headlines

img

ஆர்எஸ்எஸ் உத்தரவின் அர்த்தம் என்ன?

மத்தியில் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு மீண்டும் பொறுப்பேற்க உள்ள நிலையில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், அயோத்தியில் ராமர் கோவிலை கட்டி முடிக்க வேண்டும் என்று கூறியிருப்பதை ஒருவேண்டுகோள் என்றோ, ஆலோசனை என்றோ கடந்து சென்று விட முடியாது. ஆர்எஸ்எஸ் என்கிற பாசிச பாணி அமைப்பின் அரசியல் முகமாக விளங்குகிற பாஜகவிற்கு அதை நடத்துகிற நிறுவனம் இட்டுள்ள கட்டளை என்றே கருத வேண்டும். அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டும் பணியை விரைவில் துவங்குவது குறித்து வெளிப்படையாக மோடி அறிவிக்க வேண்டும் என்று மோகன் பகவத் கட்டளையிட்டுள்ளார்.

நாட்டு மக்கள் அன்றாடம் சந்தித்துக் கொண்டிருக்கிற வாழ்வாதார பிரச்சனைகளை திசைதிருப்பும் வகையில் குறுகிய தேசிய இன வெறியைதூண்டிவிடும் வகையிலும், மக்களிடம் பகைமை தீயை மூட்டும் வகையிலும்தான் பாஜகவின் தேர்தல் பிரச்சாரம் அமைந்திருந்தது. இதன் மூலம் பெரும்பாலான வட மாநிலங்களில் அவர்களால் வெற்றி பெற முடிந்தது. இந்த நிலையில், ஒரு மிகப்பெரிய கலவரத்திற்கு கால்கோள் விழாநடத்தும் வகையில்தான் ஆர்எஸ்எஸ் மீண்டும் அயோத்தி பிரச்சனையை பற்ற வைத்துள்ளது.அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை இடித்தது தொடர்பான வழக்கும், அந்த இடம் யாருக்கு உரியது என்பது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் உள்ளது.இதனிடையே பிரச்சனைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுமானப் பணியை துவக்கவேண்டும் என்று தூண்டிவிடுவது உச்சநீதிமன்றத்தையே துச்சமென மதிக்கும் அகம்பாவமாகும். வழக்கு முடியாத நிலையில் எப்படி கட்டுமானப் பணியை துவங்க முடியும்? அவர்களுடைய திட்டம் என்னவென்றால் மத்திய ஆட்சிஅதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றத்தை புறக்கணிக்கவும், சட்டத்தை மீறவும் தயங்க மாட்டோம் என்பதுதான். 

பாபர் மசூதியை இடிப்பதற்கு முன்பு அத்வானிதலைமையில் ரதயாத்திரை நடத்தியும் அதன்பின்புபாபர் மசூதியை இடித்தும் இந்தியாவின் மதச்சார்பின்மை மீது மிகப்பெரிய தாக்குதலை தொடுத்தனர்.இதன் மூலம் மக்களிடையே அடையாள அரசியலை புகுத்தினர். இதே உத்தியை பாஜக தொடர்ந்துபயன்படுத்தி வருகிறது. அதை தீவிரப்படுத்த வேண்டும் என்பதுதான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கட்டளை.இன்னொரு இந்துத்துவா தலைவரான மொராரி பாபு என்பவர் ராமர் கோவில் கட்டும் பணிதாமதமானால் தடைகளை கடந்து அந்தப் பணியை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். பகவத் கூறுவதன் உள்ளடக்கமும் இதுதான். நீதிமன்ற வழக்குகளை பற்றி கவலைப்படாமல் கோவில்கட்டுவது என்கிற பெயரில் மீண்டும் ஒரு கலவரத்தை நடத்துங்கள் என்று ஆர்எஸ்எஸ் கட்டளையிடுகிறது. மோடி ஆட்சி என்பது மறைமுகஆர்எஸ்எஸ் ஆட்சிதான். எனவே மதச்சார்பற்ற,ஜனநாயக சக்திகள் மிகுந்த விழிப்போடும், மிகுந்தஒற்றுமையோடும் இருக்க வேண்டிய காலமிது.  

;