headlines

img

வானம் இருண்டால் வாழ்வேது

வானம் இருண்டால் வாழ்வேது?

இந்தியாவின் வானம் இருண்டு வருகிறது. இது வெறும் வானிலை மாற்றம் அல்ல – நம் நாட்டின் வளர்ச்சியை வழிநடத்தும் அரசியல் கொள்கைகளின் நிழல் தான் இது. ஆறு இந்திய விஞ்ஞானிகள் மேற்கொண்ட புதிய ஆய்வு,  கடந்த முப்பது ஆண்டுகளில் இந்தியாவில் சூரிய ஒளி நேரம்  கணிசமாகக் குறைந்துள்ளதை உறு திப்படுத்தியுள்ளது.

சூரிய ஒளி குறைவுக்கு முக்கியக் காரணம், தொழிற்சாலைகள், வாகனங்கள் மற்றும் பயோ மாஸ் எரிப்பிலிருந்து வெளியேறும் ஏரோசல் எனப்படும் நுண்துகள்கள் தான். இந்தத் துகள்கள் வளிமண்டலத்தில் படர்ந்து, சூரிய ஒளியைத் தடுத்துவிடுகின்றன. மும்பை, கொல்கத்தா, அமிர்தசரஸ் போன்ற நகரங்களில் அதிகபட்ச சரிவு பதிவாகியுள்ளது.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த ஏரோ சல்கள் தான் மேகங்களை அதிக நேரம் நீடிக்கச் செய்து, மழையைக் கொடுக்காமல் ஒளியைத் தடுத்து நிறுத்துகின்றன. சுருங்கச் சொன்னால்,  பெரும் நிறுவனங்களின் லாப நோக்கத்திற்காகப் புகைக்கப்பட்ட புகை மண்டலம் தான், இப்போது நம் எதிர்காலத்தின் ஒளியையே திருடி வருகிறது.

இந்தக் கரிய வானம் வெறும் சுற்றுச்சூழல் பிரச்சனை மட்டுமல்ல. சூரிய ஒளி குறைவதால், நமது உடலில் மிக முக்கியமான வைட்டமின் “டி” உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இது மக்களின் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியை யும் குறைக்கிறது. மேலும், இந்த மாசுபாடு கார ணமாக, இந்திய விவசாயத்தில் மகசூல் இழப்பும் ஏற்படுவதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

இந்த மோசமான நிலைக்கு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் கொள்கைத் தளர்வுகளும் மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. ‘ஈஸ் ஆஃப் டூயிங் பிஸினஸ்’ என்ற முழக்கத்தின் கீழ், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு  விதிகள் தளர்த்தப் பட்டன. நிலக்கரி சுரங்கம் போன்ற அபாயகர மான திட்டங்களுக்குக்கூட, பொதுமக்களின் கருத்துக் கேட்பு நேரம் குறைக்கப்பட்டது. இனி அதுவும் கூட வேண்டாம் என்றும் சட்டம் வருகிறது.

மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்குப் போ திய அதிகாரமோ, நிதி உதவியோ வழங்கப்படா மல், கார்ப்பரேட் நிறுவனங்களின் சுய அறிக்கை களை நம்பும் போக்கு ஊக்குவிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பின்னுக்குத் தள்ளி விட்டு, பெருநிறுவனங்களின் உடனடி முதலீட்டை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட இந்தக் கொள் கைகள், இப்போது நாட்டின் சூரிய ஆற்றல் இலக்குகளையும் பலி கொடுத்துள்ளன. 

காற்று சுத்தமாக இருந்தால், இந்தியாவின் சூரிய மின் உற்பத்தியை பல மடங்கு அதிகரிக்க முடியும் என்கிறது ஆய்வு. ஆனால், அரசு ஒரு புறம் இலக்கை அறிவித்துவிட்டு, மறுபுறம் ஒளியை மறைக்கும் மாசுபாட்டைக் கண்டு கொள்ளாமல் விடுவது முரணாகும். இந்தியா வுக்குத் தேவை கரிய வளர்ச்சியல்ல, பசுமை வளர்ச்சி. இந்தியாவின் கொள்கை முடிவுகள் கார்ப்பரேட் நலனிலிருந்து விலகி, மக்கள் நலனை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.