மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் நிதி நிலை அறிக்கையில் நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் வரவேற்கத்தக்க அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் மாநில அரசின் கஜானா காலியாகிவிட்டநிலையில், ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்துவரும் பின்னணியில் மக்களின் நலனை கருத்தில்கொண்டு பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான துவக்கமாக இந்த நிதிநிலை அறிக்கைஅமைந்துள்ளது.
வேளாண் துறைக்கு சிறப்பு கவனம் செலுத்தும்வகையில் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது வரவேற்கத்தக்க ஒன்றாகும். அதேபோல உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 29 ஆயிரத்து 216 குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாஜக கூட்டணி அரசு பெட்ரோலிய பொருட்கள் மீதான வரிகளை தொடர்ந்து உயர்த்துவதன் மூலம் மக்கள் மீது பெரும் சுமையை சுமத்துகிறது. இந்த சுமைக்கான முழு பொறுப்பையும் ஒன்றிய அரசே ஏற்க வேண்டும் என்று நிதியமைச்சர் கூறியிருப்பது சரியானது. மாநில அரசுக்கு கிடைப்பது ஒப்பீட்டளவில் குறைவான வரியே என்ற போதும் பெட்ரோலுக்கான விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது நல்லது. இதேபோல டீசலுக்கான விலையும் குறைக்கப்படுமானால் பொது போக்குவரத்துக்கும், சரக்கு போக்குவரத்துக்கும் உதவியாக அமையும்.
மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கை மாநிலஉரிமைகளையும், மாணவர் நலனையும் பறிக்கக்கூடியதாக உள்ள நிலையில் மாநில கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என அறிவித்திருப்பதுமகிழ்ச்சிக்குரியது. அதேபோல சித்தா பல்கலைக்கழகம் குறித்த அறிவிப்பும் வரவேற்கத்தக்கது. தலைமைச் செயலகம் துவங்கி அனைத்து துறைகளிலும் தமிழை ஆட்சி மொழியாக பயன்படுத்துவதை வலுப்படுத்துவது, கீழடி, சிவகளை,கொடுமணல் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அகழ்வாய்வுகளை பாதுகாக்கப்பட்ட பகுதியாக்குவது, கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைத்தல், மீண்டும் செம்மொழி தமிழ் விருதுபோன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.ஊரக வேலைவாய்ப்பு நாட்களை 100 நாளிலிருந்து 150 நாட்களாக உயர்த்தி ஊதியமாக ரூ.300வழங்க ஒன்றிய அரசை வலியுறுத்தி அழுத்தம் தரவேண்டும். நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டம்செயல்படுத்தப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. பொது விநியோக முறையைசீரமைத்து பலப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளநிலையில் அரசு அதை உணர்ந்துள்ளதை பட்ஜெட் உணர்த்துகிறது. கொரோனா கொடுந்தொற்று பின்னணியில் மருத்துவத் துறைக்கான ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய வரிகள் மற்றும் கட்டண உயர்வு அறிவிக்கப்படாததும் ஆறுதல் அளிக்கக்கூடியது. மொத்தத்தில் நல்ல துவக்கம்... தொடரட்டும்.