headlines

img

நடுங்க வைக்கும் புல்டோசர் தாக்குதல்

பாரதிய ஜனதா கட்சிக்கு தாமரை சின்னத்திற்கு பதிலாக புல்டோசரை தேர்தல் சின்னமாக ஒதுக்கி விடலாம் போலிருக்கிறது. அந்த அளவுக்கு தங்களை எதிர்த்து போராடுபவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு தகர்ப்பது என்ற புது  வகையான அடக்குமுறை கருவியை பாஜகவினர் கையில் எடுத்துள்ளனர். தலைநகர் புதுதில்லியில் நீதிமன்ற உத்தரவையும் மீறி இஸ்லாமிய மக்களின் குடியிருப்புகளை இடிக்க முயன்ற போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தா காரத்  ஆவேசமாக புல்டோசர் முன்பு நின்று வாதிட்டு அந்த அக்கிரமத்தை தடுத்து நிறுத்தினார். 

இப்போது உ.பி.யில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு அன்றாடம் புல்டோசர்களைக் கொண்டு போராடுபவர்களின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கி வருகிறது. 

பாஜகவின் செய்தித் தொடர்பாளரான நூபுர் சர்மா என்பவர் கண்ணியத்திற்குரிய முகமது நபி குறித்து அவதூறான கருத்துக்களை கக்கினார். இதனால் இஸ்லாமிய நாடுகள் பலவும் மோடி அரசுக்கு கண்டனம் தெரிவித்தன. இதனால் உலக அரங்கில் இந்தியா தனிமைப்படும் நிலையை பாஜக உருவாக்கியது. 

நூபுர்சர்மா மீது வழக்கு தொடுக்கப்பட்டிருப்ப தாகவும் அவர் பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர் இதுவரை கைது செய்யப்பட வில்லை. இந்நிலையில் நாடு முழுவதும் இஸ்லாமிய மக்கள் பாஜகவினருக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதை உ.பி. மாநில பாஜக அரசு எதிர்கொள்ளும் விதம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.  சகரன்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற தாகக் கூறி முஸம்மில் மற்றும் அப்துல் வக்கீர் ஆகிய இருவரது வீடுகள் புல்டோசரால் இடித்து  தள்ளப்பட்டன. கான்பூரில் தொழிலதிபர் முகமது  இஷ்தியாக் என்பவரது வீடும் இடித்து தரைமட்ட மாக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டவை என்று உ.பி. மாநில நிர்வாகம் புனைந்துரைக்கிறது. ஹத்ராஸ், பிரயாக் ராஜ், மொராதாபாத், பெரோசாபாத், அம்பேத்கர் நகர் ஆகிய இடங்களிலும் இஸ்லாமிய மக்களின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் ஆக்கிரமிப்புக் கட்டிடங்கள் என்று  கூறுகிறது  யோகி அரசு. இவர்கள் அனைவருமே இஸ்லாமியர்களாக இருப்பது இயல்பான ஒன்றல்ல. 

மாநிலம் முழுவதும் இஸ்லாமிய மக்களின் குடியிருப்புகள் திட்டமிட்டு இடிக்கப்படுகின்றன. பாஜக ஆளும் குஜராத், கர்நாடகம், உத்தரகண்ட்  ஆகிய மாநிலங்களிலும் இஸ்லாமிய மக்களுக்கு  எதிராக புல்டோசர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இது மனித உரிமைக்கும் வாழ்வுரிமைக்கும் எதிரான சட்டவிரோத நடவடிக்கையாகும். இதை  ஒட்டுமொத்த இந்தியாவும் கண்டிக்க வேண்டும். இவர்கள் கையில் நாடு தொடர்ந்தால் வீடுகளை மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டையும் இடித்து விடுவார்கள்.