headlines

img

சபாநாயகர் தேர்தலும், எதிர்க்கட்சித் தலைவர் தேர்வும்

மக்களவை சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த ஓம்பிர்லா மீண்டும் தேர்வு செய்யப் பட்டுள்ளார். 48 ஆண்டுகளுக்கு பிறகு சபா நாயகர் பதவிக்கு தேர்தல் நடந்துள்ளது. இந்தியா  கூட்டணியின் சார்பில் காங்கிரசைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் கொடிகுன்னில் சுரேஷ் வேட்பா ளராக நிறுத்தப்பட்டார். 

இத்தகைய போட்டி ஏற்பட்டதற்கு பாஜகவே பொறுப்பு. சபாநாயகர் பொறுப்பை ஆளும் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் அல்லது ஐக்கிய ஜனதா தளத்திற்கு தர வேண்டும் என்பதை பாஜக ஏற்கவில்லை. கூட்டணி ஆட்சியாக இருப்பதால் சபாநாயகர் பாஜகவை சேர்ந்த வராக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தனர். 

கடந்த நாடாளுமன்ற மக்களவையில் துணை சபாநாயகர் பொறுப்பு யாருக்கும் வழங்கப்படவில்லை. பொதுவாக எதிர்க்கட்சி வரிசைக்கு இப்பொறுப்பு வழங்கப்படுவது வழக்கம். இதனால் அந்த பதவியையே காலியாக வைத்திருந்தது பாஜக. 

இம்முறை போட்டியில்லாமல் சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும் என பாஜக தரப்பில் கோரப்பட்ட நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினருக்கு துணை சபாநாயகர் பொறுப்பு வழங்கப்படவேண்டும் என இந்தியா கூட்டணி முன்வைத்த கோரிக்கையைக் கூட பாஜக ஏற்காத நிலையில்தான் போட்டி மூலம் சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பதவியேற்ற முதல் நாளிலேயே சபாநாயகர் ஓம்பிர்லா எவ்வித முன்னறிவிப்புமின்றி அவசர நிலை காலத்தை கண்டிக்கும் தீர்மானத்தை கொண்டு வந்தது சர்ச்சையாகியுள்ளது. அவசர நிலைக் காலம் என்ற இருண்ட காலம் கண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் நரேந்திர மோடி ஆட்சிக் காலம் என்பது பலவகையில் அறிவிக் கப்படாத அவசரநிலைக் காலமாகவே இருந்தது என்பதை மறந்துவிட முடியாது. அவையை சபாநாயகர் எந்த திசையில் நடத்திச் செல்ல முயல்கிறார் என்பதை இது வெளிப்படுத்துகிறது. 

இது ஒருபுறமிருக்க, மக்களவை எதிர்க் கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப் பட்டுள்ளார். இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இதற்கு ஒப்புதல் தெரி வித்துள்ளன. கடந்த நாடாளுமன்றம் போல அல்லாமல் எதிர்க்கட்சிகள் தரப்பிலும் கூட்ட ணிக் கட்சிகள் தரப்பிலும் பாஜக கடுமையான சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளை பாதுகாக்க இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. ஜனநாயக விரோத சட்டங்கள் நிறைவேற்றப்படுவதை தடுக்க எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம்.

;