headlines

img

நதி பாதுகாப்பும், சனாதன உருட்டும்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேவையற்ற முறையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இந்தியாவின் பாரம்பரியம் என்பது சனாதனம் என்று அவர் ஏற்கெனவே பேசியிருக்கிறார். இந்தியா வில் பல்வேறு மதங்கள், நம்பிக்கைகள், பண்பாடு பின்பற்றப்படுகிறது. இதுதான் இந்தியாவின் பேரழகு. சனாதனம் என்பது ஒருகுறிப்பிட்ட தத்துவம் ஆகும். இந்து மதத்தை பின்பற்றுப வர்கள் அனைவரும் சனாதனத்தை நம்புபவர் கள் என்று கூற முடியாது. 

குல தெய்வ வழிபாடு உட்பட பல்வேறு மத  நம்பிக்கைகளை உள்ளடக்கியதாகவே இந்து மதம் என்பது உருவாக்கப்பட்டது. இப்போதும் கூட  இந்து மதம் என்று பொதுவாக குறிப்பிடப்படு வோர்களின் பல்வேறு பிரிவினர் உண்டு. சனா தனம் என்பது பிறப்பின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு கற்பிக்கிற, பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத்துகிற ஒன்றாகவே உள்ளது. 

ஆனால் அனைத்து மத தத்துவங்களையும் சனாதன குடுவைக்குள் அடைக்க ஆளுநர் ரவி முயல்கிறார். வேலூரில் பாரதிய சன்னியாசிகள் சங்கம், ஸ்ரீநாராயண பீடம் இணைந்து நடத்திய பாலாறு பெருவிழாவில் பேசிய ஆளுநர் நதிகளை வழிபடுவதே சனாதனம் என்று கூறி யுள்ளார்.

நதிகளை பாதுகாக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. நதிகளை பாதுகாப்பதற்கும் சனாதனத்திற்கும் என்ன தொடர்பு? நதிகள் என்பது இயற்கை அளித்துள்ள கொடை. அது அனைவருக்கும் பொதுவானது. ஆனால் நதிகளை நாம் தெய்வங்களாக நினைத்து வணங்க வேண்டும். அப்போதுதான் அவைகளை பாதுகாக்க முடியும் என்று ஆளுநர் கூறியுள்ளார்.

நதிகளை பாதுகாக்க வேண்டுமென்றால் அவற்றை தெய்வமாக வணங்க வேண்டிய அவசி யம் இல்லை. அனைத்து மதத்தினரும் அவ்வாறு கருதுவதும் இல்லை. நதிகளை தெய்வமாக நினைக்கிறோம் என்று கூறுகிற அனைவரும் இயற்கையை பாதுகாப்பவர்களாகவும் இல்லை. 

உதாரணமாக ஜக்கி வாசுதேவ் என்ற கார்ப்பரேட் சாமியார் காவிரியை பாதுகாக்க வேண்டுமென யாத்திரை நடத்தினார். இப்போது பூமியை காக்க வேண்டுமென்று பயணம் செய்துள்ளார். ஆனால் அவர் யானை வழித் தடங்களை அழித்து, வன நிலங்களை ஆக்கிர மித்து ஆசிரமம் அமைத்துள்ளார். பழங்குடி மக்க ளின் நிலங்களையும் சட்ட விரோதமாக அப கரித்துள்ளார். மறுபுறத்தில் தன்னை இயற்கை யின் பாதுகாவலர் போல காட்டிக் கொள்கிறார். ஆனால் எளிய பழங்குடி மக்கள் இயற்கையின் பாதுகாவலர்களாக விளங்குகின்றனர்.

மணல் கடத்தலில் பிரபலமான சேகர் ரெட்டி என்பவர் திருப்பதி கோவிலில் அறங்காவல ராகவும் இருக்கிறார். இந்த நிலையில் நதிக் கரைகளில் யாகங்கள் நடத்துவதால் மட்டும் அவற்றை பாதுகாக்க முடியாது. ஆளுநர் தேவையில்லாமல் சுற்றுச்சூழல் பாதுகாப்பை சனாதனத்தோடு முடிச்சுப் போட்டு குழப்ப வேண்டாம்.

;