headlines

img

கல்வியில் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம்

இந்தியா முழுவதும் கல்வி அறிவு பெற்றவர்கள் விகிதம் குறித்து தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள் ளன. இதன்படி இந்தியாவிலேயே எழுத்தறிவு பெற்றவர்கள் பட்டியலில் கேரளம் முதலிடத்தை பெற்றுள்ளது. இந்த மாநிலத்தில் 92.2 சதவீத மக்கள் எழுத்தறிவு பெற்றுள்ளனர். இதற்கு அடுத்து லட்சத்தீவில் 91.85சதவீதமும், மிசோரமில் 91.33சதவீதம் பேரும் எழுத்தறிவு பெற்றுள்ளனர். 

இந்தப் பட்டியலில் பீகார் மாநிலம்தான் கடைசி இடத்தில் உள்ளது. இங்கு 61.8சதவீத மக்கள் மட்டுமே எழுத்தறிவு பெற்றுள்ளனர். பெண்கள் எழுத்தறிவு விகிதம் 77 சதவீதமாக உள்ளது. நாடு விடுதலை பெற்ற போது இது 9சதவீதமாக இருந்தது என்பதை ஒப்பிடும்போது வளர்ச்சி என்ற போதும் இன்னமும் கூட சுமார் மூன்றில் ஒரு பகுதி பெண்கள் எழுத்தறிவு பெற வேண்டி உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 100 சதவீதம் அளவுக்கு ஆண்களும், பெண்களும் எழுத்தறிவு பெற்றவர்களாக மாறுவது அவசியம். ஆனால் இப்போது ஒன்றிய அரசு கொண்டு வந்து செயல்படுத்திக் கொண்டிருக்கும் புதிய தேசிய கல்விக் கொள்கை இதற்கு உதவாது. மாறாக, தொடர்ச்சியான தேர்வுகள், தகுதி, தரம் என்ற பெயரில் பல நிலைகளில் வடிகட்டுதல், மறைமுக குலக்கல்வி முறை போன்றவற்றால் இடைநிற்றல் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. 

இப்பொழுதே படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவ-மாணவியரின் ஒட்டுமொத்த விகிதம் 12.6சதவீதமாகவும் அதிலும் இடைநிலைக் கல்வி யுடன் இடைநிற்கும் விகிதம் 19.8 சதவீதமாகவும் உள்ளது. இடைநிற்றலில் அதிகமாக பாதிக்கப் படுவது பெண்கள் தான் என்பதும் இந்த ஆய்வில்  தெரியவந்துள்ளது. படிக்கும் காலத்திலேயே திருமணம் செய்து வைப்பது, பெண்களுக்கு படிப்பு  அவசியம் இல்லை என்ற பிற்போக்கு ஆணாதிக்க கருத்தாக்கம் போன்றவை இதற்கு காரணமாக உள்ளன. 

இந்தியாவில் கிராமப்புறங்களில் வசிப்போரில் கல்வி பெற்றவர்களின் விகிதம் 67.77சதவீத மாகவும், நகர்ப்புறங்களில் 84.11சதவீதமாகவும் உள்ளது. கிராமப்புறக் கல்விக்கு குறிப்பாக பொதுக் கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. 

கல்வித்துறையில் தனியார்மயம் அதிகரித்து வருவது மற்றும் வணிகமயமாக்கலால் கல்வி  பெறுவதில் இருப்பவர்களுக்கும் இல்லாதவர் களுக்குமான இடைவெளி அதிகரித்து வருவதை பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அடிப் படை பாடப் பிரிவுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு பயன்பாட்டு படிப்பு என்ற பெயரில் அறிமுகப் படுத்தப்படும் பாடப் பிரிவுகள் எதிர்காலத்தில் பெரும் சவாலாக மாறும் என்றும் கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர். 

கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படுவது அவசியம். அதேநேரத்தில் முறைசார்ந்த கல்விக்கு மாற்றாக ஒருபோதும் முறைசாரா கல்விமுறை இருக்காது என்பதை யும் கவனத்தில் கொண்டு திட்டங்கள் செயல்படுத் தப்பட வேண்டும். கல்வி குறித்த புள்ளிவிபரங்கள் வெறும் எண்ணிக்கையல்ல. அதுதான் நாட்டின் உண்மையான செல்வ வளம்.

;