headlines

img

இலவச ரேசன் தொடர வேண்டும்

தமிழகத்தில் மார்ச் 24ஆம் தேதி முதல் பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலை யில் இதுவரை ஆறு முறை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்துப் பகுதி மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் ரூ.7,500 ரூபாயாவது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு ஏற்கவில்லை. ஒருமுறை மட்டும் அரிசி அட்டை தாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டது. அடுத்து பொது முடக்கம் நீட்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டும் ரூ.1000 வழங்கப்பட்டது. 

ஓரளவு பட்டினிச் சாவை தடுத்து வருவது ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படும் இலவச பொருட்களே ஆகும். ஆனால் அதிலும் மாநில அரசு பல்வேறு குளறுபடிகளை செய்து வருகிறது. ஜூன் மாதம் வரை மட்டுமே இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில் ஜூலை 1 மற்றும் 2 தேதிகளில் பலர் பணம் கொடுத்து ரேசன் பொருட்களை வாங்கினர். அதன் பிறகுதான் ஜூலை மாதமும் இலவசமாக ரேசன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கெ னவே பணம் கொடுத்து வாங்கியவர்களுக்கு அந்தத் தொகையை திருப்பித் தருவது குறித்து தெளிவான அறிக்கை எதுவும் இல்லை.

இந்நிலையில் ஜூலை மாதம் மட்டுமே இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என்றும் அதன் பிறகு நீட்டிக்கப்படாது என்று மாநில அரசு கூறியுள்ளது. நவம்பர் மாதம் வரை யில் இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்கப் படும் என்று மத்திய அரசு கூறியுள்ள நிலையில் இது முரண்பாடாக உள்ளது. 

மத்திய அரசு அறிவித்துள்ள இலவச ரேசன் பொருட்கள் தமிழகத்தில் எவ்வாறு வழங்கப்படு கிறது என்பது குறித்து பல்வேறு குழப்பங்கள் உள்ளன. இந்நிலையில் ஜூலை மாதம் வரை மட்டுமே ரேசன் பொருள் இலவசமாக தரப்படும் என்ற மாநில அரசின் அறிவிப்பு ஏழை, எளிய மக்களை கடுமையாகப் பாதிக்கும். பொது ஊரடங்கு எப்போது முடியும் என்று தெரியாத நிலையில் இலவச ரேசன் பொருட்களையும் நிறுத்துவது என்பது தவறான ஒன்றாகும். 

இந்நிலையில் பொது முடக்கம் நீடிக்கும் வரை ரேசன் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். குறைந்தபட்சம் டிசம்பர் மாதம் வரை யிலாவது ரேசன் பொருட்களை இலவசமாக வழங்கவேண்டும். மேலும் குடும்பத்திற்கு ரூ.7,500 ரூபாய் ஆறு மாத காலத்திற்காவது வழங்க மாநில அரசு முன்வர வேண்டும். 

தமிழகத்தின் நிதித் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசிடம் வாதாடி, போராடி தேவை யான நிதியை பெற வேண்டும். மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தை 200 நாட்களாக உயர்த்துவதோடு, கூலியாக ரூ.600 வழங்க வேண்டும். இத்திட்டத்தை பேரூராட்சி மற்றும் நகர்ப்புறங்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும். இதை விடுத்து பொது முடக்கம் குறித்த அறி விப்பை வெளியிடுவதோடு தன்னுடைய கடமை முடிந்து விட்டதாக மாநில அரசு கருதக் கூடாது.

 

;