headlines

img

கருப்பு நாள்

இந்திய ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி தத்துவத்தின் மீது இடியாய் இறங்கியிருக்கிறது ஜம்மு - காஷ்மீரின் மாநில அந்தஸ்தை பறிப்பது, அந்த மாநிலத்தை உடைப்பது, அரசியல் சாச னத்தின் பிரிவு 370வது  பிரிவை ரத்து செய்வது என்ற மோடி அரசின் முடிவு.   இந்திய அரசியல் சாசனத்தின்படி ஆட்சி நடத்திட பாஜக முயலவில்லை. மாறாக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கங்கள், திட்டங்க ளையே செயல்படுத்த முனைகிறது என்பதற்கு இன்றைய முடிவு மேலும் ஒரு உதாரணமாகும்.  ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பரிவாரங்கள்  ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை பறிக்க வேண்டுமென்றும், அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை ரத்து செய்ய வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளன. ஆட்சிக்கு வந்தபிறகு இதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தவுடன் படு பாதகமான மசோ தாக்களை நிறைவேற்றி வந்த மோடி அரசு, உச்சக்கட்ட தாக்குதலாக ஜம்மு - காஷ்மீர் மாநில மக்களை குறிவைத்து பழிவாங்கியுள்ளது. 

நாடு விடுதலை பெற்றதை தொடர்ந்து மத அடிப்படையில் பாகிஸ்தானுடன் செல்லாமல் மதச்சார்பற்ற இந்தியாவுடன் தங்களை உணர்வுப் பூர்வமாக காஷ்மீர் மக்கள் இணைத்துக்  கொண்டனர். தங்களது தனித்தன்மை சுதந்திர இந்தியாவில் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அவர்களது விருப்பத்தின்படியே அரசியல் சாச னத்தின் 370வது பிரிவின்படி சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. ஆனால் இதன்படியான உரிமை கள் கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கப்பட்டே வந்தன.  அந்த மாநில மக்களின் நம்பிக்கையை மீட்டெ டுக்கவும், தீவிரவாதிகளை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தவும் உருப்படியான எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக பாதுகாப்புப் படைகளின் மூலமாக மட்டுமே ஜம்மு - காஷ்மீர் மாநிலப் பிரச்சனைகள் பார்க்கப் பட்டன. 

இந்தப் பின்னணியில் தனது நெடுங்காலத்திய திட்டத்தை மோடி, அமித்ஷா வகையறா நிறை வேற்றிக் கொண்டுள்ள விதம் ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து அச்சம் கொள்ள வைக்கிறது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு ஏற்பட்ட இந்த கதி இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திற்கும் ஏற்படலாம். ஜனநாயகத்திற்கும், கூட்டாட்சிக்கும் எதிரான பாஜகவின் வெறியாட்டத்தை அதிமுக உள்ளிட்ட சில மாநிலக் கட்சிகள் ஆதரித்திருப்பது முற்றிலும்  அவக்கேடானது. அதிமுக கடந்த காலத்தில் பின்பற்றிய எந்தவொரு நிலைபாட்டையும் இப்போதைய அதிமுக பின்பற்றவில்லை. மாறாக, பாஜகவின் ஒரு பகுதி போலவே மாறி, மத்திய ஆட்சியாளர்களால் இழைக்கப்படும் அனைத்து அநீதிகளுக்கும் அதிமுக துணை போகிறது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அமைதி யையும், நிம்மதியான வாழ்க்கையையும் குழிதோண்டி புதைக்க முடிவு செய்த இந்த நாள் ஒரு கருப்பு நாளாகும்.