தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள தமிழக நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கை கடந்த பத்தாண்டு காலத்தில் நிதித்துறையில் தமிழகம் சந்தித்து வந்துள்ள கருப்புப் பக்கங்களை வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக அமைந்துள்ளது. வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் வட்டிக்கு கடன் வாங்கிபிறகு வட்டி செலுத்துவதற்காகவே கடன் வாங்கும் நிலைமை ஏற்பட்டதை வெள்ளை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.தமிழக அரசு நாளொன்றுக்கு ரூ.87.31 கோடி வட்டியாக செலுத்துகிறது என்றும், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன் சுமை சுமத்தப்பட்டுள்ளதையும், தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதையும் வெள்ளை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
ஜனநாயகம் என்பது நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் மட்டுமல்ல; உள்ளாட்சி மன்றங்களும் ஜனநாயகத்தின் பிரிக்க முடியாத பகுதியாகும். ஆனால் உள்ளாட்சித் தேர்தலை உரிய காலத்தில் அதிமுக அரசு நடத்தாததால் மாநிலத்திற்கு ரூ.2,577 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசிடமிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய வரி பாக்கி, பேரிடர் நிவாரண நிதி போன்றவற்றில் பெரும் இடைவெளியும், பள்ளமும் ஏற்பட்டுள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் கிடைக்கவேண்டிய நிதியும் கிடைக்காமல் போயிற்று.
வரியில்லா பட்ஜெட் என்று தடபுடலாக அறிவிக்கப்படும்; ஆனால் இதன் உண்மையான பலன் ஏழை மக்களுக்கு கிடைப்பதில்லை. கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் லாபமடைகின்றன என்று அறிக்கை தெளிவாக்கியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் வரியில்லாமல் அரசு நடத்த முடியாது என்றும் அறிக்கை கூறுகிறது. நேர்முக வரியை அதிகப்படுத்தி மறைமுகவரியை குறைப்பதன் மூலம்தான் பெரும்பகுதிமக்கள் பலன் பெற முடியும். ஆனால் ஒன்றிய பாஜக கூட்டணி அரசும் சரி, மாநில அரசும் சரி, நேர்முகவரியை குறைத்து மறைமுக வரியை அதிகப்படுத்துவதிலேயே முனைப்பாக உள்ளன. இந்நிலையில் வெள்ளை அறிக்கையின் பின்னணியில் மறைமுக வரியை குறைத்து, நேர்முக வரியை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கையில் திமுக அரசு ஈடுபடும் என்று எதிர்பார்ப்பது இயல்பே.
கடந்த பத்தாண்டுகளில் ஒன்றிய அரசிடமிருந்து கிடைக்கும் வரிவருவாய் 33 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது என்றும், தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக உள்ளது என்றும் வெள்ளை அறிக்கை கூறுகிறது. ஆனால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய வரி பாக்கி உள்ளிட்டவற்றை பெறுவதில் அதிமுகஅரசு அக்கறை காட்டவில்லை. திமுக அரசு அதற்கான அழுத்தத்தை தர வேண்டும். மானியங்களுக்கு செலவிடப்படும் தொகை உரியவர்களை சென்று சேர வேண்டும் என்பது சரியே ஆயினும்மானியங்களை குறைப்பதாக இருந்து விடக்கூடாது. அதேபோல போக்குவரத்து, மின்சாரம் போன்ற முக்கியத்துறைகள் பொதுத்துறையாக தொடர்ந்திட வேண்டும். அதன்மூலமே பெரும்பகுதி மக்கள் பலன் பெறுவார்கள். இதை வெறும் நஷ்டக்கணக்காக மட்டும் பார்க்கக்கூடாது. மக்கள்பயன்பாட்டுடன் லாபகரமாக நடத்திட வேண்டும்.