articles

img

பிளவுக்கு இட்டுச்சென்ற பிரச்சனைகளின் பின்னணி

பிளவுக்கு இட்டுச்சென்ற பிரச்சனைகளின் பின்னணி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்தாவது அகில இந்திய மாநாடு (1958) நடந்த மூன்று ஆண்டுகளில் ஆறாவது மாநாடு விஜயவாடாவில் கூடியது. அதற்கிடையே உட்கட்சி உறவுகள் மிகவும் மோசமடைந்தன. மாநாட்டிற்கு வந்திருந்த பிரதி நிதிகள் திட்டவட்டமான இரண்டு முகாம்களாகப் பிரிந்திருந்தனர். இரண்டு முகாம்களிலிருந்துமே மாறுபட்டிருந்த சிறியதொரு சிறுபான்மை பிரிவும் இருந்தது. பகைமையும் வெறுப்பும் கலந்தவிவாதங்கள் நடந்ததைக் காண சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரதிநிதிக்குழு ஒன்றும் வந்திருந்தது.  ஐந்தாவது, ஆறாவது மாநாடுகளுக்கு இடையே அரசியல் களத்தில் மிக முக்கியமான மாற்றங்கள் நடந்திருந்தன. காங்கிரசின்பால் கம்யூனிஸ்ட் கட்சியின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதில் இரு மாறுபட்ட கருத்துக்கள் நான்காவது மாநாட்டில் வெளிப்பட்டது அல்லவா? அந்தக் கருத்து மோதல் சற்றும் தணியாமல் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் அந்த அரசியல் மாறுதல்கள் ஏற்பட்டன. 

இந்திய-சீன உறவில் சீர்குலைவு  

ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிப் போக்கு. சீன-இந்திய உறவுகள் சீர்குலைந்ததாகும். இருநாடுகளுக்கும் இடையேயான எல்லைப் பிரச்சனைதான் விவகாரமாகியது. அது இந்திய சுதந்திரத்துக்கும் சீன மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கும் முன்னதாகவே இருந்த விவகாரம்தான்.  ஆரம்பத்தில், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கும் அன்றைய சீன அரசுக்குமிடையே அந்த தாவா ஏற்பட்டிருந்தது. பிரிட்டிஷ் அரசின் நிலையை சுதந்திர இந்தியாவின் காங்கிரஸ் அரசும் தொடர்ந்து கடைப்பிடித்தது. சீனாவின் கம்யூனிஸ்ட் அரசும் கூட, அதற்கு முந்தைய சீன அரசுகளின் அதே அணுகுமுறையுடனேயே பிரச்சனையைக் கையாண்டது.  புதிய சூழ்நிலையில் இந்திய அரசும் சீன அரசும் நட்புறவுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தன என்ற போதிலும்கூட, பிரிட்டிஷ்-இந்திய அரசின் நிலையிலேயே இந்திய அரசு உறுதியாக இருந்தது. இது 1959இல் வெடித்த எல்லை மோதல்களுக்கு இட்டுச் சென்றது.  சீன ராணுவம் பாரம்பரியமாக ஒப்புக் கொள்ளப்பட்ட எல்லைகளை மீறி இந்தியாவுக்குள் ஊடுருவிவிட்டதாக நேரு அரசு குற்றம் சாட்டியது. அதை மறுத்த சீன அரசு, அதன் முந்தைய ஆட்சியாளர்களின் வாதங்களையே வலியுறுத்தியது.  

இடதுசாரிகள் மீது குற்றச்சாட்டு  

கட்சிக்குள் இருந்த வலதுசாரிகள் இப்பிரச்சனையில் இந்திய அரசின் நிலையைக் கட்சி முழுமையாக ஆதரிக்க வேண்டும் என்று வாதிட்டனர். இடதுசாரிகள் என்ன கூறினர் என்றால் இந்தியா, சுதந்திரமடைந்துள்ள, புதிதாக சீன மக்கள் அரசு அமைக்கப்பட்டுள்ள புதிய பின்னணியில் இந்தப் பிரச்சனைக்குப் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். ‘இடது கம்யூனிஸ்ட்டுகள்’ சொந்த நாட்டின் நலன்களுக்கு எதிராக, சீனாவுக்கு உடந்தையாக நிலை எடுத்ததாக வலதுசாரிகள் கூறினர். வலதுசாரிப் பிரிவினர் எழுப்பிய இந்தக் குற்றச்சாட்டுக்கு முதலாளித்துவ அரசியல் தலைவர்களும் பத்திரிகையாளர்களும் பரவலான விளம்பரம் தந்தனர்.  

உலக இயக்கத்தில்  இரண்டு பகைமுகாம்கள்  

கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் சோவியத்தின் தலைமையிலும் சீனாவின் தலைமையிலுமாக உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இரண்டு பகை முகாம்கள் உருவெடுத்தன. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி தனது 20ஆவது மாநாட்டிலிருந்தே கடைப்பிடித்துவந்த கொள்கைகளை சீனக்கட்சி கடுமையாக விமர்சித்தது. சோவியத்தின் குருச்சேவ் தலைமையை “திருத்தல்வாதிகள்” என சீனக்கட்சி தாக்கியது; சீனக் கட்சியை முழுக்க முழுக்க “தனிமைக்குழுவாதிகள்” (அதிதீவிர வாதிகள் sectarians) என்று சோவியத் கட்சி தாக்கியது. இரண்டு நாடுகளிலிருந்தும் வெளியான கட்சிப் பத்திரிகைகள் இரு கட்சிகளின் தத்துவார்த்த சண்டைக்கான மேடைகளாக மாறின.  இது இந்தியக் கட்சியிலும் எதிரொலித்தது. கட்சித் தலைமையிலிருந்த வலதுசாரிகள் சோவியத் கட்சியின் அணுகுமுறையை மேற்கொண்டனர். இடதுசாரிகள் சீனக்கட்சியின் அணுகுமுறையின்பால் சார்பு காட்டினர். கட்சியின் மத்திய தலைமையில் இந்த இரண்டு பிரிவினருமே ஏறக்குறைய சமபலத்துடன் இருந்தனர்.  1960இல் மாஸ்கோவில் நடந்த உலக கம்யூனிஸ்ட் மாநாட்டில் பங்கேற்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய கட்சியின் ஐந்து உறுப்பினர் தூதுக்குழுவில் இரண்டு தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் இருந்தது.  

தேசிய அரசியலிலும் எதிரொலி

இந்தக் கருத்து வேறுபாடு சர்வதேச அளவோடு நின்றுவிடவில்லை. தேசிய அரசியலிலும் அதன் தாக்கம் இருந்தது. 1951ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்டு பின்னர் காலத்திற்கு ஒவ்வாததாக மாறிவிட்ட கட்சித் திட்டத்தை-சோவியத் கட்சியின் பார்வையுடனா அல்லது சீனக் கட்சியின் பார்வையுடனா எந்தக் கட்சியின் பார்வையுடன் புதுப்பித்து மீண்டும் உருவாக்குவது என்ற கேள்வி எழுந்தது. இவ்வாறாக, ஒரு புதிய கட்சித் திட்டத்தை உருவாக்குவதிலும் அதேபோல் நடப்பு அரசியல் அணுகுமுறைகளை உருவாக்குவதிலும் இரண்டு முரண்பாடான கருத்துக்கள் ஏற்பட்டன.   ஆறாவது அகில இந்திய மாநாட்டிற்கு முன்னதாக உட்கட்சி விவாதத்திற்கு ஒப்புக் கொள்ளப்பட்ட கட்சித் திட்ட நகலையோ அரசியல் தீர்மான நகலையோ கட்சியின் மத்திய தலைமையால் தயாரிக்க முடியவில்லை. வலதுசாரி, இடதுசாரி ஆகிய இரண்டு முகாம்களிலிருந்தும் ‘இரண்டு திட்ட நகல்களும் இரண்டு அரசியல் தீர்மான நகல்களும் வந்தன. அந்த இரண்டிலிருந்துமே சில அம்சங்களில் மாறுபட்ட மூன்றாவது நகல் ஒன்றும் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. (இந்த மூன்றாவது நகலைக் கொண்டு வந்தவர் இந்தக் கட்டுரையாளர்தான்.)  ஒரு நீண்ட, சச்சரவுமிக்க விவாதம் நடந்ததைத் தொடர்ந்து மாநாட்டில் கட்சித் திட்டம் அங்கீகரிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. அரசியல் தீர்மானத்தைக்கூட ஏகமனதாக அங்கீகரிக்க முடியவில்லை. விவாதத்தில் தலையிட்டு பொதுச் செயலாளர் அஜாய்கோஷ் பேசியது இரு தரப்பினருக்கும் ஏற்புடையதாக இருந்தது. அந்தப் பேச்சின் பொருத்தமான பகுதிகளையே மாநாட்டின் அரசியல் தீர்மானமாக நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.  இது ஒரு தற்காலிக சமரசமே என்பது வெளிப்படை. நடப்பு அரசியல் நிலைமையை மதிப்பிடுவதிலும், அதன் அடிப்படையான பொருளாதார நிலைமையைக் கணிப்பதிலும் இரண்டு மாறுபட்ட அணுகுமுறைகள் இருந்தன.  1951இன் திட்டத்திற்குப் பதிலாக புதியதொரு கட்சித் திட்டத்தை உருவாக்கும் விஷயத்திலும் அந்த வேறுபாடு தெளிவாக வெளிப்பட்டது.

 மோதல் கூர்மையடைகிறது  

இவ்வாறாக, அடிப்படையான திட்ட ஆவணத்தின் உள்ளடக்கங்கள் பற்றிய பிரச்சனையிலும், நடப்பு அரசியல் நிகழ்ச்சிப் போக்குகளை மதிப்பிடுவது மற்றும் புரிந்து கொள்வது பற்றிய பிரச்சனையிலும் இரண்டு முகாம்களாகப் பிரிந்ததோடு ஆறாவது மாநாடு முடிவடைந்தது.  தத்துவார்த்தம் மற்றும் நடைமுறை அரங்குகளில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான போராட்டம் கூர்மையாக வளரப் போகிறது என்பது தெளிவானது.  இத்தகைய சூழ்நிலையிலும் பின்னணியிலும் அடுத்த மாநாடு வரைக்கும் கட்சிக்குத் தலைமை தாங்குவதற்காக தேசிய கவுன்சில், மத்திய நிர்வாகக் குழு, மத்திய செயற்குழு முதலியன தேர்ந்தெடுக்கப்பட வேண்டியிருந்தது. இப்போது இந்த அமைப்புகளில் யார், யாரைச் சேர்க்க வேண்டும் என்ற பிரச்சனை உக்கிரமான மோதலுக்கு உள்ளாகியது.  முதலில் முன்மொழியப்பட்ட பெயர்கள், அதைத் தொடர்ந்து நடந்த விவாதங்களில் கடுமையான எதிர்ப்பையும் மறுப்பையும் கிளப்பிவிட்டன. கருத்தொற்றுமையுடன் ஒரு பெயர்ப் பட்டியலை வைப்பது சாத்தியமில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. இந்த நிலைமையைச் சமாளிக்க, கட்சியின் அமைப்புச் சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிகமான உறுப்பினர்களுடன் ஒரு தேசிய கவுன்சிலை அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.  இரவு முழுவதும் நடந்த ஒரு நீண்ட, இடையறாத விவாதத்துக்குப் பின்புதான், அமைப்புச் சட்டத்தில் அனுமதிக்கப் பட்டதைவிட அதிகமான உறுப்பினர்களுடன் ஒரு தேசிய கவுன்சிலையும், ஒரு நிர்வாகக் குழுவையும், ஒரு செயற்குழுவையும் தேர்ந்தெடுக்க முடிந்தது.  அதன் விளைவு-புதிய தேசிய கவுன்சிலும், மத்திய நிர்வாகக்குழுவும், செயற்குழுவும் ஒயாத உட்கட்சிப் போராட்டங்களின் களங் களாக மாறின. இரண்டு சமபலமுள்ள அணி கள் ஒரு தற்காலிக சமரச ஏற்பாட்டைச் செய்து கொண்டு தொடர்ச்சியாக மோதிக் கொள்கிற ஒருநிலைமைக்கு விஷயங்கள் சென்றன.  அதே சமரச ஏற்பாடு, அடுத்தடுத்த மோதல்களுக்கு வழிவகுத்தது. 1964இல் ஏற்பட்ட பிளவு இந்த நிகழ்ச்சிப் போக்குகளின் இயற்கையான உச்சகட்டமேயாகும்.