headlines

img

தேசக் குடிமக்கள் பதிவேடு நடைமுறை

உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படி, வரும் ஜூலை 31 அன்று, அஸ்ஸாமில் குடிமக்களைக் கணக்கிடும் பணியை முடித்து, இறுதிப் பட்டியலை வெளியிடுவதுடன், குடிமக்கள் தேசப் பதிவேடு நடைமுறை முடித்துக்கொள்ளப்பட இருக்கிறது. இதற்கான நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ள விதம் அடுக்கடுக்கான ஐயங்களை ஏற்படுத்தி இருக்கிறது. உண்மையான இந்தியக் குடிமக்களை இப்பதிவேட்டில் இணைப்பது தொடர்பாக மிகப்பெரிய அளவில் சட்டரீதியாகவே பிழைகள் நடந்துள்ளன என்பதை அவை காட்டுகின்றன.

சென்ற ஆண்டு, 2018 ஜூலை 30 அன்று வெளியிடப்பட்ட குடிமக்கள் தேசப் பதிவேட்டின் வரைவுப் பட்டியலில் விண்ணப்பித்திருந்த 3 கோடியே 29 லட்சம் விண்ணப்பதாரர்களில் 40 லட்சத்து 70 ஆயிரம் பேர் நீக்கப்பட்டிருந்தார்கள். இவ்வாறு நீக்கப்பட்டவர்கள், தற்போதுள்ள நடைமுறைகளின்படி தங்களைப் பதிவேட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மனுச் செய்து கொள்ள முடியும். அதேபோன்று, சேர்க்கப்பட்டிருப்பவர்களும்கூட ஏதேனும் ஆட்சேபணைகள் இருந்தாலும் அவற்றைக் கூறி, மனுச்செய்து கொள்ள முடியும்.

இந்த நடைமுறை முடிந்தபின்னர், இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஜூலை 31அன்று வெளியிடப்படும் என்றிருந்தது. எனினும், இந்த ஆண்டு ஜூன் 26 அன்று, அதிகாரிகளால் குடிமக்கள் தேசப் பதிவேட்டிலிருந்து மேலும் கூடுதலாக 1,02,462 பேர் தகுதியற்றவர்கள் எனக்கூறப்பட்டு நீக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு நீக்கப்பட்டவர்கள், வாக்காளர் பட்டியலில் ஐயத்திற்கிடமான வகையினர் என்றோ, அல்லது, அந்நியர்கள் நடுவர்கள் மன்றங்களின் (Foreigners Tribunas) முன்புஇ அந்நியர்கள் என்று சந்தேகிக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள்  என்றோ வகைப்படுத்தப்பட்டிருந்த “டி” (“D”) வகையைச் சேர்ந்தவர்கள். இவ்வாறு “டி” வகையினத்தில் சேர்க்கப்படிருந்த அனைத்து நபர்களும் நீக்கப்பட்டிருப்பது, பல கேள்விகளை எழுப்பி இருக்கின்றன.

இவர்கள் மேற்கொண்டுள்ள நடைமுறையில் சட்டப்படி தடைசெய்யத்தக்க எண்ணற்ற பிழைகள் மலிந்திருப்பதை ஊடகங்களில் வெளியான சில  வழக்குகளிலிருந்து நன்கு காண முடியும். அவற்றில் முகமது சனானுல்லா வழக்கு ஒன்றாகும். இவர் ராணுவத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேல் அதிகாரியாகப் பணிபுரிந்தவர். எல்லைப் பாதுகாப்புப் படையில் உதவி காவல் ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தவர். இவருடைய பெயர் “டி” வகையினத்தின் கீழான பட்டியலில் இருந்து, அந்நியர்கள் நடுவர் மன்றம் அவரை ஓர் அந்நியர் என்று பிரகடனம் செய்தது.  அவர் அஸ்ஸாமில் பிறந்திருந்த போதிலும், அவர் பிறந்த இடத்தில் மிகவும் ஆழமான முறையில் குடும்பத்தின் வேர்களை அவர் பெற்றிருந்தபோதிலும், அவர் ஓர் அந்நியர் என்று பிரகடனம் செய்யப்பட்டார். பின்னர் அவர் தடுப்புக்காவல் முகாமிற்கு அனுப்பப்பட்டிருந்தார். உயர் நீதிமன்றத்தில் பிணை பெற்ற பின்னர் பத்து நாட்கள் கழித்துத் தான் அவரால் வெளியே வர முடிந்தது.

மற்றொரு வழக்கு, சுனிர்மால் பக்சியினுடையதாகும். 2018 ஜூலையில் வெளியிடப்பட்டிருந்த வரைவுப் பட்டியலில் இவருடைய பெயர் இருந்தது. எனினும், வரைவு தேசக் குடிமக்கள் பதிவேட்டிலிருந்த இவரது பெயர் அதிலிருந்து அடிக்கப்பட்டு, இந்த ஆண்டு ஜூனில் வெளியிடப்பட்ட ‘கூடுதல் நீக்கப்பட்டவர்கள்’ பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது. அவர் ஓர் அந்நியர் என்று பிரகடனம் செய்யப்பட்டதுதான் இதற்குக் காரணமாகும். பாக்சி, 1943 செப்டம்பர் 21 அன்ற சில்சார் நகரத்தில் பிறந்தவர். அவர் எப்படி ஓர் அந்நியராவார் என்று விளக்கம் கோரப்பட்டது. இப்போது என்ஆர்சி (NRC) அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? அது ஓர் எழுத்தர் பிழையாம். (clerical error)

மற்றுமொரு சங்கடத்தை உள்ளாக்கும் அம்சம், மதுபாலா என்பவர் வழக்காகும். இவர் சிராங் மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் ஏழை விதவை. இவர் ‘அந்நியர்கள் நடுவர்’ மன்றத்தினால் ஓர் அந்நியர் என முத்திரை குத்தப்பட்டு, தடுப்புக்காவல் முகாமில் மூன்றாண்டு காலம் இருத்தி வைக்கப்பட்டிருந்தார். சமீபத்தில், மதுபாலா என்ற பெயருடைய இன்னொருவருக்குப் பதிலாக இவர், தவறாக இருத்தி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டு, தடுப்புக்காவல் முகாமிலிருந்து, விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் இவ்வாறு சட்டவிரோதமானமுறையில் தடுப்புக்காவலில் இவர் இருத்தி வைக்கப்பட்டிருந்ததற்காக இழப்பீடு இவருக்கு வழங்கப்படுவது குறித்து எதுவும் கூறப்படவில்லை.

இதேபோன்று எண்ணற்ற வழக்குகள். தந்தை நீக்கப்பட்டிருக்கிறார், மகன் சேர்க்கப்பட்டிருக்கிறார். அல்லது சகோதர சகோதரிகளில் ஒருவர் நீக்கப்பட்டிருக்கிறார், மற்றொருவர் இடம்பெற்றிருக்கிறார்.     

மத்திய பாஜக அரசாங்கம், வங்கதேசத்திலிருந்து வந்து சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்களைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று திரும்பத்திரும்பக் கூறிக் கொண்டிருக்கிறது.  தற்போது உள்துறை அமைச்சராகியிருக்கும் அமித் ஷா, அவர்களை, “கறையான்கள்” என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது அழைத்திருந்தார். மேலும், மோடி அரசாங்கமானது இந்தக் குடிமக்கள் தேசப் பதிவேட்டை மேற்கு வங்கத்திற்கும், வங்க தேசத்தை எல்லையாகக் கொண்டிருக்கும் மாநிலங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கிறது. இங்கே வாழும் முஸ்லீம் குடிமக்கள் இவர்களால் குறி வைக்கப்பட்டிருக் கிறார்கள் என்கிற அச்சம் எழுந்திருக்கிறத.

அதேசமயத்தில், பாஜக, வங்கதேசத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்துள்ள இந்துக்களுக்கு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவந்தபின்பு, குடியுரிமை வழங்கப்படும் என்று உறுதியளித்துக் கொண்டிருக்கிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேலும் ஒருபடி சென்று, ஜூலை 1 அன்று மாநிலங்களவையில்,  தேசக் குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டுள்ள“இந்து அகதிகளுக்கு” குடியுரிமை அளிப்பதற்காக ஒரு சட்டமுன்வடிவை அரசாங்கம் கொண்டுவர இருக்கிறது என்று கூறினார்.

அந்நியர்களை ஒதுக்கிவிட்டு மீதம் உள்ள அனைத்து இந்தியக் குடிமக்களையும் பதிவு செய்திட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு கொண்டுவரப்பட்ட குடிமக்கள் தேசப் பதிவேட்டின் நடைமுறை, பாஜக அரசாங்கத்தினால் மக்களை மதரீதியில் பிளவுபடுத்தும் குறுகிய தங்களுடைய நோக்கத்திற்காகக் கடத்திச் செல்லும் அபாயம் இப்போது ஏற்பட்டிருக்கிறது.

அஸ்ஸாமில் குடிமக்கள் தேசப் பதிவேடு நடைமுறை எழுப்பியுள்ள எண்ணற்ற பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. குடிமக்கள் தேசப் பதிவேடு இறுதிப் பட்டியல் வெளிவந்தபின்னர், அதிகாரவர்க்கத்தினரின் தவறுகள் மற்றும் குறைபாடுகள் காரணமாகவோ அல்லது ஆட்சியாளர்களின் மதவெறி சித்தாந்தத்தின் காரணமாகவோ,  நியாயமற்றமுறையில் அல்லது தவறான முறையில் நீக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கிட, சட்ட நடைமுறைகளை விரைவுபடுத்த வேண்டியிருக்கிறது.  இவ்வாறு குடிமக்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்படும் பல லட்சக்கணக்கானவர்களின் கதி என்ன? அவர்கள் “குடிமக்கள் அல்ல” என்று முத்திரைகுத்தப்பட்டுவிட்டதால், நாட்டில் அவர்களுடைய தகுநிலை (status) மற்றும் உரிமைகள் என்னவாக இருந்திடும்? அந்நியர்கள் நடுவர் மன்றத்தால், அந்நியர்கள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள், மீண்டும் வங்க தேசத்திற்குத் திருப்பி அனுப்பமுடியாது என்று ஏற்கனவே தெளிவான முறையில் முடிவு செய்யப்பட்டுவிட்டதால், (வங்கதேசம் அவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மறுத்துவிட்டது) அவர்கள் நம்முடைய தடுப்புக்காவல் முகாம்களில்  காலவரையறையின்றி வைக்கப்பட்டு, அல்லல்படும் அவலநிலைக்கு உள்ளாக வேண்டியிருக்குமா?

தேசக் குடிமக்கள் பதிவேட்டை உருவாக்கித்தந்து அதனை மேற்பார்வையிட்டுவரும் உச்சநீதிமன்றம், இப்பிரச்சனைகளுக்குப் பதில் சொல்வதற்கான பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது. இந்தியக் குடியுரிமை மற்றும் இந்தியக் குடிமக்களின் உரிமைகள் சம்பந்தமான அடிப்படைப் பிரச்சனைகள் இவற்றில் அடங்கியிருக்கின்றன.

குடிமக்கள் தேசப் பதிவேட்டின் அமலாக்கத்தில் சட்டபூர்வமான முறையிலேயே ஏற்பட்டிருக்கின்ற பிழைகளைச் சரிசெய்வதில் எவ்விதத்தில் தோல்வி ஏற்பட்டாலும் அது, பிரஜா உரிமைகள் மற்றும் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறுவதற்கே வழிவகுத்திடும். மாபெரும் ஜனநாயக நாடு என்றும் சட்டபூர்வமாக இயங்கும் ஒரு சமூகம் என்றும் தற்போது சர்வதேச அளவில் இந்தியாவிற்கு இருந்து வரும் மதிப்பும் மரியாதையும் மிகவும் மோசமானமுறையில் மாசடைந்து கறைபடிந்துவிடும்.  

இறுதிப்பட்டியல் வெளியிடப்படுவதற்கான தேதி ஜூலை 31 என்று இருக்கக்கூடிய இத்தருணத்தில், திடீரென்று மத்திய அரசும் அஸ்ஸாம் மாநில அரசும் புதியதொரு வேண்டுகோளுடன் உச்சநீதிமன்றத்தை அணுகியிருக்கின்றன. இறுதிப்பட்டியலை அளிப்பதற்கான காலக்கெடுவை ஜூலை 31இலிருந்து மேலும் கொஞ்ச காலத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்று அவை  கோரி இருக்கின்றன. அதே சமயத்தில், அவை, 2018 ஜூலை 30 அன்று வெளியிடப்பட்ட குடிமக்கள் தேசப் பதிவேட்டின் வரையில் சேர்க்கப்பட்டிருந்த பெயர்களின் மறு சரிபார்ப்பு மாதிரி (sample re-verification)யைக் கோரியிருக்கின்றன. வங்கதேசத்தின் எல்லைகளில் உள்ள மாவட்டங்களில் சேர்க்கப்பட்டவர்களின் பெயர்களில் 20 சதவீதம் மறு சரிபார்ப்பு மாதிரி (20 per cent sample re-verification) மற்றும் மாநிலத்தின் இதர பகுதிகளிலிருந்து 10 சதவீத மறு சரிபார்ப்பு மாதிரி தேவை என்று கோரியிருக்கின்றன. ஏதோ ஒரு நோக்கத்துடனேயே இவைகள் இவ்வாறு கோரப்பட்டிருக்கின்றன. அப்பகுதிகளில் வாழும் லட்சக்கணக்கான மக்களை மேலும் தொல்லைகொடுத்து நச்சரிக்க வேண்டும் என்ற விதத்திலேயே இவ்வாறு இவைகள் கோரப்பட்டிருக்கின்றன.

இந்நடவடிக்கை உறுதியுடன் எதிர்க்கப்பட வேண்டும். வங்கதேசத்திலிருந்து வந்துள்ள இந்து அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமையை அளிக்கக்கூடிய விதத்தில் குடியுரிமைச் சட்டத்தைத் திருத்தும் வரையிலும் குடிமக்கள் தேசப் பதிவேட்டை இறுதிப்படுத்தும் நடைமுறையைக் காலதாமதப்படுத்த வேண்டும் என்றே மோடி அரசாங்கம் விரும்புவதாகத் தெரிகிறது. இவ்வாறு குடியுரிமைச் சட்டம் மதவெறி அடிப்படையில் மாற்றப்படுமானால் அது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதும், பிளவுபடுத்தக்கூடியதுமாகும்.

(ஜூலை 17, 2019)

(தமிழில்: ச. வீரமணி)

Attachments area

;