headlines

img

அடிமாடுகள் - வரத.ராஜமாணிக்கம்

மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஜல்லிக்கட்டு நடந்து கொண்டிருந்தது. வாடி வாசலில் இருந்து முட்டி மோதிக்கொண்டு வந்த பாண்டித்துரையின் காளையை இளவட்டம் யாரும் நெருங்க முடியவில்லை. முத்துவுக்கு முன்புறம் நின்ற நண்பன் மருது துணிச்சலாய் முன்னேறினான். அடுத்த நொடி காளை அவனைத் தூக்கி வீசியது.

காளையைத் தொட மாடுபிடி வீரன் ஒருவன் கூட தயாராக இல்லை. காளையும் அந்த இடத்தை விட்டு நகர்வதாக தெரியவில்லை. “இது காளை இல்லப்பு பாண்டித்துரையோட வேங்கைப் புலி வெளயாட வந்துருக்கு பிடிக்க வேணாம் திமிலைத் தொட்டுக் காட்டு ஒரு பவுன் தங்கக் காசு” என்ற தொகுப்பாளரின் சீண்டலில் முத்துவுக்கு சூடேறியது. கூட்டம் காளைக்கு ஆதரவாக கைதட்டி விசிலடித்தது. பாண்டித்துரை மீசையை முறுக்கி விட்டார்.
“ஏப்பு பிடிக்கிறீகளா இல்ல காளை ஜெயிச்சிருச்சுன்னு அறிவிக்கட்டுமா?” என தொகுப்பாளர் உசுப்பியது, தார்க்குச்சியால் புட்டத்தில் குத்தியது போல முத்துவுக்கு பொத்துக் கொண்டு வந்தது. அதே நேரத்தில் தடுப்புக் கட்டை அருகே விழுந்து கிடந்த மருது “டேய் முத்து விடாதடா” என குரல் கொடுத்தான்.

முத்து சக்தி அனைத்தையும் திரட்டி கண்ணிமைக்கும் நேரத்தில் காளையின் திமிலை எட்டி தவ்விப் பிடித்தான். காளையின் கால்கள் முன்னும் பின்னும் துள்ளி முத்துவை ஆக்ரோசமாக உதறப் பார்த்தது. முத்துவுக்கு தட்டாமலை சுற்றுவது போலிருந்த போதும் பிடித்த பிடியை விடவில்லை. காளை களத்தை விட்டு ஓட ஆரம்பித்தது.

காளை பிடிபட்டது. உசுரக் கொடுத்து காளையைப் பிடிச்ச வீரன் முத்துவுக்கு ஒரு தங்கக் காசு, ஏப்பா ஏ.. முத்து மேல வாப்பா” என தொகுப்பாளர் அழைத்ததும் கரகோசம் விண்ணைப் பிளந்தது. முத்து ஓடோடி மேடை ஏறினான். அவனைத் தடுத்து நிறுத்திய  பாண்டித்துரை, “ஏண்டா யார்றா நீ, கண்ட சாதிப்பய கைய வைக்கவா நான் காளைய வளத்தேன். எவன்டா இவன களத்துல எறக்குனது” என தொகுப்பாளரிடம் போட்ட சத்தம் மைதானம் முழுக்க ஒலிபெருக்கியில் எதிரொலித்தது.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத முத்து ஆவேசத்துடன் மாவட்ட ஆட்சியரையும் காவல்துறை அதிகாரிகளையும் பார்த்தான். அவர்கள் அடிமாடுகளைப் போல தலையை தொங்கப் போட்டிருந்தனர்.

;