headlines

img

காஷ்மீர் ரோஜாவை கசக்கிப் பிழிவதா?

காஷ்மீர் வளர்ச்சிக்கு எதிரான தடைகள் நீக்கப்பட்டுவிட்டன என்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி கூறி யுள்ளார். ஆனால் காஷ்மீருக்கு செல்வதற்கு கூட தேசத் தலைவர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.  கடந்த சில வாரங்களாகவே காஷ்மீர் மக்கள் மனதில் அச்சத்தை விதைத்து, ராணுவத்தை குவித்து தன்னுடைய அராஜகத் திட்டத்தை அரங் கேற்றியுள்ளது மோடி அரசு.அரசியல் சாசனத்தின் 370வது மற்றும் 35ஏ சட்டப்பிரிவுகளை ரத்து செய்வது என மத்திய அமைச்சரவையில் முடி வெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் அறிவிக்கப் பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி தங்களுக்குள்ள பெரும்பான்மையை கொண்டு இதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது. ஒரே தீர்மானத்தின் மூலம் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் சிதைக் கப்பட்டு, இரண்டாகப் பிரிக்கப்பட்டு, யூனியன் பிரதேசங்களாக சுருக்கப்பட்டுள்ளன.  இதற்கு அங்கு கடும் எதிர்ப்பு எழும் என்ற காரணத்தால் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முக்தி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், கலைக்கப்பட்ட சட்டப் பேரவையின் உறுப்பினருமான தோழர் முகமது யூசுப் தாரிகாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தோழர் யூசுப் தாரிகாமி எங்கே வைக் கப்பட்டிருக்கிறார் என்ற தகவல் கூட வெளியே சொல்லப்படவில்லை. அவரது உடல்நிலை கடு மையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை யாரும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இந்தநிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா ஆகியோர் தாரிகாமி மற்றும் கட்சியின் தோழகளையும் மக்களையும் சந்திக்க ஆளுநருக்கு தகவல் தெரிவித்துவிட்டு ஸ்ரீநகர் சென்ற நிலையில் காஷ்மீருக்குள் கால் வைக்க அனுமதி மறுக்கப்பட்டு, அந்த இரு தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஜனநாயக விரோத போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.  காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் தன்னுடைய சொந்த மண்ணிற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கைது செய்யப்படவில்லை என உள் துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் கூறிக்கொண்டிருக்கும் போதே தான் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதை அவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். 

காஷ்மீர் பகுதியில் தற்போது முழு அமைதி நிலவுவதாக மோடி பெருமைப்பட்டுக் கொண்ட நிலையில், ஜம்மு- காஷ்மீர் பகுதியே திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவும், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படையும் மக்களை அச்சுறுத்தி இயல்பு வாழ்க்கையிலிருந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ரோஜா மலரை கசக்கிப் பிழிவது போல காஷ்மீர் மக்களை யும், தேசத்தின் ஜனநாயகத்தையும் வதை செய்யும் மோடி, அமித்ஷா வகையறாவின் செயல்கள் விபரீதங்களுக்கே வாசல் திறந்துவிடும்.

;