கடந்த பத்தாண்டுகளாக இருந்ததைப் போன்று ஊழல் இல்லாத ஆட்சி தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளது உச்சக்கட்ட நகைச்சுவையாகும். பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் பேசிய அவர் நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசியதை அப்படியே மீண்டும் பேசியுள்ளார்.
பாஜக தனித்து 370 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறிய அவர் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் கடந்த முறை பெற்றதைவிட 370 வாக்குகள் அதிகம்பெற வேண்டும் என்று கூறி யுள்ளார். இது என்ன கணக்கு என்று தெரிய வில்லை. ஒரு வாக்குச்சாவடியில் 370 வாக்கு களுக்கும் குறைவாக இருந்தால் என்ன செய் வார்கள் என்று தெரியவில்லை. வாக்காளர் எண்ணிக்கையைவிட வாக்குப்பதிவு இயந்தி ரங்களை அதிகம் நிறுவும் திட்டம் எதையும் வைத்துள்ளார்களோ, என்னவோ?
கடந்த பத்தாண்டு காலத்தில் ஊழலே இல்லை என்று பிரதமர் கூறுகிறார். ஆனால் ரபேல் விமான பேர ஊழல், ஹிண்டன்பர்க் அம் பலப்படுத்திய அதானியின் மோசடி, சிஏஜி அம்பலப்படுத்திய ரூ.1லட்சத்து 75ஆயிரம் கோடி முறைகேடு, கொரோனா காலத்தில் துவக்கப் பட்ட பிஎம் கேர்ஸ் மோசடி என ஏராளமான ஊழல் புகார்களுக்கு உள்ளான ஆட்சிதான் இது. ஆனால் எந்தவொரு புகாரையும் முறையாக விசாரிக்காமல் தங்களை உத்தமர்கள் போல காட்டிக்கொள்கிறார்கள். உண்மையில் இவர்கள் ஊழலை ஒழிக்கவில்லை, ஒளிக்கிறார்கள்.
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களைக் குறி வைத்து ஏவல் நாயாக பாயும் அமலாக்கத் துறை போன்ற ஒன்றிய புலனாய்வுத்துறை அமைப்புகள் பாஜக ஆளும் மாநிலங்களில் பதுங்கிக் கொள்வதும் கூட ஊழலை மூடி மறைக்கும் வேலையன்றி வேறென்ன?
இந்தக் கூட்டத்தில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமரை விவசாயிகள் தங்கள் குடும்ப உறுப்பினராக கருதுகிறார்கள் என்று தனது பங்கிற்கு ஜோக் அடித்துள்ளார். வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது கொடூரமான அடக்குமுறையை ஏவிவிட்டது குடும்ப உறுப்பினர்களான விவசாயிகள் மீது மோடி கொண்ட பாசத்தின் காரணமாகவா?
இப்போதும் கூட தலைநகர் தில்லியில் விளைபொருளுக்கு நியாயமான விலை கேட்டு விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்கள் மீது டிரோன்கள் மூலமாக ரப்பர்குண்டு மழை பொழிவது உட்பட அடக்குமுறைகள் ஏவி விடப்படுகின்றன. தானியம் விதைத்து பசியாற்றும் விவசாயிகளை தடுக்க ஆணி விதைக்கும் ஆணவ ஆட்சி நடத்திக் கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பது போல நடிப்பதை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு, தான் இருக்கிறார்கள். வரும் தேர்தலில் ஏர்முனை உரிய தீர்ப்பை எழுதும்.