headlines

img

மாசும் - மறுப்பும்

இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசு காரணமாக 2017ஆம் ஆண்டில் மட்டும் 12லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பான ‘கிரீன் பீஸ்’ கூறியிருப்பது எளிதில்கடந்துவிடக்கூடிய ஒன்றல்ல. அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சுகாதாரநிறுவனமான ‘கிரீன் பீஸ்’ சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் மாசு அதிகம் உள்ள நகரங்களில் தில்லி முன்னிலை வகிப்பதாக கூறியுள்ளதும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒன்று.மோடி அரசு வழக்கம்போல் இதையும் மறுத்துள்ளது. இந்தியாவில் பதற்றத்தை உருவாக்கவே இத்தகைய முடிவுகள் வெளியிடப்படுவதாகவும் சுற்றுச்சூழல் காரணமாக உடல்நல பாதிப்பு ஏற்படுவது உண்மைதான் என்ற போதும்12 லட்சம் பேர் உயிரிழந்ததாக கூறப்படுவதை ஏற்கமுடியாது என்று அவர் கூறியுள்ளார்.உலக அளவில் சுற்றுச்சூழல் மாசுகுறித்துபல்வேறு ஆய்வறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக இந்த அமைப்பை முடக்குவதற்கு மத்திய உள்துறை தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் இந்த அமைப்பின் பதிவு ஒரு முறை ரத்து செய்யப்பட்டது. 

இந்தியாவில் உள்ள 168 நகரங்களும் காற்று மாசுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், இதில் தில்லி முதலிடம் வகிக்கிறது என்றும் அந்தஅமைப்பு கூறியிருந்தது. மேலும் காற்று மாசுப்பாட்டால் ஜிடிபி 3 சதவீதம் சரிகிறது என்றும் அந்த அமைப்பு கூறியிருந்தது. இந்த பின்னணியில்தான் அந்த அமைப்பை முடக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மத்தியில் உள்ள மோடி அரசு பின்பற்றும் சுற்றுச்சூழல் கொள்கை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், இயற்கை மற்றும் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு எதிராகவுமே இருந்து வந்துள்ளது.தூத்துக்குடியில் இயங்கும் ஸ்டெர்லைட் ஆலை நிறுவனத்திற்கு ஆதரவாக மோடி அரசும்,அவர்களது வழிகாட்டுதலின்படி தமிழக அரசும்எடுத்துவரும் நடவடிக்கைகள் அவக்கேடானவை. நீர், நிலம், காற்று என அனைத்தையும் மாசுப்படுத்தி மனிதர்கள் மற்றும் விலங்குகள், தாவரங்களின் அழிவுக்கு காரணமாக உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 

ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தாகுழுமத்திற்கு ஒட்டுமொத்த காவிரி படுகையையும் தாரைவார்க்க ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் அந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஆற்று மணல் அள்ளப்படுவதால் பெரும்பாலான ஆறுகள் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதும், பெரும் தொழிற்சாலைகள் ஏற்படுத்தும் காற்று மற்றும் நீர் மாசும் இந்திய மக்களின் வாழ்க்கைக்கு சவால் விடுகின்றன. ‘கிரீன் பீஸ்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையை முற்றாக நிராகரிப்பதற்கு பதில் அதில் உள்ள விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு மக்களது உயிரை காப்பாற்ற உரியநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் இந்தியா என்ற நாடு இனி வரலாற்றில் மட்டுமே இருக்கும் நிலை ஏற்படும்.

;