headlines

img

ஆப்பசைத்த குரங்கு அரற்றி என்ன பயன்?

மகாராஷ்டிராவில் தங்களுடைய சதித் திட்டம் நிறைவேறாத நிராசையில் வாலறுந்த நரி போல புலம்புகிறது பாஜக. பல்வேறு மாநிலங்க ளில் முறையற்ற வகையில் ஆட்சியமைத்து அதன் காரணமாகவே “சாணக்கியப் பட்டம்” பெற்ற அமித்ஷா மகாராஷ்டிராவில் அதிகா ரத்தை கைப்பற்ற எதிரெதிரான சித்தாந்தங்கள் கொண்ட கட்சிகள் கூட்டு சேர்ந்துள்ளன என்று குமுறியுள்ளார்.

மகாராஷ்டிரத்தில் பாஜக இரவோடு இரவாக மேற்கொண்ட சித்து வேலைகளில் கொஞ்சம் கூட கூச்சப்படாமல் ஆளுநர், குடியரசுத் தலைவர் பதவியையும் பயன்படுத்தியவர்கள்தான் இவர் கள். தங்களால் ஆட்சியமைக்க முடியவில்லை என்ற ஆத்திரத்தில் ஜனாதிபதி ஆட்சியை பிரகட னம் செய்து சட்டமன்றத்தை முடக்கிவைத்தனர். 

அஜித்பவார் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி, பெரும்பான்மையை நிரூபிக்க எந்த வாய்ப்பும் இல்லாத நிலையில் ஆளுநர் பாஜகவைச் சேர்ந்த பட்னாவிஸ்க்கும், அஜித் பவாருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் மிகப் பெரிய அளவில் குதிரைப் பேரத்தை நடத்தி கர்நாடக, கோவா பாணியில் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்ற அவர்களின் திட்டம் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் தவிடு பொடியானது.

மகாராஷ்டிராவில் நீதி நெறிமுறைகள் சிதைக் கப்பட்டுள்ளன என்று அமித்ஷா கூறுகிறார். நீதி நெறிமுறை குறித்து பேசுகிற எந்த அருகதையும் இவர்களுக்கு இல்லை. எந்தளவுக்கு கீழிறிங்கி னாலும், ஜனநாயக மரபுகளை குலைத்தாலும் பர வாயில்லை. ஆட்சியை கைப்பற்றினால் போதும் என்பதை  மட்டுமே தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டவர்கள் தற்போது தங்களது முயற்சி தோல்வியடைந்ததால் நீதி நெறிமுறை என்றெல் லாம் பேசுவதில் ஏதாவது அர்த்தம் உண்டா? அப்படியே பார்த்தால் காங்கிரசும், தேசிய வாத காங்கிரசும் இணைந்து தேர்தலை சந்தித்த நிலையில், தேசியவாதக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித்பவாரை இழுத்து ஆட்சியமைக்க பாஜக முயல்வது என்ன சித்தாந்தம்? இதில் என்ன நீதி நெறிமுறை இருக்கிறது? 

அஜித்பவார் தங்கள் பக்கம் வந்தவுடன் அவர் மீதான வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற்ற வர்கள் நீதி நெறிமுறைப் பற்றி பேசலாமா? 

பல்வேறு தருணங்களில் பாஜகவால் கையா ளப்பட்ட அணுகுமுறை இப்போது அவர்களுக் கெதிராக திரும்பியுள்ளதை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அரசியலில் இழிவான வேலைகளுக்கு, ராஜதந்திரம், சாணக்கியத்தனம் என்றெல்லாம் நாமகரணம் சூட்டிக் கொண்டு மகிழ்ந்தவர்கள், தாங்கள் வெட்டியக் குழியில் தாங்களே விழுந்துள்ளனர். பதவியை பிடிப்பது மட்டுமே சிந்தாந்தம் என்று கொண்டவர்கள் சித்தாந்தம் பற்றியெல்லாம் பேசுவது கொடும்புலி காருண்யம் பற்றி பேசு வதற்கு ஒப்பாகும்.

;