headlines

img

மனிதாபிமானமற்ற செயல்...!

கொரோனா தொற்றால் வேலையிழப்பு, வருமானம் குறைப்பு என மக்கள் பல்வேறு  நெருக்கடியில் உழன்று வருகின்றனர். இந்நிலையில் எரிகின்ற தீயில் எண்ணெய் வார்ப்பது போன்று; நெருக்கடியை  மேலும் அதிகரிக்கும் வண்ணம் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மோடி  அரசு தாறுமாறாக  உயர்த்தியிருக்கிறது. அதுவும் வழக்கத்திற்கு மாறாக 15நாட்களில் 100 ரூபாய் உயர்த்தியிருக்கிறது. இது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அனைத்து வீடுகளுக்கும் கேஸ் சிலிண்டரை கொண்டு சேர்க்கும் உஜ்வாலா  திட்டம் மாபெரும்வெற்றி என  மோடி தொடங்கி அனைத்து பாஜகவினரும் தம்பட்டம் அடித்தனர்.  ஆனால் அதுஎவ்வளவு பெரிய பித்தலாட்டம் என்பது சமீபத்தில்வெளியான மத்திய கணக்கு தணிக்கை துறையின்  அறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது. 2015-16ம் ஆண்டுகளில் இணைப்பு வைத்திருந்தவர்களின் சிலிண்டர் பயன்பாடு ஆண்டுக்கு சராசரியாக 6.27 சதவிகிதமாக இருந்தது. உஜ்வாலாதிட்ட அமலாக்கத்திற்கு பின்னர் பயன்பாட்டு சராசரி 5.6 ஆக குறைந்திருக்கிறது என ஏற்கனவேசிஏஜி அறிக்கை சுட்டிக் காட்டியிருக்கிறது.

அதே அறிக்கையில், இணைப்பு கொடுக்கப்பட்ட 56 லட்சம் பேர் கேஸ் இணைப்பு வாங்கியதோடு சரி. அதன் பிறகு மீண்டும் கேஸ் நிரப்பவேயில்லை. அதே போல் 13 லட்சத்து 96 ஆயிரம் இணைப்புகள் ஒரே மாதத்தில் 3 முதல் 41 முறைவரை மீண்டும் மீண்டும் எரிவாயுவை நிரப்பியிருக்கின்றனர். அப்படியென்றால் அது வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தாமல்  வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  இதே போல்மேலும் 10 லட்சம் இணைப்புகள் நம்பமுடியாத அளவிற்கு பயன்பாட்டில் இருக்கிறது என சிஏஜி தெரிவித்திருக்கிறது. அதாவது இந்ததிட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றிருக்கிறது என்பதை சுட்டிக் காட்டியிருக்கிறது. 

அதே போல் இணைப்பு வாங்கிய பின்னர்ஒரு கோடி பேர்; அதிகபட்சமாக 3 முறை மட்டுமேமீண்டும் எரிவாயுவை நிரப்பியிருக்கின்றனர். அதாவது  கேஸ்  விலை கட்டுப்படியாகாமல் மீண்டும் பழைய முறைக்கே திரும்பியிருக்கின்றனர். உஜ்வாலா திட்டம் குறித்து ஆய்வு செய்தமத்திய அரசு அமைத்த கிரிசில் நிறுவனம் கொடுத்த அறிக்கையும் ஏற்கனவே இதனை உறுதிப்படுத்தியிருக்கிறது. அதில் 83 சதவிகித மக்கள் கேஸ் விலையும் அதிகமாக இருக்கிறதுஎன தெரிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் மீண்டும் கேஸ் விலை உயர்வுஎன்பது நெருக்கடியை மேலும் கடுமையாக்கும்.பெரும்பான்மையான இந்தியர்கள் ஊட்டச்சத்து உணவை வாங்குவதற்கான நிதி வசதிஇல்லாதவர்களாகவும், வறுமையிலும் துன்பத்திலும் தள்ளப்பட்டிருக்கின்றனர். இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல்  மறுபுறம்  மோடி அரசுசாதாரண மக்கள் மீது மென்மேலும் சுமைகளை ஏற்றி வருகிறது. இந்நிலையிலும் பிரதமரோ சொகுசு விமானம், புதிய நாடாளுமன்றம் எனஆடம்பரங்களை நிறைவேற்றிக் கொள்வதிலேயே குறியாக இருக்கிறார். இது  மோடி அரசின்கொடூரமான மனிதாபிமானமற்ற செயல் ஆகும்.உடனே எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்.

;