headlines

img

இருள் அகன்றிட புத்தாண்டே ஒளிர்க....

2020ஆம் ஆண்டு விடைபெற்று 2021ஆம்ஆண்டு பிறந்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு கடந்து செல்லும் ஆண்டில் உலக மக்கள் பெரும் துயருக்கு ஆளாகினர். கொரோனா எனும் பெரு நோய்த் தொற்று மனிதகுலத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கியது. எனினும் கடந்த காலத்திலும் இத்தகைய நோய்த் தாக்குதல்களை சந்தித்துக் கொண்டுள்ள மனிதஇனம் மருத்துவ அறிவியலின் துணை கொண்டு இந்தசவாலையும் வெற்றிகரமாக முறியடிக்கும் ஆண்டாக வரவிருக்கும் ஆண்டு அமையும் என்றநம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.

அம்மை, காலரா, இளம்பிள்ளைவாதம், பிளேக், ஸ்பெயின்புளு போன்ற கொடிய நோய்கள்கடந்த காலத்திலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமானோர் இந்த நோய்களுக்கு பலியாகியுள்ளனர். எனினும் மருத்துவத்தின் துணையோடு இந்த நோய்களை உலகம் சமாளித்து கடந்து வந்துள்ளது. ஒப்பீட்டளவில் கொரோனா நோய்த் தொற்று ஏற்படுத்தும் இறப்பு விகிதம் குறைவு என்றபோதும், அந்நோய் பரவும் வேகம் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலகம் முழுவதும் மருத்துவ அறிவியலாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டனர்.

உலகின் பல நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணி ஏற்கெனவே துவங்கிவிட்டது. உலக மக்கள்அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி தரப்பட்டு கொரோனாவுக்கு முற்றாக விடை தரும் ஆண்டாகவரும் ஆண்டு திகழ வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும் ஆகும். எனினும் மனிதர்களின் துன்ப துயரத்தையும், நோய்களையும் கூட பணமாக்கிட துடிக்கும் முதலாளித்துவமும், அதன்வளர்ப்புப் பிள்ளைகளான கார்ப்பரேட் முதலாளிகளும் மருத்துவத்தையும், தடுப்பூசியையும் கூடகாசாக்கிவிடவே துடிக்கின்றனர். நோய் தடுப்பும்  சிகிச்சையும் அனைவருக்கும் இலவசமாக, விரைவாக கிடைக்கச் செய்வதே உலகின் முன்னுள்ள பெரும் பணியாகும்.

பெருந்தொற்றின் ஆண்டாக அமைந்த 2020 மனிதகுலத்தின் முன்பு பல்வேறு கேள்விகளை எழுப்பிவிட்டு செல்கிறது. இயற்கையோடு இயைந்த வாழ்வே மனிதகுலத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை அழிப்பது, சுற்றுச்சூழலை கெடுப்பது, மனித இனத்தின் வாழ்வை மட்டுமல்ல, பூவுலகின் இருத்தலையே கேள்விக்குறியாக்கிவிடும் என்பதுதான் கடந்து செல்லும் ஆண்டு கற்பித்துள்ள மிகப் பெரிய பாடமாகும்.உலகின் பல்வேறு நாடுகள் குறிப்பாக வல்லரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் நாடுகள்ஏராளமான அழிவு ஆயுதங்களை குவித்து வைத்துள்ளன. ஆனால் கண்ணுக்குத் தெரியாதஒரு வைரஸ் தாக்குதலுக்கு மருந்து கண்டுபிடிக்கபல மாதங்கள் பிடித்தன. எனவே இனி மனித உயிர்களை மட்டுமின்றி, உலக உயிர்கள் அனைத்தையும் பாதுகாப்பதற்கான ஆய்வுகளுக்கே முன்னுரிமை தரப்பட வேண்டும். வெறுப்பு அரசியலுக்கு மாற்றாக சமாதானத்தையும், சமத்துவத்தையும் அடிப்படையாக கொண்ட உலக அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆயுதங்களை கொண்டு அளவிடப்படும் நாடுகளின் வல்லமை பின்னுக்குத் தள்ளப்பட்டு அன்பை, மானுடப் பண்பை அடிப்படையாக கொண்ட உலகம் அமைய வேண்டும்.

;