headlines

img

பொங்கல் பரிசா? தேர்தல் பரிவா?

பொங்கல் பரிசாக ரூ.2,500 மற்றும் ஒரு கோடியே 80 லட்சம் எண்ணிக்கையில் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்துள்ளார். இத்துடன் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.5604.84 கோடி நிதி ஒதுக்கீடுசெய்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டுமே இந்த தொகை மற்றும் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்களும் அதைஅரிசி அட்டைகளாக மாற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன்படி 1,64,083 பேருக்கு சர்க்கரை அட்டைகள் அரிசி அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளன. 

சட்டமன்றத் தேர்தல் வரும் ஆண்டில் நடைபெறவுள்ள நிலையில் அதை மனதில் கொண்டேஅரசு செலவில் அதிமுக பிரச்சாரத்தின் ஒருபகுதியாக பொங்கல் பரிசுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. அரசு விழாக்களையெல்லாம் அதிமுக விழாக்களாகவே நடத்தி வருகின்றனர். முதல்வர் மற்றும் அமைச்சர்கள்  அரசு விழாக்களில் மரபுகளுக்கு மாறாக கொஞ்சம் கூட நாகரிகமில்லாமல்எதிர்க்கட்சிகள் மீது அவதூறு செய்கின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் முதல்வரும், துணை முதல்வரும் போட்டி போட்டுக் கொண்டு பாஜகவுடனான கூட்டணி தொடரும் என்று அறிவித்தனர். அமித்ஷாவும் இதை ஆமோதித்தார். இது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. 

கொரோனா மற்றும் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்கள் பொங்கல் பண்டிகையை சிரமமின்றி கொண்டாடுவதற்காக இந்த தொகை வழங்கப்படுவதாக முதல்வர் கூறியுள்ளார். தமிழகமக்களை கொரோனா நோய்த் தொற்றும், ஊரடங்கும் கொத்தித் தின்று கொண்டிருந்தபோது மக்கள் தாங்க முடியாத சுமையோடு குடும்பங்களை நடத்த வழியின்றி விழிபிதுங்கி நின்ற போதுகுறைந்தபட்சம் மாதத்திற்கு ரூ.7,500 வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஉட்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் வலியுறுத்தின. ஆனால் அரசு அதை கண்டு கொள்ளவில்லை. அதைபோல முறைசாரா தொழிலாளர் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச நிவாரணம் கூட வழங்கப்படவில்லை.

கொரோனா காலத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள்,காவல்துறையினர், உள்ளாட்சி தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த எந்த ஒரு ஊக்கத்தொகையும் வழங்கப்படவில்லை. பணியின்போது கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு இறந்தஅரசு பணியாளர்களுக்கு கூட உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. அப்போதெல்லாம் கொரோனா பாதிப்பு குறித்து பேசாத மாநில ஆட்சியாளர்கள் இப்போது திடீர் கரிசனம் காட்டுவது தேர்தலை மனதில் கொண்டே என்பது வெளிப்படை. ஆனாலும் தமிழக மக்கள் கடந்த ஐந்தாண்டுகால அனுபவத்திலிருந்தே இந்த அரசை மதிப்பீடுசெய்வார்கள். அதிமுக அரசை அகற்றுவார்கள்.தங்களது வாழ்க்கையை மங்க வைத்த மத்திய, மாநில ஆட்சியாளர்களை மக்கள் புரிந்தே வைத்திருக்கிறார்கள்.

;