இன்று (ஜன.27) ஒரு வரலாற்று முக்கியத்து வம் வாய்ந்த நாள். 212 நாட்கள் நீடித்த உறுதியான போராட்டத்திற்குப் பிறகு, சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் (சிஐடியு) தனது சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இது வெறும் தொழிற்சங்கப் பதிவல்ல - இது தொழி லாளர் வர்க்கத்தின் உறுதியின் வெற்றி!
45 நாட்களில் வழங்கப்பட வேண்டிய பதிவை தடுக்க பல்வேறு சக்திகள் கைகோர்த்தன. ஆனால் நமது தொழிலாளர்களின் ஒற்றுமையும், சட்டப் போராட்டத்தின் உறுதியும் இறுதியில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி காட்டுவது என்ன? எவ்வளவு பெரிய பன்னாட்டு நிறுவனமாக இருந்தாலும், தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை மறுக்க முடியாது என்பதைத்தான்!
நமது அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய தொழிற்சங்க உரிமை என்பது காகிதத்தில் மட்டு மல்ல - அது ஒவ்வொரு தொழிலாளியின் கண்ணி யத்திற்கான உத்தரவாதம். இந்த வெற்றி வெறும் சாம்சங் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல - இந்தி யாவில் உள்ள அனைத்து பன்னாட்டு நிறுவனங்க ளின் தொழிலாளர்களுக்கும் ஒரு நம்பிக்கை ஒளி!
வழக்கறிஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் என பலரும் கைகோர்த்த இந்த வெற்றி காட்டுவது - தொழிலா ளர் போராட்டம் என்பது தனிமனித போராட்ட மல்ல, அது சமூக நீதிக்கான கூட்டுப் போராட்டம்!
இன்று பெற்ற இந்த வெற்றி, நாளை வரும் சவால்களை எதிர்கொள்ள நமக்கு வலிமை தரும். தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், அவர்களின் குரல் ஒடுக்கப்படக் கூடாது என்ற போராட்டம் தொடரும்! சாம்சங் தொழிலாளர்களின் வெற்றி, தொழிலாளர் வர்க் கத்தின் ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு!
இந்த வெற்றி நமக்கு கற்றுத் தரும் மற்றொரு முக்கிய பாடம் - அரசின் நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பதுதான். தொழிலாளர் நல னுக்கும் முதலாளித்துவ நலனுக்கும் இடையே அரசு நடுநிலை வகிக்க வேண்டும் என்பது போலி யான வாதம். அரசின் முதன்மைக் கடமை தொழி லாளர் நலனைப் பாதுகாப்பதுதான். 212 நாட்கள் காத்திருக்க வைத்த இந்த அவலம் இனி எப் போதும் நேரக்கூடாது!
கைத்தொழில் புரட்சி முதல் டிஜிட்டல் புரட்சி வரை - உழைப்பின் வடிவங்கள் மாறலாம், ஆனால் தொழிலாளர் உரிமைகள் மாறக்கூடாது. சாம்சங் தொழிலாளர்களின் இந்த வெற்றி, வரும் காலங்க ளில் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வழி காட்டியாக இருக்கும். அவர்களின் உரிமைப் போராட்டங்களுக்கு ஊக்கமளிக்கும்!
வாழ்க தொழிலாளர் ஒற்றுமை! வளர்க தொழிற்சங்க இயக்கம்!