headlines

img

மீண்டும் எரியும் எரிபொருள் விலை....

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் மத்தியஅரசுக்கும் தொடர்பு இல்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை  நிலவரத்திற்கு ஏற்பவே எண்ணெய் நிறுவனங்கள் விலையை தீர்மானிக்கின்றன என்று நரேந்திர மோடி அரசு கூறுவது அப்பட்டமான மோசடி என்பது மீண்டும்மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி பெட்ரோல், டீசல் விலை தற்காலிகமாக உயர்த்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மே 4ஆம்தேதிக்கு பிறகு ஐந்தாவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 18 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை. கொரோனா பரவல் காரணமாக எரிபொருள் தேவை குறைந்துள்ளது. எனினும் ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்து கொண்டே போகிறது. 

தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்விலை சற்று உயர்ந்துள்ளது உண்மைதான். ஆனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்ட போதும், ஒரு முறை கூட இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதில்லை. மாறாக பல்வேறு வரிகளை உயர்த்துவதன் மூலம் விலை குறையாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. பல இடங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயைத் தொட்டுவிட்டது. திங்களன்று நிலவரப்படிதில்லியில் பெட்ரோல் விலை ரூ.91.53ஆகவும், மும்பையில் 97.86ஆகவும், சென்னையில் ரூ.93.38ஆகவும் இருந்தது. மகாராஷ்டிராவில் சில இடங்களில் பெட்ரோல் விலை ரூ.100 ஐ தொட்டுவிட்டது. 

பெட்ரோல் லிட்டருக்கு 21.58 ரூபாயும், டீசலுக்கு19.18 ரூபாயும் வரி உயர்த்தப்பட்ட பிறகு பெட்ரோல்,டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குஉயர்ந்துள்ளது. வரியை குறைப்பதன் மூலம் ஓரளவுமக்களுக்கு நிவாரணம் அளிக்க முடியும். ஆனால்மோடி அரசு அந்த ஆலோசனையை மூர்க்கத்தனமாக மறுத்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்துப்பகுதி மக்களும் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் முற்றிலும் முடங்கியுள்ளன.விவசாயம், நெசவு, மீன்பிடித் தொழில், சேவைத்துறை என அனைத்துதுறைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு குறைந்தபட்ச நிவாரணம்தரக்கூட மோடி அரசு மறுக்கிறது. மறுபுறத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் தண்டிப்பது போல தொடர்ந்து எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது.தேர்தலுக்கு முன்பு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டது.

சமையல் எரிவாயுவுக்கு தரப்பட்டு வந்த மானியமும் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுவிட்டது. உங்கள் பணம் உங்கள் கையில் என்ற கவர்ச்சியானவாசகத்தின் மூலம் மானியத்தை வங்கிக்கணக்கில் செலுத்துவதாக கூறிய மத்திய ஆட்சியாளர்கள் மானியத்தை நிறுத்திவிட்டனர். கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் மக்கள் வாழ வழியின்றி தவிக்கும் இந்த காலத்திலாவது வரிகளை குறைப்பதன் மூலம் எரிபொருள் விலையை குறைக்க முடியும். ஆனால் அதுகுறித்து பரிசீலிக்கக்கூட மனமின்றி ஆணவத்தின் உச்சியில் இருக்கிறது மோடி அரசு.