மதுரையில் உள்ள போட்டித் தேர்வுகளுக்கான படிப்பக வளாகம் குறித்து பாராட்டு தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்திக்கு சு.வெங்கடேசன் எம்பி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது;
கடந்த இரண்டு ஆண்டுகளாக மதுரையில் மாணவர் படிப்பு வளாகத்தை, மதுரை மாநகராட்சியின் உதவியோடு உருவாக்கி நடத்தி வருகிறோம். ரோட்டரி மதுரை மிட் டவுன் கம்யூனிட்டி டிரஸ்ட் சார்பாக மதன் தலைமையிலான குழு இதனைச் சிறப்பான முறையில் பராமரித்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 600 க்கும் மேற்பட்ட போட்டி தேர்வர்கள் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். நாள் தோறும் காலை 4 மணிக்கு இந்த வளாகம் திறக்கப்படுகிறது.
அந்த அதிகாலையிலேயே மாணவர்கள் உள்ளே வரக்காத்திருப்பார்கள். இரவு 11 மணிக்கு வளாகம் மூடப்படுகிறது. அந்த கடைசி நிமிடம் வரை படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் பலருண்டு.
இது போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கான இடம், அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுப்பதே நமது நோக்கம் என்ற உறுதியோடு இதனை உருவாக்கினோம்.
எண்ணற்ற இடையூறுகள், சவால்கள் வந்துள்ளன. அனைத்தையும் சமாளித்து இதனை முன்னெடுத்துச் செல்கிறோம். நல்ல செயல்களைச் செய்தால் அதனை ஆதரிக்க அநேகர் நம் சமூகத்தில் உண்டு என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை எமக்கு உண்டு. இந்த மாணவர் படிப்பக வளாகத்திலும் அந்த நம்பிக்கை மேலும் வலிமையடைந்துள்ளது.
திறந்த வெளி பூங்கா ஒன்றில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பகல் முழுவதும் படித்துக்கொண்டிருக்கும் காட்சியைப் பார்த்துச் செல்லும் ஒவ்வொருவருக்கும் நம் சமூகத்தின் மீதும், இளம் தலைமுறையினர் மீதும் உருவாகும் நம்பிக்கை மிகப்பெரியது. இங்கு வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் குறிப்பேட்டில் பலரும் மிகச்சிறப்பான குறிப்புகளை எழுதியுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வளாகத்தைப் பார்வையிட்டுள்ள சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையின் நீதிபதி மாண்பமை. புகழேந்தி அவர்கள் கீழ்கண்டவாரு எழுதியுள்ளார். “மிகச் சிறந்த முன்முயற்சி. மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் இருக்கும் போதும் இங்கு சுமார் 600 மாணவர்கள் தினசரி வருகிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் மற்றும் இந்த மையத்தின் நிர்வாகி மதனுக்கு எனது பாராட்டுகள். ஒரு டிஜிட்டல் படிப்பு மையத்தை உருவாக்கவும் மாணவர்களுக்கு மாதிரித் தேர்வு நடத்தும் சாத்தியங்களையும் நிர்வாகிகள் ஆராயலாம். வாழ்த்துகள்” என்று எழுதியுள்ளார்.
நீதிபதி புகழேந்தி எழுதிய குறிப்பு
மாண்பமை நீதிபதி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் எப்பொழுது வந்து இந்த வளாகத்தைப் பார்வையிட்டீர்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. பார்வையாளர் குறிப்பேட்டில் நீங்கள் எழுதிச் சென்றுள்ளதைப் பார்த்த பின் தான் நீங்கள் வந்து சென்றதை நாங்கள் அறிந்துகொண்டோம். நல்ல செயல்களைப் பொறுப்போடு முன்னெடுக்கும் பொழுது நல்ல மனிதர்கள் அனைவரும் அதற்குத் துணை நிற்பார்கள் என்பதை உங்களின் எழுத்துகள் எங்களின் கரம் பற்றி சொல்கிறது. உங்களுக்கு எங்களின் அன்பான நன்றி. நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போன்று மாணவர்களுக்காக மின்னணு நூலகத்தை உருவாக்கவும், மாதிரித் தேர்வுகளை நடத்தவும் முயற்சியை மேற்கொள்வோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.