தேர்தல் ஆணையத்தின் ‘ஜனநாயக’ நாடகம்!
இந்தியத் தேர்தல் ஆணையம் அறி வித்துள்ள தமிழ்நாடு, கேரளம், அசாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணை ஒருபுறம் இருக்க, வாக்காளர் பட்டி யலில் மேற்கொள்ளப்பட்ட ‘சிறப்பு தீவிர திருத்தம்’ (SIR) பெரும் சந்தேகங்களை எழுப்பி யுள்ளது. “தூய்மையான வாக்காளர் பட்டியலே ஜனநாயகத்தின் அடிப்படை” என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ‘முழக்க மிட்டுள்ள’ நிலையில், கள எதார்த்தம் அதற்கு நேர்மாறாக இருப்பதை பத்திரிகை ஆய்வுகள் அம்பலப்படுத்துகின்றன.
தேர்தல் ஆணையத்தின் இந்தத் ‘தூய்மைப் பணி’யில் லட்சக்கணக்கான பெண் வாக்கா ளர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளார்களா என்ற அச்சம் எழுகிறது. நாடு முழுவதும் சுமார் 51 கோடி வாக்காளர்களை உள்ளடக்கிய இந்த ஆய்வில், தமிழ்நாடு தவிர மற்ற அனைத்து முக்கிய மாநிலங்களிலும் வாக்காளர் பட்டி யலின் பாலின விகிதம் (Gender Ratio) கடுமை யாகச் சரிந்துள்ளது. குறிப்பாக பீகாரில் மட்டும் 65 லட்சத்திற்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன; அங்கே 1,000 ஆண்களுக்கு 907 ஆக இருந்த பெண்களின் எண்ணிக்கை 892 ஆகக் குறைந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் பாலின விகிதம் 945-லிருந்து 938 ஆகவும், ராஜஸ்தானில் 920-லிருந்து 911 ஆகவும் சரிந்துள் ளதோடு, அம்மாநிலத்தில் மட்டும் பெண் வாக்கா ளர்களின் எண்ணிக்கை 2.56 கோடியிலிருந்து 2.45 கோடியாகக் குறைந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 8.06 சதவீதச் சரிவு ஏற்பட் டுள்ளதோடு, பாலின விகிதம் 966-லிருந்து 956 ஆக வீழ்ந்துள்ளது. லட்சத்தீவில் வாக்காளர் எண்ணிக்கை 16.8 சதவீதம் குறைந்துள்ளது. அந்தமான் நிகோபார் தீவுகளில் பாலின விகிதம் 919-லிருந்து 979 ஆக உயர்ந்திருந்தாலும், மொத்த வாக்காளர் எண்ணிக்கை 18.28 சத வீதம் வரை சரிந்துள்ளது. திருமணம் அல்லது வேலை நிமித்தமாகப் பெண்கள் இடம் பெயர்வ தையே காரணமாகக் கூறி, அவர்களின் பெயர்க ளைப் பட்டியலில் இருந்து நீக்குவது பெண்களின் ஜனநாயக உரிமையைப் பறிக்கும் செயலாகும்.
தமிழகத்தில் மட்டும் பாலின விகிதம் 1,034- லிருந்து 1,044 ஆக உயர்ந்திருந்தாலும், இங்கும் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6.41 கோடியி லிருந்து 5.67 கோடியாக, அதாவது சுமார் 74 லட்சம் பேர் (11.5 சதவீதம்) பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தலைமைத் தேர்தல் ஆணையர் சொல்வது போல இது ஒரு “மாபெரும் ஜனநாயகப் பயிற்சி” என்றால், ஏன் இத்தனை முரண்பாடுகள்? எதிர்க்கட்சிகளின் நியாயமான கேள்விகளுக்குப் பதிலளிக்காமல், வன்முறையற்ற தேர்தல் நடத்துவோம் என்று மேடைக்கு மேடை பேசுவது கண்துடைப்பு நாட கமே அன்றி வேறில்லை. தேர்தல் ஆணையம் தனது நடுநிலைமையை மெய்ப்பிக்க வேண்டு மானால், நீக்கப்பட்ட வாக்காளர்களின் விப ரங்களை வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா?
