேகத்தைப் போக்கிடும் தெளிவான பதிலை அளித்திருக்கிறாராம். இனிமேல் அதனை கேளுங்கள் என்று பிரதமர் மோடி டுவீட் செய்கி றார். மக்களிடையே தவறான தகவல்களை பரப்பு கிறார்கள் என்று பாஜகவினரின் பல்லவியை வாந்தி யெடுத்திருக்கிறார் போலிச்சாமியா ஜக்கி.  குடியுரிமைச் சட்ட விவகாரத்தில் ஜக்கியை பயன் படுத்துவது எதற்காக? தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தை தீவிரப்படுத்துகின் றன. அதனால் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 14,125 பேர் மீது வழக்குப்பதிவு செய் துள்ளதாக நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் கூறி யுள்ளார். அவர்களது போராட்டத்தில் எத்தகைய அசம்பாவித சம்பவங்களும் நடக்கவில்லை. ஆனாலும் மக்களை அச்சுறுத்துவதற்காகவே அதிமுக அரசு இத்தகைய வழக்குகளைப் போட்டுள்ளது. இந்நிலையில் குடியுரிமைச் சட்டத்திருத் தத்தை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்று அதிமுக சிறுபான்மை பிரிவு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அந்த கட்சி யின் முன்னாள்  எம்.பி., அன்வர்ராஜா, இந்தச் சட்டத்தை ஆதரித்ததன் மூலம் அதிமுகவின் செல்வாக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறி யுள்ளார். ஆனாலும் எஜமான விசுவாசத்தில் அதிமுக அரசும் அமைச்சர்களும் பாஜகவை மிஞ்சும் விதத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். குடியுரிமைச் சட்டத்துக்கான எதிர்ப்பு வீதிக ளில் மட்டுமின்றி வீடுகளிலும் எதிரொலிக்கிறது. ‘வேண்டாம் குடியுரிமைச் சட்டம், தேசிய குடி மக்கள் பதிவேடு’ என்று வாசல்களில் கோலங்கள் மூலம் புதிய வடிவில் போராட்டம் துவங்கிவிட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் சங்கரய்யாவின் வீட்டு வாசலிலும் அந்த போர்க்கோலம் போடப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் கோலம் போடும் நிகழ்வு பற்றிப்பரவிக் கொண்டிருக்கிறது. தெர்மாகோல் புகழ் அமைச்சர் செல்லூர் ராஜூ கோலமிட்ட பெண்கள் கைது செய்யப் பட்டது காழ்ப்புணர்ச்சியினால் அல்ல; சட்டம்- ஒழுங்கை காப்பாற்றவே என்று கூறியிருக்கிறார். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை காப்பாற்ற இனிமேல் யாரும் வீட்டு வாசலில் கோலம் போடக் கூடாது என்று கூறினாலும் கூறுவார்கள்.   இந்தக் கோலம் மக்களின் உள் மன எழுச்சிக்கோலம். தமிழக மக்களின் அமைதிப் புரட்சிக் கோலம். அதனால்தான் தமிழக ஆட்சியாளர்களும் அவர்களின் எஜமான மத்திய ஆட்சியாளர்களும் வாசல் மாக்கோலம் கண்டு அஞ்சுகிறார்கள்.

;