headlines

img

ஆதிச்சநல்லூரில் வெளிச்சம் பரவட்டும்

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ள பொருட்கள் கி.மு.900 ஆண்டுகளுக்கு முந்தியவை என்று மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தெரிவித்துள்ளது. ஆதிச்சநல்லூர் தொடர்பான அறிக்கையை வெளியிட வேண்டும் எனதொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது நியாயமானது என்பதையே இது வெளிப்படுத்துகிறது.1904ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி தான் இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் அகழ்வாய்வு ஆகும். அதன்பின்பே 1924ஆம் ஆண்டு சிந்துசமவெளி மற்றும் அரிக்க மேடு பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மத்திய தொல்லியல் துறையின் அனுமதியோடு 2004ஆம்ஆண்டு முதல் ஆதிச்சநல்லூரில் தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டன. நான்கு தொகுதிகளாக இந்த ஆய்வறிக்கை தொகுக்கப்பட்ட நிலையிலும் அதை வெளியிடாமல் திட்டமிட்டு முடக்கினர். இந்தநிலையில் தான் ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருள் கி.மு.900 ஆண்டுக்கு முந்தியவை என்று மத்திய அரசே ஒப்புக்கொண்டுள்ளது. கார்பன் டேட்டிங் பரிசோதனையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பான ஆய்வறிக்கையை தயாரிப்பதற்கு கால அவகாசம் தேவை என்று மத்திய தொல்லியல் துறை கூறியுள்ளது ஏற்கத்தக்கதல்ல. 


ஆதிச்சநல்லூரும், கீழடியும் தமிழர்களின் தொன்மைக்கு சான்று பகர்வதாக அமைந்துள்ளன. இதை இந்திய நாகரிகத்தின் முதன்மையான கண்டுபிடிப்பாக கருதி மத்திய அரசு ஆய்வு முடிவுகளை வெளியிட்டு உலகிற்குஉண்மையை உணர்த்தியிருக்க வேண்டும். ஆதிச்சநல்லூரிலும்,கீழடியிலும் தொய்வின்றி அகழ்வாராய்ச்சி நடைபெற வழி செய்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது நேர்மாறானது. இந்த ஆய்வுகளை மண்மூடி புதைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் மத்தியில் உள்ள மோடி அரசு செய்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் இந்தியாவின் தொன்மையான மொழியாக தமிழ்மொழியே இருந்திருக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். கீழடியும், ஆதிச்சநல்லூரும் கூறும் உண்மைகளை முழுமையாக கண்டறிந்தால் இந்தியாவின் தொன்மை வரலாற்றை தமிழகத்திலிருந்து துவங்க வேண்டியிருக்கும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறி வந்ததன் பொருள் இப்போது தெளிவாகியுள்ளது.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு தன்னுடைய தேர்தல் அறிக்கையில், கீழடி, ஆதிச்சநல்லூரில் மத்திய அரசின் தொல் பொருள் ஆய்வுத்துறையின் சார்பில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும், இதற்கு தேவையான தொகை உடனடியாக ஒதுக்கப்படும் என்றும், கிடைத்துள்ள தொல் பொருட்களில் அதிகமான அளவு கார்பன் டேட்டிங் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. கீழடி, ஆதிச்சநல்லூரின் மீது வெளிச்சம் பரவ வேண்டுமானால் இப்போது மத்தியில் உள்ளவன்மம் கொண்ட இருள் ஆட்சி அகற்றப்பட வேண்டும். 

;