headlines

img

வருவாயை பறித்துக் கொண்டு கடன் வாங்கச் சொல்வதா?

ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதால் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீட்டை சமாளிக்க மத்திய அரசு முன்வைத்துள்ள இரண்டு வாய்ப்புகளும்கடினமானவை என்று தமிழக முதல்வர் எடப்பாடிபழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் ஜிஎஸ்டி வரியினால் ஏற்பட்டுள்ள இழப்பீட்டை உடனடியாக வழங்கவேண்டுமென வலியுறுத்தின. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இழப்பீடு வழங்க மறுத்தார்.மாநில அரசுகள் சந்தைகளில் கடன் வாங்கிக்கொள்ளலாம் அல்லது சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் மாநிலங்கள் 2.35 லட்சம் கோடியை ரிசர்வ்வங்கியிடம் கடனாக பெற்றுக் கொள்ளலாம்
என்று ஆலோசனைகளை முன்வைத்தார்.

ஜிஎஸ்டி வரி முறை கொண்டு வரப்பட்டபோதுஇதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டைமுழுமையாக மத்திய அரசு வழங்கும் என்று கூறிவிட்டு தற்போது, எங்களால் தரமுடியாது தேவையானால் நீங்கள் கடன் வாங்கிக் கொள்ளுங்கள் என்று
மாநில அரசுகளை தள்ளிவிடுவது எந்த வகையில்நியாயம்?

கொரோனா மற்றும் ஊரடங்கினால் மாநில அரசுகளின் வரி வருவாயும், இதர வருவாயும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கான தொகையையும் மத்திய அரசு வழங்க மறுக்கிறது. மறுபுறத்தில் பிஎம் கேர்ஸ் என்ற பெயரில்தனியார் அறக்கட்டளையின் மூலம் பெரும் தொகைவசூலிக்கப்படுகிறது. இதற்கு தணிக்கையும் இல்லை. இந்த தொகையை மாநிலங்களுக்கு பிரித்துதர வேண்டும் என்று தமிழக முதல்வர் உட்பட பலமாநில முதல்வர்கள் வலியுறுத்திய போதும் மோடி கண்டு கொள்ள மறுக்கிறார்.

தமிழகத்திற்கு மட்டும் ஜிஎஸ்டி வரி இழப்பீடுபாக்கி ரூ.12,258 கோடி அளவிற்கு மத்திய அரசுதரவேண்டியுள்ளது. ஜிஎஸ்டி வரி கொண்டு வரப்பட்டபோதே இது மாநிலங்களை கடுமையாகபாதிக்கும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மாநிலங்களுக்கு உரிய பாக்கியைஉடனுக்குடன் கொடுத்து விடுவோம், இழப்பீட்டையும் கணக்கிட்டு கொடுத்துவிடுவோம் என்றுகூறிவிட்டு இப்போது கடன் வாங்கி சமாளியுங்கள்என்று கூறுவது அப்பட்டமான மோசடியாகும். பாஜக கூட்டணி ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் மத்தியில் அதிகாரம் குவிக்கப்பட்டு மாநிலங்களின் நிதி ஆதாரம் கொஞ்சம் கொஞ்சமாக மறுக்கப்படுகிறது. 

இந்திய பொருளாதாரத்தின் சீர்குலைவு பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பினால் மோசமாகி விட்டது என்று பலரும் எச்சரித்த நிலையில்தான் கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்குநடைமுறைக்கு வந்தது. இதனால் நிலைமை மேலும் மோசமானது. பெரும் பகுதி சுகாதார திட்டங்களை மாநில அரசுகள்தான் நிறைவேற்றவேண்டியுள்ளது. அவர்களுடைய வருவாய் வழிகளையும் அடைத்துவிட்ட மத்திய அரசு கடன் சுமையில் தள்ளாடிக் கொண்டிருக்கும் மாநில அரசுகளை கடன் வாங்கிக் கொள்ளுங்கள்  என்றுகைகழுவி விடுவது துரோகத்தின் உச்சமாகும். கூட்டாட்சி தத்துவத்தில் மத்திய அரசு எஜமானனும் அல்ல, மாநில அரசுகள் எப்போதும் கையேந்திநிற்க வேண்டியவர்களும் அல்ல என்பதை மத்தியஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.