கோவிட் 19 தொற்றுப் பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் மிகப் பெரும் பொருளாதார நெருக்கடி முற்றியுள்ளது. இந்த நெருக்கடியை ஒப்புக்கொள்ளவோ, தரவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்து தீர்வு காணவோ நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசிடம் எந்த திட்டமும் இல்லை. இதன் காரணமாக ஒட்டுமொத்த நாட்டு மக்களின் வாழ்வும் துன்ப துயரத்தில் ஆழ்த்தப்பட்டிருக்கிறது என்பதுஒருபுறமிருக்க, மாநில அரசுகளும் மிகப் பெரும் கடன் வலையில் சிக்க வைக்கப்பட்டுள்ளன.
மாநிலங்களுக்கு சேர வேண்டிய ஜிஎஸ்டிவருவாயின் பங்குத் தொகையை கொடுக்காமல்பகிரங்கமாக ஏமாற்றியுள்ள மோடி அரசின் நிதியமைச்சர், கடன் வாங்கி சமாளித்துக் கொள்ளுங்கள் அல்லது 2022 வரை காத்திருங்கள் என்று கூறி கைவிரித்து விட்டார். ஏற்கெனவே புயல் நிவாரணங்கள் ஏமாற்றப்பட்டன. கொரோனா தொற்று பரவியவுடன் மக்களை காப்பதற்கு மாநில அரசுகள் கேட்ட நிதி கிடைக்கவில்லை. ஜிஎஸ்டி பங்குத் தொகையும் ஏப்பம் விடப்பட்டுவிட்டது. மோடி அரசின் இத்தகைய தாக்குதல்களால் மிக அதிகமாக நிலைகுலைந்திருக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. 2020-21 நிதியாண்டில் தற்போது வரை தமிழக அரசு ரூ.50 ஆயிரம் கோடியை கடனாக வாங்கியிருக்கிறது. இது கடந்த நிதியாண்டில் இதே காலத்தில் கடனாக பெற்ற ரூ.24,190 கோடியுடன் ஒப்பிடும் போது 107 சதவீதம் அதிகமாகும். மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் பட்டியலிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரம் ரூ.52,500 கோடி கடன் வாங்கியிருக்கிறது.
அதுமட்டுமல்ல, மத்திய தலைமை கணக்குதணிக்கை அதிகாரியின் (சிஏஜி) அறிக்கையின்படி, தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறை என்பதுநடப்பு நிதியாண்டில் ஜூலை மாதம் வரை ரூ.21,833.48 கோடியாக உள்ளது. நிதி பற்றாக்குறை அதிகரிப்பு என்பதன் பொருள் என்னவென்றால், சம்பந்தப்பட்ட அரசு அந்த அளவிற்கு மக்களுக்கான நிவாரணங்களையும், நிதி நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறது என்பதேயாகும். ஆனால் இங்கே, தமிழக அரசு அப்படிஒன்றும் தமிழக மக்களுக்கு நிவாரணத்தை வாரிவழங்கிடவில்லை. கொரோனா தொற்றுக் காலத்தில் மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கடினமான நிலைக்குத்தான் தள்ளப்பட்டார்கள். அப்படியானால் இந்த பணம் எங்கே செல்கிறது? இந்த பணம், அரசின் அன்றாட செலவுகளுக்கு சென்றுக் கொண்டிருக்கிறது. தொழில்கள் முடங்கியுள்ள நிலையில் அரசுக்கு வரவேண்டிய வருவாய் இனங்கள் குறைந்துள்ள நிலையில் அன்றாட செலவுகளுக்கே அரசு அல்லாடுகிறது என்பதேசிஏஜி அறிக்கையின் சாராம்சமாகும். ஏற்கெனவே தமிழகம் ரூ.4 லட்சம் கோடி கடனுடன், இந்தியாவின் மூன்றாவது பெரிய கடனாளி மாநிலமாக இருக்கிறது. அதிமுக ஆட்சியில் தொடர்ந்துகடன் அதிகரித்தே வந்திருக்கிறது. ஆனால் இதற்கான தீர்வுதான் அதிமுக அரசிடம் இல்லை.