மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்ததால்தான் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கவில்லை என ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளிப்படை யாக ஒப்புக் கொண்டுள்ளார்.
சமக்ர சிக்சா அபியான் எனப்படும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு இந்தாண்டு வழங்கப்பட்டிருக்க வேண்டிய ரூ.573 கோடியை வழங்க மறுத்து மோடி அரசு முடக்கி வைத்துள்ளது. இந்த தொகையை வழங்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி யிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள தர்மேந்திர பிரதான் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்க வேண்டும் என கூறியிருந்தார். இதன் பொருள் மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை ஏற்றால்தான் ஒன்றிய அரசு நிதி தரும் என்பதுதான்.
கல்வித்துறையில் கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் சிறந்து விளங்குகின்றன. பாஜக ஆளும் மாநிலங்களை விட அனைத்து துறையிலும் சிறந்து விளங்கும் கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை ஒன்றிய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்கவில்லையென்றால் நிதி தர முடியாது என அடாவடி செய்வதும்ஆகும்.
தாய்மொழிக் கல்விக்காகவே புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்திருப்பதாக ஒன்றிய அமைச்சர் கூறுவது அப்பட்டமான பம்மாத்து வேலையாகும். புதிய கல்விக் கொள்கையை ஊன்றிப் படித்தால் சமஸ்கிருத மொழியை முன்னி றுத்துவதே அவர்களது நோக்கமாக உள்ளதை புரிந்து கொள்ள முடியும். இந்தி மொழி திணிப்புக் கூட ஒரு இடைக்கால ஏற்பாடே என தெளிவாகக் கூறுகின்றன.
இந்த லட்சணத்தில் புதிய கல்விக் கொள்கை சமத்துவம் மற்றும் வருங்காலச் சிந்தனை கொண் டது என்று ஒன்றிய கல்வியமைச்சர் அளந்து விடுகிறார். குலக்கல்வியையும், ஒரு வகையான குருகுலக் கல்வியையும் கொண்டு வர முயல்கி றது ஒன்றிய அரசு. தேர்வு என்ற பெயரில் மாண வர்களை அச்சுறுத்தி கல்விக் கூடங்களை விட்டு விரட்டும் கொள்கைக்கே அவர்கள் கல்விக் கொள்கை என பெயர் வைத்துள்ளனர்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் மதவெறி கொள் கைகளை திணிக்கவும், கல்வித்துறையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு முற்றாகத் திறந்து விடவும் வழிவகுப்பதே மோடி அரசின் கல்விக் கொள்கை. இதனை தமிழ்நாடு அரசு எதிர்ப்பது நூறு சதவீதம் நியாயமானது. இதைக்காரணம் காட்டி நிதி தர மாட்டோம் என மிரட்டுவது கூட்டாட் சிக் கொள்கைக்கும், அரசியல் சட்ட நெறி முறைகளுக்கும் முற்றிலும் எதிரானதாகும்.
இயற்கைப் பேரிடருக்குக் கூட நிதி ஒதுக்காத கல் நெஞ்சினராக இருக்கும் மோடி அரசு தமிழக கல்வித்துறையையும் சீரழிக்க முயல்கிறது. தமிழ்நாடு அரசு கேட்பது பாஜகவின் பணமல்ல, தமிழ்நாட்டு மக்கள் உள்பட ஒட்டு மொத்த இந்திய மக்களும் செலுத்தியுள்ள வரிப் பணத்தில் தன்னு டைய பங்கையே தமிழ்நாடு கேட்கிறது. இதை மறுக்க ஒன்றிய அரசுக்கு எந்த உரிமையும் இல்லை.