கூர் ஈட்டியை நெஞ்சில் நுழைக்கின்றீர்!
சிந்திய இரத்தம் உலரவில்லை - எங்கள்
செந்தமிழ் வாழ்வு மலரவில்லை!
இந்தியை இங்கே அழைக்கின்றீர்கள்! – கூர்
ஈட்டியை நெஞ்சில் நுழைக்கின்றீர்கள்!
தொளைபட்ட புண்கள் மறையவில்லை - எங்கள்
சுதந்திர எண்ணம் நிறையவில்லை!
நுளைபட்ட இந்திக்குப் பூமாலையா? - நாங்கள்
நோற்ற தவத்திற்குச் சாவோலையா?
கார்இருள் இன்றும் விடியவில்லை - எம்
காற்றளை இன்றும் ஒடியவில்லை!
தேர்மிசை இந்தி உயர்குவதோ? - எங்கள்
செந்தமிழ் அன்னை அயர்குவதோ?
எக்காளம் கொண்டிங்கே ஊதுகிறோம் - போர்
என்றென வீரர்கள் மோதுகிறார்!
தெக்காணம் எங்கும் எதிர்ப்பொலிகேள் - இதோ
தென்றமிழ் விடுதலை பெற்றிடும் நாள்!
நேற்றுப் பிறந்தோர் இந்திமொழி - நம்
நேரினில் நின்றே உருட்டும்விழி
கூற்றை எதிர்த்து வளர்ந்தநமை - ஒரு
கூகை எதிர்ப்பது தான்புதுமை!
சங்கம் அமர்ந்தது கற்பனையோ? - எங்கள்
தன்மானம் இன்றைக்கு விற்பனையோ?
அங்கம் பதறுது தோழர்களே - போர்
அணிகொண் டெழுவீர் வீரர்களே!
சுண்டைக்காய் நாடுகள் வாழ்கின்றன - நின்
தோள்கள் அடிமைக்குத் தாழ்கின்றன!
கண்டதுண்டோ இவ்வர லாற்றினை? - இரு
கண்பெற்றும் குருடெனஏன் மாற்றினை?
முத்தமிழ் மன்னர்கள் சோறளித்தார் - நம்
மூதாதை மாந்தர்க்கு வீறளித்தார்!
சித்தத்திற் பொங்கும் நெருப்பளித்தார் - நம்
செந்தமிழ் ஓங்கும் விருப்பளித்தார்!
ஓடும் குருதியில் கொப்புளிக்கும் - அணு
ஒவ்வொன்றும் தமிழ்என்று தான் ஒலிக்கும்!
ஏடு திறந்திடும் பார்; தரணி! - இதோ
எழுதுவீர் இன்றைக்கே போர்ப்பரணி!