headlines

img

நீட் - நீளும் கேடு

மருத்துவப் படிப்புக்கு நீட் எனும் நுழைவுத்தேர்வு தேவையில்லை என்ற குரல் தமிழகத்திலிருந்து ஓங்கி ஒலித்தது. நீட்  தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கு மாறு தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக இயற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு பரிசீலனை கூட செய்யாமல் குப்பைக் கூடையில் தூக்கிப் போட்டது. இந்த தீர்மானத்தின் மீதான முடிவைக்கூட தமிழக அரசுக்கு மத்திய அரசு முறையாகத் தெரிவிக்கவில்லை. இந்தப் பின்னணியில் நீட் தேர்வு அனைத்து வகையிலும் தமிழக மாணவர்களை பாதித்து வருகிறது என்பது கண்கூடாக தெரிகிறது. கடந்த ஆண்டு நடந்த நீட் நுழைவுத் தேர்வில் கிராமப்புறங்களில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் நீட் எனும் நெருப்பு வளையத்தை தாண்ட முடியவில்லை.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதற்குப் பதிலாக, இதற்கான பயிற்சி மையங்களை மாநில அரசே நடத்தி மாணவர்களை தயார்ப்படுத்தும் என்று அதிமுக அரசு கூறியது. ஆனால் தற்போது பல்வேறு குளறுபடிகளால் நீட் பயிற்சி வகுப்புகளை தொடங்க முடியவில்லை என்றும் பல பயிற்சி மையங்கள் மூடப்பட்டுவிட்டன என்றும் தகவல்கள் கூறுகின்றன. மாநில அரசே இதை மறுக்கமுடியாமல் ஒப்புக்கொண்டுள்ளது.

மறுபுறத்தில் தமிழகத்திலிருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் 17சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. கடந்த ஆண்டை விட தேசிய அளவில் 74ஆயிரம் பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ள நிலையில் தமிழகத்திலிருந்து விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 1லட்சத்து 40ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் இந்த ஆண்டு இதுவரை 1லட்சத்து 17ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். 

கடந்த ஆண்டு பெரும்பாலான மாணவர்களால் நீட் தேர்வில் வெற்றிபெற முடியவில்லை. அப்படியே தேர்வு பெற்றாலும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் தனியார் மருத்துவக் கல்லூரிகளை நோக்கி தள்ளிவிடப்பட்டனர். அங்கு வசூலிக்கப் படும் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு பயந்து பலரும் அதில் சேரவில்லை. 

நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களை நடத்துவது மட்டும் இப்பிரச்சனைக்கு தீர்வு அல்ல என்பது தெளிவாக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் தேர்வை முற்றாக ரத்து செய்வதற்கான அழுத்தத்தை மாநில அரசு கொடுக்க  வேண்டும். மோடி அரசுக்கு அடிபணிந்து கண்டுகொள்ளாமல் இருந்தால் தமிழகத்திற்கு மிகப்பெரிய தீங்கை அதிமுக அரசு செய்கிறது என்றே பொருள்படும்.

;