வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியிருக்கிறது. விலைகள் மிகக்கடு மையாக அதிகரித்துள்ளன. எவ்வளவு விலை கொடுத்தாலும் பொருட்கள் இல்லை என்ற நிலையும் உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட கடனில் மூழ்கும் நிலைக்கு இலங்கை சென்றுவிட்டது. வாழ வழியில்லாமல் அங்கிருந்து தமிழகத்திற்கு தப்பிச் செல்ல வாய்ப்பு கிடைக்குமா என்று ஏராளமானோர் காத்திருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
இலங்கையில் மஹிந்தா ராஜபக்சேவும் அவரைத் தொடர்ந்து அவரது சகோதரர் கோதபாய ராஜபக்சேயும் ஆட்சி நடத்தி வருகிறார்கள். சிறுபான்மை தமிழ் மக்களுடைய நலன்களை மட்டுமல்ல; யாருக்காக தங்களது ஆட்சி நடக்கிறது என்று இவர்கள் கூறினார்களோ அந்த பெரும்பான்மை சிங்கள மக்களின் நலன்களும் சூறையாடப்பட்டு, ஒட்டுமொத்த இலங்கை மக்களும் தற்போது அன்றாடத் தேவைகளுக்காக வீதிகளில் அலைந்து திரியும் அவலத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
எல்லா நாடுகளிடமும் வலுவாக கடன் வாங்கி யிருக்கிறது இலங்கை. எந்தக் கடனையும் திருப்பிச் செலுத்த முடியவில்லை. இந்த நிலையில் சமீப மாதங் களாக நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பும் வேகமாக, கணிசமாக குறைந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் 2.31 பில்லியன் டாலர் அளவிற்கே மிகக் குறைவாக இருந்தது; அதுவும் தற்போது 70 சதவீதம் கரைந்து போனது. அந்நியச் செலாவணி கையிருப்பைப் பாதுகாப்பதற்காக 2020 மார்ச் மாதத்தில் இலங்கை அரசு பெரிய அளவிற்கு பொருட்கள் இறக்குமதிக்கு தடைவிதித்தது. ஆனால் இது அந்நாட்டிற்கு பாதகமாகத் திரும்பியது. பெருமளவு இறக்குமதி பொருள் களையே சார்ந்திருக்கும் பொருளாதாரம் என்பதால், இறக்குமதியை நிறுத்தியவுடன் உள்நாட்டில் உணவுப்பொருட்கள் உட்பட அனைத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. சில மாதங்களிலேயே உணவுப் பொருட்களின் விலை 25 சதவீதம் அளவிற்கு அதிகரித்தது. விலைகள் அதிகரித்த நிலையில் மக்களிடையே வாங்கும் சக்தி சில மாதங்களிலேயே முற்றிலும் வீழ்ச்சி அடைந்தது. அனைத்துப் பொருட்களின் விலைகளும் தொடர்ந்து அதிகரித்தவுடன் பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பிக்கத் துவங்கின. இது அடுத்தடுத்த விளைவுகளை தீவிரப்படுத்தியது. மொத்தப் பொருளாதாரமும் கிட்டத்தட்ட நின்று போன நிலையை உருவாக்கியது.
தற்போதைய நிலையில் 51 பில்லியன் டாலர் அளவிற்கு இலங்கையை வெளிநாட்டுக் கடன் கழுத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. பன்னாட்டு நிதி நிறுவனம், இலங்கை கடன் வலை யில் தொங்கிக் கொண்டிருக்கிறது எனக் குறிப் பிட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் உடனடியாக 4 பில்லியன் டாலர் அளவிற்கான பன்னாட்டுக் கடன்களை கட்டாயம் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் இலங்கை உள்ளது.
சீனா, இந்தியா போன்ற அண்டை நாடுகள் நட்பின் அடிப்படையில் அளித்த கடன்களால் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கின்றது இலங்கை. நவீன தாராளமயக் கொள்கைகளின் அதிதீவிரமான அமலாக்கமும் உள்நாட்டில் உற்பத்தியையும் வாங்கும் சக்தியையும் அதிகரிப்பதற்கு பதிலாக கிட்டத்தட்ட ராணுவ ஆட்சியை நடத்திய ஆட்சியாளர்களும்தான் இலங்கையின் இந்த கதிக்கு காரணம்.