headlines

img

மந்திரப் பந்தும் அனுமனும்

மந்திரப் பந்தும் அனுமனும்

நான் கிராமத்தில் தொடக்கக் கல்வி படித்த போது தலைமையாசிரியர் மேஜையில் இருந்த உலக உருண்டையை முதலில் மந்திரப் பந்து என்று தான் கருதினேன். ஆனால் இப்போதைய சிறார்கள் இணையத்தில் தேடி தங்களுக்கு தேவையானதைக் கற்றுக் கொள்கிறார்கள் என்று ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திங்களன்று பேசும் போது கூறியிருக்கிறார்.

உண்மைதான். ஆனால் ஒன்றிய பாஜக ஆட்சியில் அமல்படுத்தப்படும் கல்விக் கொள்கை நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்லும் வகையிலேயே உள்ளது. அதை ஏற்றுக் கொள்ள வேண்டுமென கட்டாயப்படுத்துகிறது. ஏற்றுக் கொள்ளாவிட்டால் நிதி வழங்க மாட் டோம் என மாநிலங்களை வஞ்சிக்கிறது. குருகுலத் தில் படித்தவர்கள் நேரடியாக நுழைவுத் தேர்வு எழுதாமலேயே ஐஐடிகளில் சேர்ந்து படிக்கலாம் என்பதும் இந்த ஆட்சியின்  கல்வித்துறையின் பாரபட்சத்துக்கும் ஒருசார்புக்கும் சான்றாகும். இது தவிர பாடத்திட்டங்களில் வரலாறு, அரசி யல், மதச்சார்பின்மை ஆகியவற்றை சிதைப் பதும் முஸ்லிம் அரசர்கள், விடுதலைப் போராட் டம் போன்றவற்றை நீக்குவதும் என ஆர்எஸ் எஸ் - இந்துத்துவா கண்ணோட்டத்தைப் புகுத்தி அரசியல் சட்ட விழுமியங்களுக்கு விரோதமா கவே நடந்து கொள்கிறது.

இந்நிலையில் தான் அமைச்சர் ராஜ்நாத்சிங், நமது தாய் மண் பண்டைக் காலம் முதலே கல்வி யில் சிறந்து விளங்கி வந்தது என்றும் சிறார்கள் உடல் அளவில் மட்டுமல்லாது மனதளவில் ஆன்மீக வழியில் வளர வேண்டும் என்றும் கூறி யிருக்கிறார். இங்கே எல்லாமே இருந்தது என்னும் பெருமிதத்தில் புராணக் கற்பனைகளை எல்லாம் அறிவியல் நிகழ்வாக மாணவர்கள் மத்தியில் மட்டு மல்லாது, அறிவியலாளர்கள் மத்தியிலும் கூறுவ தும் அதுபற்றி ஆய்வு செய்திட தாராளமாக நிதி ஒதுக்குவதும் பாஜக ஆட்சியில் அதிகரித்து வருகிறது.

முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.பி.,யுமான அனுராக் தாக்குர், இமாச்சலப் பிரதேச மாநிலம் உனா நகரில் பள்ளி ஒன்றில் நடந்த கலந்துரை யாடலில் பேசும் போது, தனது விண்வெளி அறிவு மேதைமையை வெளிப்படுத்தியிருக்கிறார். விண்வெளிக்கு முதலில் சென்றது அனுமன் என கூறியிருக்கிறார். அது மட்டுமின்றி பாடப்புத்த கத்தை கடந்து நமது அறிவை விரிவு செய்ய வேண்டும் என்றும் நமது தேசம், நமது மரபு, நமது அறிவு ஆகியவற்றை பாருங்கள் என்றும் அறி வுரை கூறியிருக்கிறார்.

நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 51ஏ அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் நமது ஆட்சியாளர்க ளோ புராண, இதிகாசங்களின் கற்பிதங்களை விஞ்ஞானம் என்றும் உண்மை என்றும் போதிக்கி றார்கள். அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு - என்றார் பாவேந்தர் பாரதிதாசன். இவர்களோ சிந்திக்காதே, கதைகளையும் கற்பனைகளையும் நம்பு என்கிறார்கள். அறிவுக்குப் புறம்பான இவர்க ளின் கூற்றுக்களை புறம் தள்ளுவதே அறிவியல் பூர்வமானதாகும்.