headlines

img

இது நல்லதல்ல

ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த வாக்கெ டுப்பில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்க ளித்துள்ளதற்கு பல தரப்பினரும் அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்துள்ளனர். ஐ.நா.வில்  இஸ்ரேல் தொடர்பாக நடந்து வந்த பல்வேறு வாக்கெடுப்புகளில் இந்தியா நடுநிலை வகித்துள்ளது அல்லது பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இஸ்ரேலை எதிர்த்து வாக்களித்து வந்துள்ளது.  நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேலின் இன வெறிக் கொள்கைக்கு எதிராகவுமே இந்தியா வின் அயல்துறை கொள்கை அமைந்து வந்துள்ளது. ஆனால் மத்தியில் மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு அமெரிக்க வல்லரசுக்கு ஆதரவாக அயல்துறை கொள்கையிலும் மாற்றம் செய்யப்பட்டது. அமெரிக்காவின் இளைய கூட்டாளி போலவே இந்தியா செயல்பட துவங்கியது. இதன் நீட்சியாகவே இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா  வாக்களித்துள்ளது. 

பாலஸ்தீனத்தில் செயல்பட்டு வரும் “ஷாகித்”  என்ற அமைப்பு ஐ.நா.வில் தங்களை கண்கா ணிப்பு அங்கத்தினராக சேர்க்க வேண்டுமென கோரிக்கை வைத்தது. ஆனால் இது ஒரு பயங்கரவாத அமைப்பு என்று கூறி இஸ்ரேல் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக நடந்த வாக்கெடுப்பில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், இங்கிலாந்து ஆகிய நாடு களோடு இணைந்து இந்தியாவும் இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.  மறுபுறத்தில் சீனா, ரஷ்யா, எகிப்து, மொராக்கோ, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக வாக்களித்துள்ளது.  இந்தியா தங்களுக்கு ஆதரவாக திசை மாறியுள்ளது குறித்து இஸ்ரேல் புளகாங்கிதம் அடைந்துள்ளது. தெற்காசியாவில் தங்களுக்கு ஆதரவு கிடைத்திருப்பது நல்லதொரு துவக்கம் என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் துணை தூதர் மயா கடோஷ் கூறியுள்ளார். மத்திய பாஜக  அரசு பல்வேறு தருணங்களில் இஸ்ரேல் குறித்து மென்மையான அணுகுமுறையையே பின்பற்றி யது. தற்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக பகிரங்க மாக வாக்களித்துள்ளது பாலஸ்தீன மக்களின் தாயகத்திற்கான போராட்டத்திற்கு எதிரான தாகும்.

மேற்காசிய பகுதியில் அமெரிக்காவின் அடியாள் போலவே செயல்பட்டு வரும் இஸ்ரேல் ஒரு அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்று முத்திரை குத்துவது கேலிக்கூத்தானது. இஸ்ரே லின் அனைத்து செயல்பாடுகளும், தாக்குதல்க ளும் பயங்கரவாத பாணியிலேயே அமைந்துள் ளன. மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்து இனவெறியோடு செயல்படும்  இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு திரும்பியிருப்பது உள் நாட்டில் இவர்கள் பின்பற்றி வரும் கொள்கை யின் விரிவாக்கமே ஆகும். இந்தியா பாரம்பரியமாக பின்பற்றி வந்த சுயேச்சையான அயல்துறை கொள்கையை கை கழுவத் துவங்கியிருப்பது எந்த வகையிலும் நம் நாட்டிற்கு பலனளிக்காது. இந்த போக்கு நல்லதல்ல.

;