headlines

img

குறைகளை செவி மடுத்தல் ஆகாதா?

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய எட்டு பேர் கொண்ட மத்தியக்குழு சென்னை வந்தது. ஞாயிறன்று இரண்டு பிரிவாகபிரிந்து ஆய்வு மேற்கொண்டது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் புயல் பாதிப்பை பார்வையிட்டு ஆய்வு நடத்தியது.ஆனால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நேரடியாக குறைகளை அந்தக்குழு கேட்கவில்லை. அதனால் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். புயல், வெள்ளம் போன்ற பேரிடர் பாதிப்புகளை பார்வையிட வரும் மத்தியக்குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் ஏற்கெனவே மாநிலஅரசு நிர்வாகம் திட்டமிட்டபடி சில இடங்களைபார்வையிடுவதும் ஆய்வு நடத்துவதும் சேதத்தின் அளவை குறித்துக் கொள்வதும் வாடிக்கையாக உள்ளது. ஆனால் அந்த பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர்களுடைய கருத்துக்களை, பாதிப்புகளை தெரிந்து கொள்ள முயற்சிப்பதே இல்லை. அதன் விளைவாகவே பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிடுவது தவிர்க்க இயலாமல் நடைபெறுகிறது.

இந்த நிவர் புயலால் பல இடங்களில்குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதை மத்தியக்குழு பார்வையிடவில்லை. சம்பந்தப்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள், வீடியோக் காட்சிகள் ஆகியவற்றை மட்டுமே மத்தியக்குழு பார்வையிட்டு சென்றதாக பொதுமக்கள் புகார் கூறினர் என்றுசெய்திகள் தெரிவிக்கின்றன. மத்தியக்குழு தமிழகம் வந்திருப்பது சுற்றுலா தளங்களை பார்வையிடுவதற்காக அல்ல, பேரிடர் பாதிப்புகளை பார்வையிடுவதற்காகவே என்பதை மனதில் கொண்டு அந்தக்குழு செயல்பட வேண்டும் என்பது முக்கியமானது. ஆய்வுமுடிந்தவுடன் அரசின் சார்பில் வைக்கப்படும் கோரிக்கையை மட்டும் கேட்டுக் கொள்வது அல்ல.அவ்வாறு மத்தியக்குழுவிடம் மாநில அரசால்கேட்கப்படும் உதவியையும், முழுவதுமாக மத்திய அரசு வழங்குவதுமில்லை.இதற்கான உதாரணங்கள் ஏராளம் உள்ளன. கடந்த காலங்களில் ஏற்பட்ட வர்தா புயல்,ஒக்கி புயல், கஜா புயல் போன்றவற்றால் ஏற்பட்டபாதிப்பை சரி செய்வதற்கு நிவாரண உதவி நிதியாக தமிழக அரசால் கேட்கப்பட்ட நிதியுதவியில் அதிகபட்சம் 20 சதவீதமே மத்திய அரசால்வழங்கப்பட்டிருக்கிறது.

அப்படியானால் தமிழகஅரசு தரும் சேத மதிப்பு விபரம் தவறானதா?இல்லை, மத்தியக்குழுவினர் பார்த்து மதிப்பிட்டதுதான் சரியானதா? ஒரே சேதத்துக்குரிய மதிப்புவெவ்வேறாக அமையுமா? நிவர் புயலின் பாதிப்பு பற்றிய விபரங்களை அறிவதற்காக மத்தியக்குழு இரண்டு வாரம்கழித்து வந்திருக்கிறது. ஆனால் அதற்குள் அடுத்த புயலான புரெவி அதன் பாதிப்பு தடத்தைபதித்துச் சென்றுவிட்டது. இந்த பாதிப்பை மாநிலஅதிகாரிகள் குழு பார்வையிட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால்  முந்தைய புயலின் பாதிப்பை ஆய்வு செய்யும் மத்தியக்குழு எப்போது தனது பரிந்துரையை மத்திய அரசிடம் வழங்கும், அது எப்போது மாநில அரசுக்கு நிதியுதவியை வழங்கும். மத்திய அரசு உடனடியாக குழுவை அனுப்புவதும், சேதத்தை மதிப்பிடுவதும், நிவாரண உதவியை உடனடியாக வழங்குவதுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாக இருக்கும். காலம்கடந்து வழங்கும் எந்த உதவியும் தாகத்துக்கு உதவாத தண்ணீரை போன்றதாகவே இருக்கும்.  
 

;