headlines

img

சமூக நீதியை நிலை நிறுத்தும் அறிவிப்புகள்...

தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் நாள் ஆண்டுதோறும் சமூக நீதி நாளாககொண்டாடப்படும் என்றும் அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூக நீதிஉறுதி மொழி ஏற்கப்படும் என்றும் சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்க ஒன்று.

ஒன்றிய அரசு சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில், தமிழக அரசு சமூக நீதியைஉயர்த்திப் பிடிப்பதும், அந்த கோட்பாட்டிற்காகவே தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த பெரியார் பிறந்த நாளில் உறுதி மொழி ஏற்பதும் இன்றைய சூழலில் மிகவும் பொருத்தமான ஒன்று. பெரியாருடைய பெருந்தொண்டும், பேருழைப்பும், கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாலும் கூட பெரிதும் மதிக்கப்படுகிறது. அவரை நாத்திகர் என்று மட்டும் அடையாளப்படுத்தி விட முடியாது. பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்ணுரிமை, மூடத்தனங்களுக்கு எதிர்ப்பு என பன்முகம் கொண்டவர் பெரியார். இவை அனைத்தையும் ஒருமுகப்படுத்தி அவரை கொண்டாடுவது என்பதுஅவர் முன்னெடுத்த கொள்கைகளை தொடர்ந்து பின்பற்ற உறுதியேற்பதாகவே அமையும். 

விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டிருந்தார். தமிழக தொழிற்சங்க இயக்கத்தின்முன்னோடிகளில் ஒருவரும், சுதேசி பொருளாதாரத்தை கம்பீரமாக முன்னெடுத்தவருமான வ.உ.சி.யை கொண்டாடுவது என்பது பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்பதாகவும், தொழிலாளர்களின் உரிமைகளை உயர்த்தி பிடிப்பதாகவும் அமையும். இன்றைய நவீன தாராளமயசூழலில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் ஒன்றிய அரசால் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன.  தொழிலாளர் சட்டங்கள் அனைத்தும் திருத்தப்பட்டு போராடி பெற்ற உரிமைகளும், சலுகைகளும் பறிக்கப்படுகின்றன. இந்நிலையில் வ.உ.சி.யின் தியாகமும், வழிகாட்டுதலும் இந்தியா முழுமைக்கும் உதவும். 

தமிழகம் என்றென்றும் நன்றியுடன் கொண்டாடப்பட வேண்டிய பேராளுமைகளில் ஒருவர் அயோத்திதாசர். சமூக நீதிக்கான போராட்டத்தின் முன்னோடியாக விளங்கும் அவர், மொழிக்கும், சமூக சீர்திருத்தத்திற்கும் அளித்துள்ள பங்களிப்பு மகத்தானவை. அவரது நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது.பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாக கொண்டாடுவதை சட்டப் பேரவையில் பாஜகவும்வேறு வழியின்றி வரவேற்றுள்ளது. ஆனால் சந்தடிசாக்கில் பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் பெரியார் கொள்கையும், பாஜகவின் கொள்கையும் ஒன்றே என்று கூறியிருப்பது நகைப்புக்குரியது. பெரியார் முன்மொழிந்த அத்தனை கொள்கைகளுக்கும் முற்றிலும் நேர் எதிரானது பாஜக. இன்றும் கூட அந்த பரிவாரத்தின் தலைவர்கள் பெரியார் மீது வெறுப்பை கக்கி வருகின்றனர். பெரியார் சிலை மீது காவிச் சாயம் பூசி மகிழ்ந்தவர்கள் அவரது கொள்கையின் மீதும், காவிச் சாயம்பூச முயல்கின்றனர். ஆனால் அது நடக்காது.

;